தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வகித்து வந்த, சென்னை மேற்கு மா.செ. பதவி காலியானதால், அங்கே பொறுப்பாளராக கட்சியின் சீனியர் ஒருவரை நியமிக்க வேண்டுமென கட்சியின் சீனியர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.
இந்த நிலையில், அவர்களின் கோரிக்கையைப் புறக்கணித்துவிட்டு மேற்கு மாவட்ட பொறுப்பாளராக, உதயநிதிக்கு நெருக்கமான இளைஞரணி சிற்றரசுவை நியமித்திருக்கிறது அறிவாலயம். சீனியர்களான பகுதி செயலாளர்கள் பலர் இருக்கும் நிலையில், சிற்றரசுவை நியமிக்க உதயநிதி காட்டிய அக்கறையை மு.க.ஸ்டாலினால் மீற முடியவில்லை எனச் சொல்கிறார்கள்.
மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைக்காததால் கு.க.செல்வம் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் கு.க.செல்வம், 1997ல் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தார். தற்போது திமுக சார்பில் போட்டியிட்டு ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
திமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கும் கு.க.செல்வம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர் நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சென்னை மேற்கு திமுகவினரிடம் விசாரித்தபோது, "மா.செ.பதவி கிடைக்காததில் கு.க.செல்வம் அதிருப்தியில் இருக்கிறார்" என்கின்றனர். பாஜக தரப்பில் விசாரித்தபோது, "திமுகவிலிருந்து பாஜகவில் அண்மையில் இணைந்த வி.பி.துரைசாமி மூலம், கு.க.செல்வத்திடம் எங்கள் கட்சி தலைமை பேசிக் கொண்டிருக்கிறது, கு.க.செல்வம் நல்ல முடிவை எடுப்பார் " என்கிறார்கள்.