Skip to main content

‘மாஸ்க்’ கேட்டதால் மாற்றப்பட்டாரா அரசு டாக்டர்? -ஹூஹூம்... உண்மைக்காரணம் இதுதான்!

Published on 25/03/2020 | Edited on 26/03/2020

 

கரோனா சிகிச்சைக்காக 24 மணிநேரமும் அரசு மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள் போராடி பல உயிர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் சூழலில்  ‘மாஸ்க் கேட்ட மருத்துவர் ட்ரான்ஸ்ஃபர்’ என்றத் தகவலால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான கண்டனக்குரல்கள் மீம்ஸ்களாகவும் பதிவுகளாகவும் கரோனா  கிருமியைப்போலவே பரவிவருகிறது. ஆனால், இதுகுறித்து விசாரித்தபோதுதான் ட்ரான்ஸ்ஃபருக்கான உண்மையானக் காரணம் தெரிய ஆரம்பித்தது.  

 

Doctor



டாக்டர் சந்திரசேகர் என்பவர் ஸ்டேன்லி அரசு மருத்துவக்கல்லூரியிலிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாற்றப்படுவதாக கடந்த 2020 மார்ச்-24 ந்தேதியிட்ட  அரசு ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் பாலாஜி (ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது கைநாட்டு பெற்றதாக சொன்னாரே அவரேதான்) கொடுத்த பணிமாறுதல் ஆணைதான் வாட்ஸ்-அப்புகளில் பரவி, மாஸ்க் கேட்ட மருத்துவரை பணிமாறுதல் செய்யலாமா? என்று கண்டனக்குரல்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. 

 

இந்நிலையில், மருத்துவ வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “அரசு ஸ்டேன்லி மருத்துவமனை ஹவுஸ் சர்ஜன் டாக்டர் ஒருவர் மாஸ்க் இல்லை என்று  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கவனத்துக்குக் கொண்டுசென்றது உண்மைதான். அதற்கு, விஜயபாஸ்கர் அவரிடம், ‘1 கோடி ரூபாய் தர்றேன். வெளியில் மாஸ்க் வாங்கிட்டு வந்து தரமுடியுமா?’ என்று கோபமாக கடிந்துகொண்டிருக்கிறார். மேலும், இந்த நேரத்தில் ஹவுஸ்சர்ஜன் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நமக்குத்தான் கெட்டபெயர் வரும் என்று விஜயபாஸ்கர் சைலண்ட் ஆனதும் உண்மை. ஆனால், வாட்ஸ்-அப்புகளில் உலாவும் ஆணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் டாக்டர் சந்திரசேகரின் டிரான்ஸ்ஃபர் என்பது மாஸ்க் காரணமல்ல. துறைரீதியான நடவடிக்கைதான்” என்று பின்னணியை விவரிக்க ஆரம்பித்தார்கள்.

 

Doctor



 

 “அதாவது, டாக்டர் சந்திரசேகர் பலவருடங்களாக அரசு ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரியில் பணிபுரிந்துவருகிறார். ஊழலால் இந்திய மருத்துவத்துறையையே வாய் பிளக்க வைத்த கேதன் தேசாயின் தோழியும் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் கீதாலட்சுமியின் செல்லப்பிள்ளைதான் இந்த டாக்டர் சந்திரசேகர். டாக்டர் கீதாலட்சுமியின் ஆசீர்வாதத்தால் அரசு ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரியின் வார்டராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது, மாணவர்களுடன் சேர்ந்துகொண்டு மது அருந்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பின் தொடர ஆரம்பித்துவிட்டன.

 

doctor


ஆனால், டாக்டர் சந்திரசேகர் இந்திய மருத்துவச்சங்கம், பொது அறுவைச் சிகிச்சை சங்கம், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் என சங்கங்களில் போஸ்டிங் வாங்கி வைத்திருப்பதால் இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை. ஆனாலும் இவர் மீதான புகார்கள் குறித்து குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. அந்த, தண்டனையிலிருந்து தப்பிக்க தமிழ்நாடு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் செந்தில் மூலம் அமைச்சர் விஜயபாஸ்கரை அடிக்கடி சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார் டாக்டர் சந்திரசேகர். மேலும், அரசு விழாக்களில் கலந்துகொண்டு அமைச்சர் விஜயபாஸ்கருடன் இருக்கும் புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து விசாரணைக் குழுவிடம் ’நான் யார் யார் தெரியுமா?’ என்கிற ரேஞ்சுக்கு பில்ட்-அப் செய்துவந்தார். உலக வங்கி கடனுதவியுடன் லீலா பேலஸ் ஹோட்டலில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். தலைமையில் தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டு திட்டம்-3 என்ற நிகழ்வு நடந்தது.

 

doctor


 

இந்த, விழாவிலும் சுகாதாரத்துறை அமைச்சருடன் எடுத்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு பில்ட்-அப் செய்திருக்கிறார்.  கொரோனா சர்ச்சையால் டாக்டர் சந்திரசேகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம் என்று பொறுமைகாத்த  விசாரணைக்குழுவுக்கு மேலும் வெறுப்பேற்றியபோது இருந்தன டாக்டர் சந்திரசேகரின் நடவடிக்கைகள். இந்நிலையில்தான், கடந்த 2020 மார்ச்-24 ந்தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பணிமாறுதல் ஆணையைக் கொடுத்தார் ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் பாலாஜி. இந்த ஆணைதான், வாட்ஸ்-அப்பில் பரவி மாஸ்க் கேட்டதால் சஸ்பெண்டா என்று அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக திரும்பிவிட்டது. வதந்தி தொடராமல் இருக்க, டாக்டர் சந்திரசேகரை பணிமாறுதல் செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்” என்று சிரிக்கிறார்கள் மூத்த மருத்துவர்கள்.
 

இதுகுறித்து, டீன் பாலாஜியை தொடர்புகொண்டபோது மீட்டிங்கில் இருப்பதால் பிறகு பேசுகிறேன் என்றார். குற்றச்சாட்டுகள் குறித்து டாக்டர் சந்திரசேகரிடன் விளக்கம் கேட்க எஸ்.எம்.எஸ். அனுப்பியும் தொடர்புகொண்டபோது ஃபோனை அட்டெண்ட் செய்யவில்லை. அவர், நம்மைத் தொடர்புகொண்டு இதுகுறித்து விளக்கம் அளித்தால் அவரது கருத்துக்களை பதிவு செய்யத் தயாராக இருக்கிறது நக்கீரன்.