Skip to main content

ஒரு தூக்குக்கு ரூ.20 ஆயிரம் கூலி...தயார் நிலையில் 10 மணிலா கயிறுகள்... தூக்குமேடை நோக்கி நிர்பயா குற்றவாளிகள்..!

Published on 19/03/2020 | Edited on 20/03/2020

எத்தனையோ சட்டப் போராட்டங்களை கடந்து, 4 பேரின் வாழ்நாளும் கரைந்து கொண்டிருக்கிறது. ஆம்.. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை அதிகாலை 5-30 மணிக்கு திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அவர்கள் இன்றிரவு கண்மூடி தூங்கி எழுந்தால் நாளை உயிரோடு இருக்க மாட்டார்கள்.

இந்த வழக்கின் பிளாஷ்பேக்கை சற்று திரும்பி பார்ப்போம்.. "டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16- ஆம் தேதி தனது ஆண் நண்பருடன், பேருந்தில் சென்று கொண்டிருந்த மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது.

டெல்லியில் நிகழ்ந்த இந்த வன்கொடுமையைக் கேள்விப்பட்டு ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் உறைந்தது. அப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்ததால், இரு அவைகளிலும் நிர்பயா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

 

Nirbhaya Case

 

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அவருடைய சகோதரர் முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா ஆகிய நான்கு பேர் தான் குற்றவாளிகள் என போலீஸார் கண்டறிந்தனர். இதனையடுத்து, ராம் சிங், முகேஷ், வினய் ஷர்மா, பவன் குப்தா ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில், அக்ஷய் தாக்கூர் மற்றும் ஒரு சிறுவனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, பாலியல் வன்கொடுமையால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவிக்கு உடல்நிலை மோசமானதால், அவரை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அனுப்ப மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டது. அதன்படி, டிசம்பர், 29- ஆம் தேதி சிங்கப்பூர் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மருத்துவ மாணவி நிர்பயா சிங்கப்பூரிலேயே உயிரிழந்தார்."

5பேருக்கு தூக்கு தண்டனை:

நிர்பயா உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். விசாரணை நீதிமன்றத்தில் சிறார் குற்றவாளிக்கு மட்டும் 3 ஆண்டு சிறை தண்டனையும், மற்ற 5 பேருக்கும் மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2013- ஆம் ஆண்டு மார்ச் 11- ந்தேதி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.

மற்ற 4 பேரின் தூக்கை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில், கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டார். எனினும் தூக்கில் இருந்து தப்பிக்க பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தினார் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங். இதனால், ஏற்கனவே 2 முறை நாள் குறிக்கப்பட்டும் தண்டனை நிறைவேற்றம் தள்ளிப் போனது. இப்போது, 3- வது முறையாக நாள் குறிக்கப்பட்டு நாளை அதிகாலை 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

தயார் நிலையில் திகார் சிறை:

வியாழக்கிழமை காலை 5-30 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட திகார் சிறையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக உத்திரப்பிரதேசத்தின் மீரட்டில் இருந்து பவன் ஜலாட் என்ற தூக்கிலிடும் நபர் வரவழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு தூக்குக்கு ரூ.20 ஆயிரம் வீதம் 4 பேருக்கு மொத்தம் ரூ.80 ஆயிரம் கூலியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் 4 பேர் தூக்கிலிடப்படுவதால், பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தூக்கிலிடுவதற்கு பயன்படும் மணீலா கயிறுகள் 10 எண்ணம் வாங்கி வைக்கப்பட்டுள்ளன

.

Nirbhaya Case


"தூக்கிலிடுவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி ஏற்கனவே, சிறை வளாகத்தில் பார்க்கப்பட்டுள்ளது. அதாவது குற்றவாளியின் எடைக்கு ஏற்ப பொம்மை செய்து, சரியாக நகரும் பலகை நகர்கிறதா" என்பது குறித்து திகார் சிறை கண்காணிப்பாளர் முன்னிலையில் பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது.

தற்போது சிறைவளாகத்தின் 3-வது பிளாக்கில் (அதாவது தூக்கு கொட்டடிக்கு முந்தைய அறை)அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 4 பேரையும் சிறை வார்டன்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே திட்டமிட்டபடி அதிகாலை 5-30 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள். 6-30 மணிக்குள் எல்லா நடைமுறைகளும் முடிந்துவிடும்" என்றார் திகார் சிறைத்துறை அதிகாரி ஒருவர்.

4 பேரின் உயிர்..தூக்குமேடை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது...!


இதுவரை எத்தனை தூக்கு?


தேசிய சட்டக் கமிஷன் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் 1947-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆயிரத்து 422 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

முதன் முதலில் இந்தியாவில் தூக்கிலிடப்பட்டவர் நாதுராம் கோட்சே. இவர் தான் மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்தவர். இந்தியாவை பொறுத்தவரை 2004-ல் மேற்கு வங்கத்தில் சிறுமி பலாத்கார வழக்கு குற்றவாளி தனஞ்செய் என்பவன் தூக்கிலிடப்பட்டான். அதன்பிறகு மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளி அஜ்மல் கசாப் 2012-லும், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தொடர்புடைய அப்சல் குரு 2013-ல் தூக்கிலிடப்பட்டனர்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய யாகூப் மேமன் 2015-ல் தூக்கிலிடப்பட்டான். அதன்பிறகு கடந்த 5 ஆண்டுகளில் யாரும் தூக்கிலிடப்படவில்லை.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கடைசியாக கடந்த 1995-ஆம் ஆண்டு, பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையை ஆட்டோ சங்கர் என்கிற கௌரி சங்கர் தூக்கிலிடப்பட்டான். தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி 2007 மற்றும் 2010-ஆகிய ஆண்டுகளில் ஐ.நா சபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இரண்டு முறையும் இந்தியா எதிராகவே வாக்களித்தது.