இந்தியாவில் கரோனாவால் எதிர்காலத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படக் கூடிய மாநிலங்கள் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை ரிப்போர்ட் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். அதில் முதலிடம் பெறுவது மகாராஷ்டிரா. இரண்டாம் இடம் குஜராத், மூன்றாவது இடம் டெல்லி, நான்காவது இடம் தமிழ்நாடு. இந்த நான்கு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட பிறகு கரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை லட்சக் கணக்கில் உயரும், அதை யாராலும் தடுக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்.
"தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது, பேருந்துகளை 17ஆம் தேதி முதல் இயக்குவதற்குத் திட்டமிடப்படுகிறது. இப்படி முழுவதுமாக ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு என்ன நடக்கும்'' என நாங்கள் பயத்துடன் இருக்கிறோம் என்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள். அந்தப் பயத்திற்கு உதாரணமாக கோயம்பேட்டில் நடந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். கரோனா வந்தவுடன் வடசென்னை காசிமேடு பகுதியில் இருந்த மீன் மார்க்கெட் மூடப்பட்டது. ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்த மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது.
தமிழகமெங்கும் எங்கெல்லாம் மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளி இல்லை என புகார்கள் வந்ததோ, அந்த மார்க்கெட்டுகளெல்லாம் மூடப்பட்டது. ஆனால் கோயம்பேடு மார்க்கெட்டை யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்த மார்க்கெட்டுக்கு வருபவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்களா எனச் சென்னை நகர போலீசார் ஆராயவில்லை. சென்னை நகர மாநகர கமிஷனரான பிரகாஷ் கோயம்பேட்டில் என்ன நடக்கிறது எனக் கவலைப்படவே இல்லை. கோயம்பேட்டில் கரோனா வந்தால் அது தமிழகம் முழுக்க கரோனாவை பரிசளிக்கும். மிகப்பெரிய தொற்று நோய் மையமாக மாறும் எனத் தமிழக அரசு எதிர்பார்க்கவே இல்லை.
தற்போது சுமார் 6,900 வியாபாரிகளை கோவிட் 19 பரிசோதனை க்கு உள்ளாக்கும் அளவிற்குக் கோயம்பேடு ஒரு மிகப்பெரிய நோய்த் தொற்று மையமாக மாறியிருக்கிறது. இன்று கோயம்பேடு, நாளை தமிழகம். இப்படித்தான் கரோனா விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது. கோயம்பேடு கரோனோ நோய்த் தொற்று மையமாக மாறிவிட்டது என்கிற செய்திகள் வந்து கொண்டிருக்கும்போது, அவசர அவசரமாக டாஸ்மாக்கை தமிழகம் முழுவதும் திறந்துவிட்டது.
அடுத்தபடியாக பொது போக்குவரத்தைத் திறப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. இவையெல்லாம் தமிழக அரசின் நிர்வாக அலட்சியத்தின் உச்சக்கட்டம் என்கிறார்கள் தமிழ்நாடு சுகாதாரத் துறை அதிகாரிகள். அவர்களிடம் இன்றைய நிலையில் எவ்வளவு நோயாளிகளைத் தமிழகத்தின் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியும் எனக் கேட்டோம். அதிகபட்சம் ஒரு லட்சம் நோயாளிகளைக் காப்பாற்ற முடியும் என அரசு சொல்கிறது என்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் இல் லாமல் வரும் நூற்றுக் கணக்கான நோயாளிகளிடம், 'நீங்கள் வீட்டிற்குப் போய் தனிமையில் இருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள், மருத்துவமனைக்கு வரவேண்டாம்' எனத் தமிழக அரசு திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு லட்சம் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் அளவிற்கு வசதிகளைப் பெற்றுள்ள தமிழக அரசு, நோய் அறிகுறி இல்லாதவர்களையே ஏன் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள அறிவுறுத்துகிறது என்கிற கேள்வியை நாம் முன் வைத்தோம்.
கரோனா நோய் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று அதிகபட்ச வைரஸ்கள் இடம் பெற்றிருக்கும் கரோனா நோய் வகை. இன்னொன்று மிகக் குறைந்த பட்சம் வைரஸ்கள் இடம் பெற்றிருக்கும் கரோனா நோய். அதிகபட்ச வைரஸ்கள் தாக்கினால் அவருக்கு இடைவிடாத காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல் மாத்திரைகள் சாப்பிட்டாலும் அந்தக் காய்ச்சல் நிற்காது. அடுத்தகட்டமாக அவர் மூச்சுவிட சிரமப்படுவார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்காவிட்டால் நிச்சயம் இறந்துவிடுவார். குறைந்தபட்ச வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான நபருக்கு இதுபோன்ற எந்த அறிகுறியும் இருக்காது. பல சமயம் அவர் கரோனா தாக்குதலுக்கு உள்ளானார் என்பது அவருக்கே தெரியாது. தெரியாமல் அவர் உடலைத் தாக்கிய கரோனா அவருக்குத் தெரியாமலேயே உடலைவிட்டு போய்விடும்.
ஒரு நோயாளி அதிகபட்ச வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார் அல்லது குறைந்தபட்ச வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார் என்பதெல்லாம் அவர் வாழும் சூழ்நிலையைப் பொறுத்தே அமைகிறது. ஆகவே குறைந்தபட்ச தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார் எனக் கண்டுபிடிக்கப்படும் நோயாளிகளைத் தமிழக அரசு அவரவர் வீடுகளுக்கே அனுப்பி தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக்கொள்ள செய்கிறது என விளக்குகிறார்கள் டாக்டர்கள்.
இந்நிலையில் ஊரடங்கு மொத்தமாகத் தளர்த்தப்பட்டால் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகாதா? அதை எப்படித் தமிழக அரசு எதிர்கொள்ளப்போகிறது என மருத்துவர்களிடம் கேட்டோம். டாஸ்மாக்கைத் தொடர்ந்து, அரசின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க பொதுப் போக்குவரத்தைத் திறந்துவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில் தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பது என்பது நடக்காத காரியம்.
தைவான் நாட்டில் மொத்தம் 400 கரோனா நோயாளிகள்தான் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறு நாட்டில் தனிமனித இடைவெளியை மிகவும் கண்டிப்பாக அந்த நாட்டு அரசு கடைப்பிடிக்க உத்தரவிட்டது. அதனால் இன்று கரோனா இல்லாத நாடாக தைவான் மாறியிருக்கிறது. கரோனா நோயை விரட்டுவதில் சமூக ஒழுங்கு என்பது மிகவும் முக்கியமானது. இடைவெளி கடைப்பிடிக்கப்படாவிட்டால் இன்று நகரங்களில் மட்டும் அதிகமாகக் காணப்படும் கரோனா நோய், டாஸ்மாக் கடைகள் இயங்கக்கூடிய உட்கிராமங்களில்கூட படர்ந்துவிடும். இப்படித் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களுக்கு சிறிதும், பெரிதுமாக நோய்க் குறிகளுடனோ, நோய்க் குறிகள் அல்லாமலோ கரோனா நோய் வரும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்த நோய் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் வந்துவிடும். அதனால் ஒரு பெரிய நோய் எதிர்ப்புச் சக்தி மக்களின் உடம்பில் உருவாகும். அந்த நிலையைத் நோக்கித்தான் தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இனி கரோனா வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல, மகாராஷ்டிராவிலும், குஜராத்திலும், டெல்லியிலும், மேற்கு வங்காளத்திலும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில் கேரளா, கோவா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, ஒரிசா போன்ற மாநிலங்கள் கரோனா எதிர்ப்பு போரில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னேற்றம் பெற்றுள்ளன என மத்திய அரசு சுட்டிக்காட்டுகிறது. ஆனால், மேற்கு வங்காளத்தில் இஸ்லாமியர்கள் தங்கள் ரம்ஜான் நோன்பு தொழுகைகளை நடத்துவதற்கு மசூதிகளை மம்தா அரசு அனுமதித்துள்ளது. அதே நேரத்தில் முறையான கரோனா சோதனைகளை நடத்துவதில்லை என ஏகப்பட்ட விமர்சனங்களை மத்திய அரசின் அறிக்கை சொல்கிறது.
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்துவது என்பது மட்டும்தான் ஆறுதலான நல்ல விஷயம் என மத்திய அரசு குறிப்பிடுகிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையைப் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மூலமாக மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
அதற்குப் பதிலளித்த மோடி, "ஊரடங்கை இனிமேலும் நீட்டிக்க முடியாது. ஊரடங்கு என்பது கரோனாவை எதிர்கொள்வதற்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை தயார் செய்து கொள்வதற்குக் கையாளும் ஒரு போர்முறை. ஊரடங்கை மேலும் அதிகப்படுத்தினால் பட்டினிச் சாவுகள் அதிகமாகும்.
அடுத்த இரண்டு வருடத்திற்கு கரோனா தமிழக மக்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒரு நோய். இதற்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படாவிட்டால் அனைவரும் இந்த நோயில் சிக்குவது உறுதி. அதனால் மரணம் வருமா? பிழைத்துக்கொள்வோமா? என்பதையெல்லாம் அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்கிறார்கள் தமிழக மருத்துவர்கள்.