Skip to main content

பதவியை எந்தக் காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார் இ.பி.எஸ்! - கே.சி.பழனிசாமி

Published on 01/10/2020 | Edited on 02/10/2020

 

கடந்த 28ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கூறுகையில், அக்டோபர் 7-ஆம் தேதி அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.

 

இந்தநிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், முதல்வர் யார் என்பதில் போட்டி கிடையாது. அடுத்த ஆட்சி அ.தி.மு.க ஆட்சிதான். அதில் அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்றார். மேலும், முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் ஒன்றாக இணைந்து வருகின்ற 7 ஆம் தேதி அறிவிப்பார்கள் என்றார்.

 

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, ''இருவருக்குள் ஒத்த கருத்து இல்லாத நேரத்தில், இருவருக்குள் உடன்பாடு ஏற்படாத நேரத்தில் ஏன் செயற்குழுவை இவர்கள் கூட்டினார்கள். பேசி முடித்துவிட்டு அக்டோபர் 7ஆம் தேதி செயற்குழுவைக் கூட்டியிருக்கலாம். 7ஆம் தேதி முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படும் என்கிறார்கள். அதற்குள் திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடி பழனிசாமி அடுத்த முதல்வர் என்கிறார். நடப்பவையை பார்க்கும்போது இனி இருவரும் இணைந்து செல்வதற்கான வழிகள் அடைபட்டிருப்பது தெரிகிறது. 

 

எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை எந்தக் காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார். செயற்குழு, பொதுக்குழுவில் 90 சதவிகித பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்கிறார். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இரு அணிகளும் சேர்ந்தபோதே உடனே அந்தக் குழுவை அமைத்திருக்க வேண்டும். அப்போது விட்டுவிட்டார். இப்போது அதனை அமைக்க வேண்டும் என்று சொல்கிறார். 

 

Ad

 

டெல்லி கூப்பிட்டு இருவரிடமும் பேசினால்தான் பிரச்சனை முடியும். ஆனால், டெல்லி தலையிடுவதை அ.தி.மு.க.வினர் விரும்பவில்லை. அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதையே விரும்பவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அவர்களாகவே வெளியே போகட்டும் என்று எடப்பாடி தரப்பு நினைக்கிறது. அவர்கள் வெளியேற்றட்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நினைக்கிறது'' என்றார். 
 

 

 

சார்ந்த செய்திகள்