ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது தற்போதைய திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகரான திருப்பத்தூர் நகரம் திமுகவின் கோட்டையாக இருந்தது. அப்படிப்பட்ட கோட்டை தற்போது உட்கட்சி மோதலால் பலமிழந்து வருகிறது. கட்சி நிர்வாகிகளின் மோதல் வெளிப்படையாக நடக்கத் துவங்கியுள்ளது. திருப்பத்தூர் நகர கழகத்தின் சார்பில் கட்சியின், மாவட்ட மாணவரணிச் செயலாளர் மீது தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வெளிப்படையாக தீர்மானம் இயற்றியிருப்பது மாவட்ட திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் திருப்பத்தூர் நகர திமுக அவைத்தலைவர் இளங்கோவன் தலைமையில் கூடிய நகர கழக நிர்வாகிகள், வேலூர் மேற்கு (திருப்பத்தூர் மாவட்டம்) மாவட்ட மாணவரணி மாவட்ட அமைப்பாளர் டி.கே.மோகன் என்கிற ஜிம்மோகன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து தீர்மானம் இயற்றியுள்ளனர். இந்தத் தீர்மான நகலைக் கட்சித் தலைமைக்கு அனுப்பிவைக்க, இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீர்மானம் குறித்து திருப்பத்தூர் ந.செ ராஜேந்திரனிடம் நாம் கேட்டபோது, நகர கமிட்டி கூடி தீர்மானம் இயற்றி தலைமைக்கு அனுப்பியுள்ளோம். இது உட்கட்சி பிரச்சனை என்பதோடு முடித்துக்கொண்டார்.
சந்திரசேகர்
மாவட்ட பிரநிதிகளான பத்மநாபன், சந்திரசேகர் இருவரும் நம்மிடம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மோகன், தொடர்ச்சியாக கட்சி விரோதபோக்கிலேயே செயல்படுகிறார். கட்சி எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் அதில் வந்து கலந்து கொள்வதில்லை. கட்சியினர் கலந்து கொள்ள வந்தாலும் அவர்களைத் தடுப்பது, கட்சி கூட்டத்துக்கு போகக்கூடாது என சரக்கும், செலவுக்கு பணமும் தரும் ஒரே கட்சி நிர்வாகி அவர் தான். நகரத்தில் கந்துவட்டிக்கு பணம் தந்துவிட்டு வீடுகளை மிரட்டி எழுதி வாங்குவது, கடைகளைக் காலி செய்ய வைப்பது எனச் செயல்படுகிறார். அவர் மீது மட்டும் நகர காவல்நிலையத்தில் அரசியல் புகாராக இல்லாமல் கந்து வட்டிப் புகார், கட்டப் பஞ்சாயத்துப் புகார் எனப் பல புகார்கள் உள்ளன.
நகரின் பிரபலமான வசதியான குடும்பத்தார், அவசரத்துக்கு வெறும் 5 லட்ச ரூபாய் கடன் வாங்கினார்கள் மோகனிடம். கடனுக்கான வட்டி, வட்டிக்கு வட்டி, வட்டிக்கு மீட்டர் வட்டி எனப்போட்டு 1.5 கோடி ரூபாய் கல்யாண மண்டபத்தை மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டார்.
மா.பி பத்மநாபன்
மற்றொரு நகைக்கடைக்காரர் குடும்பமும் ஊரைவிட்டே போனது. போலி பத்திரம் உருவாக்கி புனிதன் என்கிற தீவிர கட்சி விசுவாசியின் வீட்டை அபகரிக்க முயல அவர் கட்சி தலைவருக்கு புகார் அனுப்பிவிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார். அதேபோல் நீதிமன்றம் உத்தரவிட்டும் கட்சி நிர்வாகி அன்பழகன் (அமைச்சர் வீரமணியின் அக்கா கணவர்) வீட்டை காலி செய்யாமல் ரவுடிஸம் செய்கிறார் மோகன். அப்படிப்பட்டவர் நகரச் செயலாளர் மீது பொய்யாக புகார்களை தலைமைக்கு அனுப்புகிறார், தலைமையும் விசாரிக்கிறது.
நகர கமிட்டியில் இருப்பவர்கள் பாரம்பரிய கட்சியினர். ந.செ. 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் பதவியில் உள்ளார். முழு நேர கட்சி ஊழியராக இருந்து கட்சிக்காக பலப்பல வழக்குகளை வாங்கியர். இன்றும் இங்கு கட்சி பலமாக இருக்கிறது, கடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் திருப்பத்தூரில் உள்ள 6 சங்கங்களின் தலைவர் பதவியில் 4 பதவிகளை ஆளும்கட்சியான அதிமுக பிரமுகர்களிடம் சண்டைப்போட்டு திமுகவுக்காக பெற்று தலைவராக்கினார்.
திருப்பத்தூர் தொகுதி தேர்தல் வரலாறு, நகராட்சி தேர்தல் வரலாறுகளைப் புரட்டிப்பார்த்தால் நிர்வாகிகளின் உழைப்பு தெரியும். அப்படிப்பட்ட நிர்வாகிகள் மீது பொய்யாக புகார்களைச் சொல்வது எந்த விதத்தில் சரியானது அதனால் தான் நடவடிக்கை எடுக்கச் சொல்கிறோம் என்றார்கள்.
மோகன்
குற்றச்சாட்டு குறித்து மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மோகனிடம் நாம் கேட்டபோது, என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கச்சொல்லி தீர்மானம் இயற்றி புகார் அனுப்பியிருப்பது நீங்கள் சொல்லிதான் எனக்குத் தெரியும். நான் வட்டிக்கு விடுகிறேன் எனச் சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு. நான் காண்ட்ரக்ட் எடுத்து வேலைகளைச் செய்து வருகிறேன். கரோனா காலத்தில் என் சொந்த பணத்தில் மக்களுக்கு அவ்வளவு உதவிகள் செய்துள்ளேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அப்படிப்பட்ட உதவிகளை எங்கள் கட்சியிலோ, மாற்று கட்சியிலோ யாரும் செய்ததில்லை. என் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் என்னைப்பற்றி தப்பும் தவறுமாக பேசுகிறார்கள். உட்கட்சி தேர்தலில் ந.செ பதவிக்கு போட்டியிடவுள்ளேன். அதனால் இப்போதே என்மீது பிரச்சனையைக் கிளப்புகிறார்கள் என்றார்.
ராஜேந்திரன்
தீவிரமான கட்சி நிர்வாகிகள் நம்மிடம், தற்போது ந.செவாக உள்ள ராஜேந்திரன் ஒருகாலத்தில் அதிரடி அரசியல் செய்தவர். கட்சிக்காரன் எந்தப் பிரச்சனையில் சிக்கினாலும் காப்பாற்றுவார். இதனால் உட்கட்சியில் பல எதிரிகள் அவருக்கு உள்ளனர். எம்.எல்.ஏ. தேர்தலில் சீட் தரப்பட்டு அவர் மீதான அந்தப் பிம்பமே அவரது தோல்விக்கு காரணமானது. தோல்விகளுக்குப் பின் அந்தப் பிம்பத்தை மாற்றிக்கொண்டு கட்சிப் பணி செய்கிறார்.
திருப்பத்தூரின் பெரிய பைனான்சியரான பள்ளி ஆசிரியர் ரவியின் மகளுக்கும் மருத்துவர் தினேஷ்குமாருக்கும் கல்யாணமாகிடுச்சி. மருத்துவரோட மனைவியும் டாக்டர், மேல்படிப்பு சென்னையில் படிச்சிக்கிட்டு இருகாங்க, தினேஷ்குமார் இங்கயே இருக்கார். தன்கிட்ட சிகிச்சைக்காக வந்த ஒரு இஸ்லாமியரின் திருமணமாகாத இளம் பெண்ணிடம் நெருக்கமாகப் பழக, அது குடும்பப் பிரச்சனையானது. கடந்த மாதம் டாக்டரின் மாமனார் ஆட்களோடு சென்று கிளினிக்கிலேயே தனது மருமகனையும், அந்த இஸ்லாமிய பெண்ணையும் அடித்து உதைக்க அந்தத் தெருவே அங்கு கூடிவிட்டது.
போலிஸுக்கு தகவல் சொல்ல சம்பவயிடத்துக்கு அதிகாரிகள் வந்தனர். ரவி குடும்பத்துக்கு நெருங்கிய உறவினர் ந.செ ராஜேந்திரன், அதனால் பெண் வீட்டார் அவரை வரவைத்தனர். அவர் வந்து, இது குடும்பப் பிரச்சனை, போலிஸ்ல புகார் தந்தால் நல்லாயிருக்காது, பேசி தீர்த்துக்கறோம், இல்லன்னா பிறகு புகார் தர்றோம்னு சொல்ல போலிஸ் போய்விட்டது. அதன்பின்னர் பஞ்சாயத்து பேசப்பட்டு, மருத்துவர் எச்சரிக்கப்பட்டு, அந்த இஸ்லாமிய பெண்ணை மிரட்டி எழுதிவாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டனர். கணவன் – மனைவி இருவரும் ஒற்றுமையாக உள்ளார்கள்.
அந்த இஸ்லாமிய பெண் தரப்பும் அமைதியாக ஒதுங்கிவிட்டது. பஞ்சாயத்து பேசி பிரச்சனையைத் தீர்த்து வைத்த ந.செ மீது, இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கிறார் என விவகாரத்தில் சம்மந்தப்படாத யாரோ ஒருவர் தலைமைக்கு புகார் அனுப்பியிருக்கிறார்.
சிறுபான்மை இனத்துக்கு எதிராக எப்படி நடந்து கொள்ளலாம் என ந.செவிடம் தலைமை நடத்திய விசாரணைக்கு அவர் பதில் சொல்லிவிட்டு வந்துள்ளார். இப்படியொரு புகாரை தலைமைக்கு அனுப்பியது மோகன் டீம் தான் என்பதைத் தெரிந்துகொண்டு அதில் அதிருப்தியான ந.செ, மோகனால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளைத் தொகுத்து தலைமைக்கு புகார் அனுப்பியதோடு, தீர்மானம் போட்டும் தலைமைக்கு அனுப்பியிருக்காங்க. தலைமை விசாரித்துவிட்டு, தீர்ப்பு எழுதும் பொறுப்பை கழக பொருளாளரான துரைமுருகனிடம் ஒப்படைத்துள்ளது. அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது தெரியவில்லை என்றார்கள்.
உட்கட்சி பிரமுகர்கள் மோதலில் கட்சி பலவீனமாக்கிக்கொண்டு இருக்கிறது. தலைமை முடிவை சரியாக எடுக்கவில்லையென்றால் இழப்பு கழகத்துக்கு தான் என முணுமுணுக்கிறார்கள் உடன்பிறப்புகள்.