Skip to main content

மீன் குழம்பு வைத்த பாத்திரத்தில் சக்கரை பொங்கல் என்று ஏன் சொல்லவில்லை..? - கரு. பழனியப்பன் கேள்வி!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

நீண்ட இழுபறிக்கு பிறகு சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் வருகை தொடர்பாக சில செய்திகளை தெரிவித்தார். தனக்கு முதல்வர் பதவியில் விரும்பம் இல்லை என்றும், ஆட்சி அதிகாரத்தை தான் ஏற்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு பலத்த வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அவரின் ரசிகர்கள் அவரின் இந்த கருத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இதுதொடர்பாக இயக்குநர் கரு.பழனியப்பன் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் பின்வருமாறு, 

 

kl



ரஜினியின் வருகையை நாம் தமிழர் கட்சி இவ்வளவு நாட்களாக எதிர்த்து வந்தார்கள். ஆனால் தற்போதைய ரஜினியின் பேச்சை அவர்கள் வரவேற்றுள்ளார்கள். இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

ரஜினிதான் அரசியலுக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டாரே, அப்புறம் வரவேற்கத்தான் செய்வார்கள். பிளாக், ஒயிட் இது இரண்டு மட்டும்தான். அவரு இல்லைனு தெளிவாக சொல்லிவிட்டார்னு நான் நினைக்கிறேன். ஒரு ரசிகரா அவரின் இந்த அறிவிப்பை கண்டு மகிழ்கிறேன். ஒரு ரசிகரா ரஜினியை எனக்கு அவ்வளவு பிடிக்கும். தியேட்டரின் வாசலில் காத்துக்கிடந்து டிக்கெட் வாங்கி படம் பார்த்த ஒரே நடிகருடைய திரைப்படம் ரஜினி உடையதுதான். வேறு எந்த நடிகரின் திரைப்படத்தையும் அப்படி பார்த்தில்லை. டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் வீட்டுக்கு கிளம்பி போய்விடுவேன். காத்துகிடந்து வேறு யாருடைய திரைப்படத்தையும் நான் பார்த்தில்லை. மிக சமீபத்தில் ரஜினிகாந்த் ஒரு குழைந்தையை கொஞ்சவது போன்ற புகைப்படம் வெளியாகி இருந்தது. அந்த புகைப்படத்தை நீங்கள் உற்றுநோக்கி ரஜினியின் கண்ணை பார்த்தால் அதில் அவர் அளவற்ற மகிழ்ச்சியில் இருப்பதை கண்களில் காணலாம். அவரே குழைந்தை ஆகின்ற வயதை அவர் அடைந்துள்ளார். அப்பாடா என்று இருக்கு வேண்டிய வயதில் அவரை அரசியலுக்குள் இழுத்துவிடுவது தேவையில்லாத ஒன்று. இன்னும் அவர் நிறைய குணச்சித்திர கதாபாத்திரங்களில் அவர் நடிக்க வேண்டும். அமிதாப் பட்சனை விடவும் அவர் இன்னும் நிறைய உயரத்துக்கு செல்ல வேண்டும். அதற்கெல்லாம் இனி வரும் காலத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

அவர் அன்றைய பேச்சை முடிக்கும்போது புரட்சி வரட்டும், நான் அதன் பிறகு வருகிறேன் என்று கூறியுள்ளாரே?

புரட்சி வருமா? ஏதாவது நடக்கட்டும், அதன்பிறகு உங்களை கூப்பிடுவார்களா? புரட்சியில் பங்குகொண்டு வெற்றிபெற்ற ஒருவன்தான் தலைவன் ஆக முடியும். புரட்சி எல்லாம் நடந்து முடியட்டும், அதன்பிறகு நான் வருகிறேன் என்பதெல்லாம் எப்படி சரியாகும் என்று தெரியவில்லை. அதன்பிறகு அவரை வாங்க, வாங்க வந்து சிஇஓ போஸ்ட்ல உங்காருங்கனு யாரும் சொல்லப்போவதில்லை. அவரு கதவை அடைத்துவிட்டார். மறுபடி மறுபடி அவரை நீங்கள் உயிர்பிக்க வேண்டாம். உங்களுக்கு தேவை இருக்கு. அதனால் நீங்கள் மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புவீர்கள். சீட்டுகட்டுகளில் எவ்வளவு கார்டு இருந்தாலும் ஜோக்கர் இருந்தாதான் ஆட்டம் சுவாரசியமாக இருக்கும். 

அப்படி என்றால் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? 

வெற்றிடம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். அதற்கு பதிலாக புதிதாக மாற்று தோன்றி அதனை ஈடு செய்யும். அண்ணா, திமுக என்ற கட்சியை தொடங்கி காங்கிரஸ் என்ற பெரிய இயக்கத்தை வீழ்த்தி ஆட்சியில் இருந்த போது எதிர்பாராத விதமாக இறந்து போனார். அவரின் இடத்தை இன்றுவரை யாரேனும் ஈடு செய்தார்களா? மாறாக கலைஞர் என்பவர் தோன்றினார். அவரிடம் இருந்து எம்ஜிஆர் என்பவர் தோன்றினார். ஆகையால் சிம்மாசனமோ அல்லது சவப்பெட்டியோ அவனவன்தான் செய்ய வேண்டும். வெற்றிடம் என்ற ஒன்று இல்லை. நீங்கள் மூன்றாண்டுகளுக்கு முன்பு நினைத்து பார்த்தீர்களா? எடப்பாடி அவர்கள் அடுத்த மூன்றாண்டு காலத்தை தீர்மானிப்பார் என்று? நாட்டில் இவ்வளவு பிர்ச்சனை இருக்கு எதைபற்றியாவது கவலை படுகிறாரா? நடவு நடுகிறார், வண்டி ஓட்டுகிறார், எதை பற்றியும் அவர் கவலை படவில்லை. சிரிச்சிகிட்டே இருக்காருல்ல. எடப்பாடி என்ன ஜெயலலிதா இடத்தை நிரப்பினாரா என்ன? ஜெயலலிதா எம்ஜிஆர் இடத்தை நிரப்பினாரா? அவரவர் உருவாகி தனக்கான இடத்தை நிரப்புவார்கள். இப்போது பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். ஆட்சி நடைபெற்று கொண்டுதானே இருக்கின்றது. 

ரஜினி அரசியலுக்கு வரவி்ல்லை, அவர் கதவடைத்துவிட்டார் என்று நீங்கள் சொல்வது போல வைத்துக்கொண்டாலும் அவர் புதிய சித்தாந்தம் ஒன்றை கூறியுள்ளதாக நீங்கள் நினைக்கவில்லையா?

அவர் அந்த பத்தரிக்கையாளர் சந்திப்பில் ஒரு சிந்தாந்தத்தை மட்டும் கூறவில்லை. பல சிந்தாந்தத்தை கூறினார். சக்கரை பொங்கல் வைத்த பாத்திரத்தில் மீன் குழம்பு வைத்ததை போல் என்று புதிய அரிய கருத்தை தெரிவித்துள்ளார். மீன் குழம்பு வைத்த பாத்திரத்தில் சக்கரை பொங்கள் வைத்ததுபோல் என்று கூறாமல், சக்கரை பொங்கல் வைத்த பாத்திரத்தில் மீன் குழம்பு வைத்துபோல் என்று தெரிவித்துள்ளார். 

இதில் என்ன தவறு இருக்கிறது? 

உங்களுக்கு புரியவில்லையா? பட்சனம் செய்ய வேண்டும் என்பது அதனுடைய பொருள். உங்கள் வீட்டில் பட்சனம் செய்வார்களா? ஏற்கனவே ஒரு முறை அப்படி சொல்லியுள்ளார். பாலில் பட்சனம் செய்ய வேண்டும் என்று. எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். பெண்களுக்கு ஓட்டுப்போட தெரியவில்லை, ஆண்கள்தான் சொல்லித்தர வேண்டும் என்பதெல்லாம் யாரோட கொள்கை. நீங்கள்தான் யோசித்து புரிந்துகொள்ள வேண்டும்.