நம் நாட்டில் சினிமாவுக்கு பின் அதிகம் நேசிக்கப்படும், பின்தொடரப்படும் ஒரு துறை என்றால் அது விளையாட்டுதான். அப்படி பெரும்பான்மை மக்களால் பின்தொடரப்படும் விளையாட்டுகளில் மிக முக்கியமானது கிரிக்கெட். கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகள் பெரும்பான்மை மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை என்பதே நிதர்சனம். இருந்தாலும் அந்த விளையாட்டுகளிலும் நமது இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு நிகரான பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. அப்படி இந்த 2018 ஆம் ஆண்டில் நமது ஆடவர் கிரிக்கெட் அணியின் சாதனைகளை தவிர்த்து மற்றயவற்றில் என்னென்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதையும், அதனை நிகழ்த்தியவர்களை பற்றியும் ஒரு சிறிய நினைவூட்டலே இந்த பதிவு.
தங்ஜம் தபாபி:
ஒலிம்பிக் போட்டிகளில் ஜூடோ விளையாட்டில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்தார் மணிப்பூரை சேர்ந்த 16 வயது தங்ஜம் தபாபி. இதுவரையிலான ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஜூடோ போட்டிகளில் பதக்கமே வென்றதில்லை என்ற நிலையை, இந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் ஒலிம்பிக் போட்டியில் 44 கிலோ ஜூடோ பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் மாற்றியமைத்தார் தபாபி.
மணிகா பத்ரா:
காமன்வெல்த் போட்டிகளின் வரலாற்றில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவிற்காக முதல் தங்கப்பதக்கத்தை வென்றவர் என்ற சாதனையை படைத்தார் மணிகா பத்ரா. 23 வயதான மணிகா டெல்லியில் பிறந்தவர். இவர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் பிரிவில் கலந்துகொண்டார். இதில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற இவர், 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி:
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் அளவுக்கு கவனம் பெறாத இந்திய பார்வையற்றோர் கிரிக்கெட் அணி, இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றி புதிய சாதனையை படைத்தது. ஷார்ஜாவில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது மூலம் இந்திய அணி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி தொடர்ந்து இரண்டு முறை உலகக்கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை சமன் செய்தது. மேலும் டி20 உலகக்கோப்பை இதுவரை இரண்டு முறை நடந்துள்ளது, இதில் இரு முறையும் இந்திய பார்வையற்றோர் அணியே கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
மிதாலி ராஜ்:
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சச்சினாக பார்க்கப்படுபவர் தமிழகத்தை பாரம்பரியமாக கொண்ட மிதாலி ராஜ். மகளிர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் ஒரு அணிக்கு தலைமை தாங்கியவர் என்ற சாதனையை இந்த ஆண்டு மிதாலி படைத்தார். 117 போட்டிகளுக்கு தலைமை தாங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனையின் சாதனையை இவர் கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடிய பொழுது முறியடித்தார். இவர் தனது 16 வது வயதில் இந்திய மகளிர் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். முதன்முதலாக 6000 ரன்கள் எடுத்த மகளிர் கிரிக்கெட்டர், தொடர்ந்து 7 அறை சதங்கள் விளாசிய முதல் பெண் கிரிக்கெட்டர் என பல சாதனைகளை இவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வினேஷ் பொகாட்:
'தங்கல்' கதையின் நிஜ நாயகிகளாக கீதா பொகாட், பபிதா பொகாட்டின் சகோதரியான வினேஷ் பொகாட் இந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த், ஆசிய போட்டி ஆகிய இரண்டிலும் மல்யுத்தத்தில் தங்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய போட்டியில் மல்யுத்த பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். மேலும் ஆசிய போட்டி, காமன்வெல்த் ஆகிய இரண்டு தொடர்களிலும் மல்யுத்த பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார் 24 வயதான வினேஷ் பொகாட்.
இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி:
இந்தியாவின் அண்டர் 19 அணி இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூஸிலாந்து நாட்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றியது. இது இந்தியா கைப்பற்றிய நான்காவது ஜூனியர் உலகக்கோப்பை. இதன்மூலம் அதிக முறை அண்டர் 19 உலகக்கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது. இதற்கு முன்பு 2000, 2008, 2012 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் சுபமன் கில் தொடர்நாயகன் விருதினை பெற்றார். இந்த தொடரில் அவர் 104 சராசரியுடன், 418 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுனில் சேத்ரி:
'கேப்டன் ஃபெண்டாஸ்டிக்' என ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இந்த ஆண்டு அர்ஜென்டினா நாட்டின் மெஸ்ஸியின் கோல் எண்ணிக்கையை சமன் செய்து புதிய சாதனையை படைத்தார். 2002 ஆம் ஆண்டு முதல் கால்பந்து விளையாடி வரும் இவர் 103 ஆட்டங்களில் 65 கோல்கள் அடித்து இந்த சாதனையை நிகழ்த்தினார். அதன்படி உலக அளவில் தற்பொழுது விளையாடி வரும் வீரர்களில் அதிக கோல் அடித்த வீரர்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் நமது இந்திய அணியின் கேப்டன். 85 கோல்களுடன் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த ரொனால்டோ முதல் இடத்தில் உள்ளார்.
பி.வி.சிந்து:
இந்திய பேட்மிட்டன் விளையாட்டின் இளம் நட்சத்திரம் பி.வி.சிந்து. 23 வயதான இவர் ஹைதராபாத்தில் பிறந்தவர். உலக பேட்மிட்டன் சம்மேளனம் ஆண்டுதோறும் சிறந்த வீரரை தேர்ந்தெடுக்கும் 'சூப்பர் சீரிஸ்' என்ற தொடரை நடத்தும். அதன் புதுப்பிக்கப்பட்ட வடிவமே 'வேர்ல்ட் டூர்' என இந்த ஆண்டு முதல் தொடங்கியுள்ளது. இதன் முதல் சீசனில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். இந்தியா சார்பில் இந்த பட்டத்தை வென்ற முதல் நபர் என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார். மேலும் இந்த ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பட்டியலில் கோலி, தோனி, சச்சினுக்கு பிறகு அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
மேரி கோம்:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பிறந்த மேரி கோமின் சாதனை பயணம் உண்மையில் மிகப்பெரியது. மூன்று குழந்தைகளுக்குத் தாயான கோம் இந்த ஆண்டு மட்டும் இரண்டு மிகப்பெரும் சாதனைகளை படைத்துள்ளார். முதலில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இவர் தங்கம் வென்றார். இதுவே காமன்வெல்த் போட்டிகளில் முதல்முறை இந்திய குத்துசண்டை வீராங்கனை ஒருவர் தங்கம் வென்ற நிகழ்வாகும். அதன்பின் நவம்பர் மாதம் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தனது ஆறாவது சாம்பியன்ஷிப் பட்டத்தை மேரி கோம் பெற்றார். இதன் மூலம் உலக குத்துசண்டை வரலாற்றில் முதன்முறையாக 6 முறை சாம்பியன்ஷிப் வென்ற முதல் பெண் என்ற சாதனையை இவர் படைத்தார்.
ஹிமா தாஸ்:
அசாம் மாநிலத்தின் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பல்வேறு சோதனைகளுக்கு பின் கடின உழைப்பின் மூலம் தடகளத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தவர் ஹிமாதாஸ். இந்தியாவிற்காக உலக சாதனைப் படைத்த இவருக்கு, ஆரம்பநிலை கிரிக்கெட் வீரருக்கு கிடைத்த புகழ்வெளிச்சம் கூட இன்று வரை கிடைக்கவில்லை என்பதே யதார்த்தம். முதலில், 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற அண்டர் 20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை ஹிமாதாஸ் படைத்தார். அதன்பின் 2018 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்காக மூன்று பதக்கங்களை வென்ற இவர், 50.79 நொடிகளில் 400 மீட்டர் தூரத்தைக் கடந்து புதிய தேசிய சாதனையும் படைத்தார். இந்த காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும், தொடர் ஓட்டத்தில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என மூன்று பதக்கங்களை அவர் வென்றார்.
நமது நாட்டில் கிரிக்கெட்டிற்கு தரும் முக்கியத்துவத்தையும், நேரத்தையும் மற்ற விளையாட்டுகளுக்கும் இந்திய அரசாங்கமும், மக்களும் ஒதுக்கினாலே இந்தியாவின் அனைத்து விளையாட்டுத்துறைகளும் நிச்சயம் மேம்படும் என்பதே உண்மை. அப்படி செய்யும் பட்சத்தில் இந்த சாதனைகளின் எண்ணிக்கை மேலும் உயர்வது மட்டுமின்றி, இந்தியாவின் பதக்க கனவுகளும் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் கண்டிப்பாக உள்ளது.