Skip to main content

இடப் பற்றாக்குறை, மருத்துவர்கள் பற்றாக்குறை, வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை... விஜயதரணி அதிரடி பதில்... 

Published on 05/05/2020 | Edited on 06/05/2020
congress mla vijayadharani




கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் கொறடாவுமான விஜயதரணி நம்மிடம் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார். 
 

மே 7ஆம் தேதி முதல் டாஸ்டாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதே?
 

கோயம்பேடு உள்பட சென்னையில் கட்டுப்பாடு இல்லாமல் கூட்டம் கூடியதால்தான் நோய் தொற்று அதிகமானது. சென்னையை பொறுத்தவரையில் சமூக விலகல் ஒரு பிரச்சனையாக இருக்கிறது என உணர்ந்த அரசு, சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடையை திறக்க முடிவு செய்து அறிவித்திருக்கிறது.  பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடையை திறந்தாலும் சமூக விலகல் கடைப்பிடிக்க முடியாத நிலை வந்துவிடும். வருமானம்தான் முக்கியம் என  அரசு நினைக்கிறதா?

உதாரணத்திற்கு எனது விளவங்கோடு தொகுதி பார்டரில் காப்பிக்காடு உள்ளது. விளவங்கோடு பச்சை மண்டலம், பக்கத்தில் தேங்காய் பட்டிணம் அது சிவப்பு மண்டலம். டாஸ்மாக் கடையை திறந்தால் பார்டரில் உள்ள காப்பிக்காடுக்கு சிவப்பு மண்டலத்தில் இருந்து வருவார்கள். சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் ஏற்படும். அப்போது விளவங்கோடு தொகுதி ஆரஞ்சு, சிவப்பு மண்டலமாக மாற வாய்ப்பு இருக்கிறது. 

மதுபானம் வாங்க வருபவர்கள் 6 அடி இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும் என அரசு சொல்லியிருக்கிறதே?
 

அரசு அப்படித்தான் சொல்லும். பக்கத்து மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் மே 4ஆம் தேதி மதுக்கடைகள் திறந்தவுடன் அந்த கடைகளுக்கு முன்பு எவ்வளவு பேர் கூடினார்கள், எப்படி நின்றார்கள் என்பது புகைப்படங்களாக வெளியாகி இருக்கிறது. விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா? அதே நிலைமைதான் இங்கும் ஏற்படும். கோயம்பேடு மார்க்கெட் போன்ற இடங்களில் நடந்த சம்பவங்களை நாம் மறக்கக் கூடாது. பிடிவாதமாக டாஸ்மாக் கடைகளை அரசு திறந்தால் நோய் தொற்று அதிகமாகி, மருத்துவமனைகளில் சிகிக்சை அளிக்க இடம் இல்லாத நிலைமை ஏற்படும், சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும். வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்படும். இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகள் வரும். 
 

 

40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வேலை இல்லை. வருமானம் இல்லாத நேரத்தில் டாஸ்மாக் கடைக்கு கூட்டம் வருமா? 
 

ஊரடங்கு நேரத்தில் கூலித் தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் கஷ்டப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் உதவி செய்து வருகிறோம். விளவங்கோடு தொகுதியில் ஒரு நாளைக்கு 200 குடும்பங்களுக்கு ஆயிரம் கிலோ அரிசி, ஆயிரம் கிலோ காய்கறிகள், ஆயிரம் மாஸ்க்குகள் என கொடுத்து வருகிறோம். மக்கள் கூடினால் நோய் தொற்று ஏற்படும் என்பதால் வீடுதேடி சென்று கொடுத்து வருகிறோம். கூலித்தொழிலாளர்களுக்கு வருமானம் இல்லை என்று இந்த உதவியை செய்து வருகிறோம். 


எதிர்க்கட்சியினர் கொடுக்கும் நிவாரணம்தான் பல குடும்பங்களின் பசியை போக்குகிறது என்று சொல்லி வரும் நிலையில், அவர்களுக்கு மதுபானம் வாங்க எப்படி பணம் வருகிறது என்ற கேள்வி எழுகிறது. இதில் என்ன பதில் வருகிறது என்றால், நிவாரண உதவி செய்யும்போது சிலர் பணம் கொடுப்பார்கள். அதனை சிலர் சேமித்து வைத்திருப்பார்கள். அந்த சிறிய சேமிப்பு டாஸ்மாக் கடையில் கரைந்த பின்னர் வீட்டில் பெண்கள் சிறுக, சிறுக சேர்த்து வைத்த பணத்தை பறித்துக்கொண்டு செல்வார்கள். அதுவும் கரைந்த பின்னர் வீட்டில் உள்ள பொருட்களை அடமானம் வைத்து குடிப்பார்கள்.


குடும்பத்தில் உள்ள முதியவர்களின் மருத்துவ செலவுக்கோ, குழந்தைகளின் படிப்பு செலவுக்கு சேர்த்து வைத்த பணம் டாஸ்மாக் கடைக்கு செல்லும்போது குடும்பங்களில் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும். அந்த குடும்பங்கள் அமைதியை இழக்கும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய நேரத்தில், பல குடும்பங்கள் வீதிக்குவரக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். 

நோய் எதிர்ப்பு சக்தி வரவேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் நிவாரணப் பொருட்களை வழங்குகிறோம். நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கக்கூடிய மதுபானக் கடைகளை அரசு திறக்கிறது. இந்த மாய வலையில் யாரும் சிக்கக்கூடாது என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள். இந்த இக்கட்டான நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

 

 

congress mla vijayadharani

 


நீங்கள் கொடுக்கும் நிவாரணம் எத்தனை நாளைக்கு வரும்.. மக்கள் வேலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்களே?
 

 

மத்திய அரசும், மாநில அரசும் பெரியதாக மக்களுக்கு ஒன்றும் உதவவில்லை. நாங்கள் கொடுக்கும் நிவாரணம் ஊரடங்கு காலத்தில் பசியை போக்கும், அவ்வளவுதான். எங்கள் தொகுதியை பொறுத்தவரை கரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலமாக இருக்கிறது. அதனால் இந்த தொகுதியில் உள்ள கூலித் தொழிலார்களை வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். கோரிக்கை நிறைவேறும் என நம்பிக்கையுடன் உள்ளோம்.