Skip to main content

பவாரியாக்கள்... பத்மாவத்... ராஜஸ்தானில் சாதி ஆதிக்கம்! முதல்வரைத் தெரியுமா #7

Published on 10/06/2018 | Edited on 18/08/2018

சாதி ஆதிக்கம் உச்சத்தில் உள்ள மாநிலங்களில் மிக முக்கியமானது ராஜஸ்தான். அதற்கு காரணம் கிராமங்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுமார் 78 சதவித மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். மீதியுள்ள 22 சதவிகித மக்களே நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். ராஜஸ்தான் மக்கள்தொகை சுமார் 7.5 கோடி. இதில் இந்துக்கள் 89 சதவிதம், மீதியுள்ள 11 சதவிகிதம் முஸ்லிம்கள், சமணர், சீக்கியர், கிருஸ்த்துவர் என்கிற வரிசையில் உள்ளனர். இந்துக்கள் தங்களது பழமையான கலாச்சாரத்தையும் பழக்கங்களையும் கடைபிடித்து வாழ்ந்து வருவது இங்கு அதிகம். காரணம், இங்கு கல்வியறிவு குறைவு. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இங்கு சராசரியை விட குறைவாக இருக்கிறது கல்வியறிவு பெற்றவர்கள் சதவிகிதம். அதோடு வறுமை, வேலைவாய்ப்பின்மை, மூடப்பழக்கவழக்கங்கள், குடிநீர்க்கு மணிக்கணக்கில் மக்கள் நடந்து செல்வது போன்றவற்றால் மக்கள் பின்தங்கியே வாழ்கின்றனர்.

 

ancient rajput family

ராஜபுத்திரர்கள்

 

ராஜஸ்தான் இந்துக்களில் ஜாட் சாதியினர் மற்றும் ராஜபுத்திரர்கள் என இரண்டு சாதியினர்தான் பெரும்பான்மை சாதியாக உள்ளனர். இந்த இரு சாதிகளில் ராஜபுத்திரர்களை விட ஜாட் சாதியினர் ஓரளவு அதிகமாக உள்ளனர். 1952ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 160 சீட்களில் 54 இடங்களில் ராஜபுத்திரர்கள் வெற்றி பெற்றனர். ஜாட் சாதியினர் 12 இடங்களில் வெற்றி பெற்றனர், பிராமணர்கள் 22 இடங்களில் வெற்றி பெற்றனர், முஸ்லிம்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றனர். 1957 தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. ராஜபுத்திரர்கள் வெறும் 26 இடங்களில் தான் வெற்றி பெற்றுயிருந்தனர், ஜாட் சாதியினரோ 23 இடங்களில் வெற்றி பெற்றுயிருந்தனர். ராஜபுத்திரர்களின் ஆதரவை விட ஜாட் சமுதாயத்தின் ஆதரவை காங்கிரஸ் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு ஆட்சியை பிடித்து வந்தது. ராஜபுத்திரர்களின் பெரும்பான்மை ஆதரவை பாஜக வைத்திருந்தது. ஜாட் சாதியினரின் ஆதரவை காங்கிரஸ் பெறுவதை உடைக்க பாஜக பெரும் முயற்சிகளை எடுத்தது.

ராஜஸ்தானில் உள்ள பட்டியல் சாதிகளில்  1 கோடியே 13 லட்சத்து சொச்சம் மக்கள் உள்ளனர். இதில் 59 சாதி உட்பிரிவுகள் உள்ளன. இந்த உட்பிரிவு சாதிகளில் அதிக மக்கள் தொகை கொண்டது மெக்வல், அதற்கடுத்தயிடத்தில் மேத்கர் உள்ளது. ஜாட் சமுதாயத்தினர், ராஜஸ்தான் முழுவதுமே பரந்து விரிந்து வாழ்கிறார்கள். அதிகபட்சமாக ஜய்சல்மார் மாவட்டத்தில் 47 சதவித மக்கள் ஜாட் சாதியினர். இப்படி எல்லா மாவட்டங்களிலும் 25 சதவிதத்துக்கும் குறையாமல் உள்ளனர்.

தற்போது உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் 36 பேர் ஜாட் சாதியினராவர். எம்.பிகளில் 8 பேர் ஜாட் சாதியினர். ஜாட் சமுதாய தலைவர்களில் ஒருவரான பராஸ் ராம் மதர்னா, பாஜகவில் முதல்வர் பதவியை எதிர்பார்த்தார். அவருக்கு பாஜக தலைமை வழங்கவில்லை. ஜாட் சமுதாயத்தை சேர்ந்த சரண்சிங், இந்தியாவின் ஐந்தாவது பிரதமராக இருந்தார்.

 

allauddin kiljee

அலாவுதீன் கில்ஜி

 

அடுத்து ராஜ்புத்கள் என்று அழைக்கப்படும் ராஜபுத்திரர்கள். அதற்கு அர்த்தம் ராஜாவின் மகன் என்பார்கள். ராஜபுத்திர சங்கங்கள்தான் பத்மாவத் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தப் பிரிவினர் ராஜஸ்தான் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள். வீரம் மிக்கவர்களாக இருந்தவர்கள் இவர்கள். ஒரு  காலத்தில் குஜராத், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான் பகுதிகளை ஒருங்கே தங்களது கட்டுப்பாடின் கீழ் வைத்து ஆட்சி செய்தவர்கள். ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் கோட்டை, ஜோத்பூர் கோட்டை, உதய்ப்பூர் கோட்டை, கலிஞ்சர் கோட்டை, சித்தோர்கர் கோட்டை, மோவார் கோட்டை என மலை உச்சி மீதும், தரைத்தளத்திலும் அழகான கோட்டைகள் இன்று அதிகமாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ராஜபுத்திரமன்னர்கள்தான். அவர்கள் தான் கஜூராஹோ கோயில் என்கிற அற்புதத்தையும் உருவாக்கினார்கள். கூர்ஜர பிரதிகார வம்சம், சௌகான் வம்சம், பார்மர் வம்சம், சிந்தியா வம்சம், சாந்தல வம்சம் என 6 வம்சங்கள் இருந்தன. தற்போது 36 வகையான ராஜபுத்திரர்கள் உள்ளனர். அதாவது சாதியில் 36  உட்பிரிவுகள்.

 

 


முகலாயர்கள் வருகைக்குப் பின்னர் ராஜபுத்திரர்களின் ஆதிக்கம் வடக்கே குறைந்து, தேய்ந்தது. ஆனால் அதற்காக இவர்கள் தங்களது வீரத்தை மட்டும் விட்டுவிடவில்லை. ராஜபுத்திர பெண்கள் தங்களது கலாச்சாரத்தை விட்டுக்கொடுத்ததில்லை. போரில் ஆண்கள் தோல்வியுற்றபோது, அந்நியர்கள் கைகளில் தாம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக ராஜபுத்திர பெண்கள் தீ வளர்த்து உயிரோடு அதில் பாய்ந்து தங்களை மாய்த்துக்கொண்டனர். சில நேரங்களில் போருக்கு முன்பே திருமண உடைகளை அணிந்துகொண்டு, தங்களது குழந்தைகளோடு சமஸ்க்கிருதத்தில் ஜனஹர் என்று கூறப்படும் (தமிழில் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளுதல்) முறைப்படி தங்களை மாய்த்துக்கொண்டனர். 

 

 

bawaria tribes

பவாரிய பழங்குடிகள்

 

முகலாயர்கள் படையெடுத்து ராஜபுத்திரர்களின் கோட்டையை தாக்கி அழித்தபோது ராஜபுத்திரர்கள் தோல்வியை சந்தித்தனர். 1528 மார்ச் 8ந்தேதி, மேவார் மன்னர் ராணா சங்கா, சுல்தான் பகதூர் ஷாவின் படைகள் கோட்டையை முற்றுகையிட்டபோது இராணி கர்ணாவதியும், இராசபுத்திர பெண்கள் ஆயிரக்கணக்கானவர்களும் தீக்கு தங்களை இறையாக்கினார்கள். தங்கள் குல பெண்டிரின் சாம்பலை உடலில் பூசிக்கொண்டு சென்று போர் புரிந்து வெற்றி பெற முடியாமல் உயிர் துறந்தனர்.  

அலாவுதீன்கில்ஜி ஆட்சிக் காலத்தில் ஜெய்சல்மர் கோட்டையில் ராஜபுத்திர அரச குலப்பெண்கள் 24 ஆயிரம் பேர் நெருப்புக்கு தங்களை தந்தனர். 1567ல் அக்பர் சித்தோர் கோட்டையை முற்றுகையிட்டு கோட்டை கதவுகளை உடைத்துக்கொண்டு அவரது படை உள்ளே நுழைந்தபோது, இராஜபுத்திர ராஜகுல பெண்கள், குழந்தைகள் தீ குளித்திருந்தனர். ராஜபுத்திர வீரர்களோடு போர் புரிந்து கொன்றதாக அக்பரே தனது நூலில் விவரித்துள்ளார். அதேபோல் இந்தியாவின் கடைசி இந்து மன்னன் என வர்ணிக்கப்படும் பிரதிவ்ராஜ் சௌகான் போரில் தோல்வியுற்று முகமது கோரியில் கொலை செய்யப்பட இதை அறிந்த பட்டத்து இராணி பத்மாவதியுடன் நூற்றுக்கணக்கான ராஜகுல பெண்கள், குழந்தைகள் தீயில் இறங்கி மாண்டனர் என்கிறது வரலாற்று குறிப்புகள்.

 

chittor fort

சித்தோர்கர் கோட்டை



மாலிக் முகமது ஜெயசி என்கிற இஸ்லாமிய கவிஞர், பத்மாவத் என்னும் கவிதை தொகுப்பை 16ஆம் நூற்றாண்டில் வெளியிட்டார். அதில், மேவார் சாம்ராஜ்ஜியத்தின் மன்னர் ரத்னசிம்மாவின் மனைவி ராணி பத்மாவதி. அலாவுதீன் கில்ஜியுடனான போரில் ரத்னசிம்மா தோல்வியடைந்து கொல்லப்பட்டார். அவரது மனைவி பத்மாவதி ராஜகுல பெண்களோடு தீக்குளித்தார் என்கிறது வாய்வழி வரலாறு. இதனை மையமாக வைத்து, பத்மாவத் என இந்தியில் படமெடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கில்ஜிக்கும் – பத்மாவதிக்கும் இடையே உறவு இருப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என தகவல் பரவ வடஇந்தியாவில் பெரும் கலவரத்தை உருவாக்கிவிட்டது.

இந்த ரத்னசிம்மாவால் துரத்தப்பட்டவர்கள் தான் பவாரியர்கள். சுருக்குக் கயிறு செய்பவர்கள் என்ற பெயருடைய இந்த பவாரியாக்கள் கொரில்லா போர் வகை வீரர்கள். இராஜபுத்திர வம்சத்தின் போர்படையில் பெரும் பலமானவர்களாக இருந்தார்கள். முகலாயர்களுடனான போரில் ராஜபுத்திரர்கள் தோற்றபின் ஆரவல்லி மலை தொடர்க்குள் சென்று பதுங்கினார்கள். அப்படி பதுங்கியவர்கள் நாட்டுக்குள் வரமுடியாமல் பழங்குடிகளாக மாறி வேட்டை தொழிலில் இறங்கினார்கள். களவாடவும் செய்தார்கள்.

 

 


1871ல் இந்தியா முழுமைக்கும் பழங்குடிகள், தாழ்த்தப்பட்டவர்கள், சாதிகளால் ஒதுக்கப்பட்ட பல பிரிவினரை குற்றப்பரம்பரை சட்டம் இயற்றி அதன்கீழ் கொண்டு வருகிறார்கள். அதில் பவாரியாக்களும் அடக்கம். 1972ல் இந்தியாவில் வேட்டை தடுப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் வேட்டையாடுதல் கைவிட்டனர். தாங்களும் இந்த பூமியில் உயிர் வாழ வாழ்க்கை வாழக்கத்தை மாற்றிக்கொள்ளத் துவங்கினர். காடுகளில் இருந்து நாட்டுக்குள் வந்து கொள்ளையடித்து செல்கிறார்களோ அந்த அளவுக்கு அந்த சமூகக் குழு மக்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அது பின்பு கொலையாக மாறியது.

 

 

rajput families

ராஜபுத்திரர்கள்



கொள்ளையடிக்கும் இடத்தில் மக்கள் சுற்றி வளைக்கும்போது மாட்டிக்கொள்ளாமல் இருக்க கொலை செய்துவிட்டு தப்பிவந்தால் அவனை பெரிய ஆளாக அந்த சமூகம் பார்த்தது. இளைஞர்கள் கொள்ளையடித்துவிட்டு வரும்போது கொலைகள் செய்தால்தான் திருமணம் என்கிற வழக்கம் உருவானது. கொள்ளையடிப்பவர்கள் யார் என துப்பு துலக்கி பாதுகாப்பு படை வருவதைத் தடுக்க பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய துவங்கினர். இதனால் மானத்துக்கு பயந்துபோய் புகார் தருவதை நிறுத்திவிடுவார்கள் என நினைத்தனர். அது கைகொடுக்க, அதை வழக்கமாக மாற்றிக்கொண்டனர். இவர்கள்தான் இந்தியா முழுமைக்கும் சென்று கொள்ளையடிக்கும் கும்பல்களில் பலமான கூட்டம். ஏறத்தாழ இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத்திலும் ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்த பவாரியக்கள் மீது புகார்கள் உள்ளன. இவர்களை அந்த சமூக அவலத்தில் இருந்து மாற்ற ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆண்ட, ஆளும் கட்சி எதுவும் குறிப்பிடத்தக்க ஆக்கப்பூர்வ முயற்சி எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


ராஜஸ்தான் மாநில முதல்வராக யார் வரவேண்டும் என்பதை ஜாட் சாதியினர் மற்றும் ராஜபுத்திரர்களே தீர்மானிக்கின்றனர். இந்த இரண்டு சாதிகளும் பல சாதிகளின் தலைமை சாதிகள். இந்த சாதிகளின் கீழ் பல உட்பிரிவுகள் உள்ளன. அப்படியிருந்தாலும் மக்கள் தொகையில் மிகவும் குறைவான ராஜபுத்திர வம்சத்துக்குள் வரும் சிந்தியாக்கள் வம்சத்தை சேர்ந்த வசுந்தர ராஜா சிந்தியாதான் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். 

ஆட்சிக்கு வர வசுந்தரா ராஜே என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது, வந்த பின்னர் என்னவெல்லாம் செய்தார் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

அடுத்த பகுதி:

கொடைக்கானல் கான்வென்ட் டூ ராஜஸ்தான் கோட்டை! - முதல்வரைத் தெரியுமா #8 

முந்தைய பகுதி 

ராஜ்புத் பரம்பரையில் ஒரு சி.எம் - ராஜஸ்தானின் அரசியல் நிறம்!  முதல்வரைத் தெரியுமா? #6