மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம், 'சூரரைப் போற்று'. படம் வெளிவருவதற்குப் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில், ஓ.டி.டியில் படம் வெளியிடப்பட்டது. ஒரு சாமானியனின் விமானக் கனவு என்னவாயிற்று என்பதை நமக்கு மிக நேர்த்தியாகக் கூறியிருப்பார் படத்தின் இயக்குநர். படத்தில் மாறனாக வரும் சூர்யா கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். அந்தப் படத்தின் இறுதிக் காட்சியில், ஒரு பெண் விமானத்தை ஓட்டி வருவது போன்று காட்சி அமைந்திருக்கும். அந்தப் பெண் பெயர் வர்ஷா. அவர் நிஜ விமானியும் கூட. படத்தில் நடித்த அனுபவம், விமானியாக தான் பட்ட கஷ்டங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நம்முடன் பகிந்துகொண்டார். அவரின் சுவாரசிய உரையாடல்கள் இதோ,
'சூரரைப் போற்று' படத்தின் கதையே ஒரு மிடில் கிளாஸ் பையன் மிகப்பெரிய இலக்கை நோக்கி ஓடுவதுதான். அதைச் சுற்றியே இந்தக் கதை அமைப்பும் அமைந்திருக்கும். நீங்கள் நிஜ பைலட், இதற்காகப் பல்வேறு கஷ்டங்களை நிச்சயம் கடந்திருக்க வேண்டும். இந்த இந்தியச் சூழலில் ஒரு பெண் இந்த இடத்தை எளிதில் அடைய முடியும் என்று நினைக்கிறீர்களா?
நிச்சயமாக அது எளிதான காரியம் அல்ல. அதற்காகக் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம். நிறையப் போராட்டங்களைக் கடந்த பிறகுதான், இதை அடைய முடிந்தது. இது எனக்கு மட்டும் அல்ல, சாதித்த அனைவருக்கும் முழுவதுமாக பொருந்தக்கூடியது. எனவே போராட்டம் என்பது சாதிப்பதற்கு உறுதுணையாகவே இருக்கும்.
சாதாரணமாக சாலையில் பெண் ஒருவர் பைக் ஓட்டிச் சென்றாலே பலர் ஆச்சிரியமாகப் பார்ப்பார்கள், சிலர் திட்டுவார்கள், பலர் பெருமையாகப் பேசுவார்கள். ஆனால் பைலட் என்பது மிக முக்கியப் பொறுப்பு. அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டிய கடமை உள்ள பொறுப்பும் கூட. அப்படி இருக்கையில் அதில் ஏதேனும் சிரமம் இருப்பதாக நினைக்கின்றீர்களா?
முடிவு எடுக்கும் திறன் என்பது அந்தத் துறையில் மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால் விமானம் இயக்குதலில் இது போன்ற பல இக்கட்டான சூழ்நிலைகளை நாம் அடிக்கடி சந்திக்க நேரும். எனவே யோசிக்க சிறிதும் நேரமின்றி இருக்கும் நிலையில், சரியான முடிவை நாம் மிகச் சிறிய கால அளவில் எடுத்தாக வேண்டும். எனவே ஆளுமை என்பது இந்தத் துறையில் மிக முக்கியமான ஒன்று. அது வேலை செய்கின்ற இடத்தில் மட்டும்தான். எல்லா இடங்களிலும் இல்லை.
இந்தத் துறையிலும் ஆண் பெண் என்ற பாகுபாடு மற்ற துறைகளைப் போன்று இருக்கிறதா?
அப்படி இல்லை, ஆனால் என்னிடம் பலர், பெண்ணாக இருப்பதால், ஈஸியா ட்ரெயினிங் கிடைத்திருக்கும் என்று கூறி இருக்கிறார்கள். எங்கள் துறையில், ட்ரெயின்ங் என்பதை குறைத்துக் கொள்ளவே முடியாது. நாங்கள் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். எனவே, இந்தத் துறையில் இருக்கின்ற அனைத்தையும் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும். ஆணுக்குக் கொடுக்கின்ற அதே பயிற்சியைத்தான் நாங்களும் பெற வேண்டும். அதைத்தான் பயிற்சியாளர் எங்களுக்கும் கற்றுத்தருவார். 200 மணி நேரம் பயிற்சி என்றால், அதனை நாங்கள் முழுவதும் கற்றிருக்க வேண்டும். அதற்கான பெட்ரோல் செலவு இருக்கிறது. எனவே இது காஸ்ட்லியான பயிற்சியாகத்தான் இருக்கும். ஆர்வம் மட்டும் இருந்தால், எந்தத் துறையிலும் பெண்கள் சாதிக்கலாம்.