2018 நவம்பர் 16 ந் தேதி புரட்டிப் போட்ட கஜா புயல் ஒட்டு மொத்த மரங்களை அடியோ சாய்த்துப் போட்டது. நிழலுக்கு கூட சாலை ஓரத்தில் நிற்க முடியாமல் மக்கள் தவித்தனர். இந்த நிலையில் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நீடாமங்கலத்தில் தொடங்கிய “கிரீன் நீடா” அமைப்பினர் கிராமங்கள் தோறும் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதுடன் ஊருக்கு ஊர் புதிய கிளைகளை உருவாக்கி தன்னார்வ அமைப்பினர், இளைஞர்கள், மாணவர்களை இணைத்து திருவாரூர் மாவட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் சாலை ஓரங்களில் நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் காலத்தை விட குறுகிய காலத்தில் நிழல் தரும் ஆலமரங்கள் போன்ற மரங்களின் கிளைகளை வெட்டி நட்டால் விரைவிலேயே துளிர்த்து பலன் கொடுக்கும் என்ற நமது ஆலோசனையை ஏற்றனர். புயல் தாக்கி ஓராண்டு முடிந்த நிலையில் 2019 நவம்பர் 17 ந் தேதி மன்னார்குடி – நீடாமங்கலம் சாலையில் சுமார் 12 கி.மீ தூரத்திற்கு ஆலம்போத்து, உதியம் போத்து, வாதமடக்கி உள்பட பல வகையான மரப் போத்துகளை கிரீன் நீடா வுடன் நெடுஞ்சாலைத்துறை, சமூக ஆர்வலர்கள், உள்ளூர், வெளியூர் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து 2100 மரப் போத்துகளை நட்டனர்.
நடப்பட்ட போத்துகள் நம்பிக்கை கொடுத்தது தொடர்ந்து மழை இருந்ததால் ஒரு மாதத்திலேயே துளிர்விடத் தொடங்கியது. 2100 போத்துகளில் 2000 போத்துகள் துளிர்க்கத் தொடங்கியது. போத்துகள் துளிர்க்கத் தொடங்கியதும் நட்ட இளைஞர்களுக்கும் நம்பிக்கை பிறந்தது சில வருடங்களிலேயே மரங்களாகி நிழல் கொடுக்கும் என்றனர்.
மழைக் காலம் முடிந்தது. கடுமையான வெயில் தொடங்கி விட்டது. ஆனால் நல்ல முறையில் துளிர்க்கும் சுமார் 2 ஆயிரம் உயிர்களுக்கு உணவாக தண்ணீர் இல்லை. இதைப் பார்த்த கிரீன் நீடா வாரத்தில் 2 நாட்கள் டேங்கர் மூலம் தண்ணீர் ஊற்ற திட்டமிட்டனர். அதற்கான ஒரு நாளைக்கு ரூ. 4 ஆயிரம் வரை செலவாகிறது. அதாவது தொடர்ந்து 12 வாரங்களுக்கு தண்ணீர் ஊற்றினால் உயிருக்கு போராடும் மரப் போத்துகளை காப்பாற்றலாம் என்ற நிலையில் சில வாரங்கள் தங்கள் கையில் இருந்து செலவுகளை சமாளித்தனர். ஆனால் இன்னும் பல வாரங்கள் தண்ணீர் ஊற்ற வழியில்லை. என்ன செய்வது என்று திக்கு தெரியாமல் கவலையுடன் நிற்கிறார்கள் இளைஞர்களும், மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் நெடுஞ்சாலைத்துறையினர் தண்ணீர் ஊற்றி வளருங்களேன் என்று சிலர் அதிகாரிகளிடம் கேட்க.. எங்களால் முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டனர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்.
நெடுஞ்சாலைத்துறையினர் புயல் பாதித்த மாவட்டங்களில் நட்ட மரக்கன்றுகளுக்கே தண்ணீர் ஊற்றாமல் வாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு எப்படி தண்ணீர் ஊற்றுவார்கள் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளனர் இளைஞர்கள்.
தற்போது தண்ணீர் ஊற்ற கொடையாளர்கள் தேவைப்படுகிறார்கள். அமைச்சர் காமராஜ், எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டவர்களும் கிரீன் நீடா விழாவில் கலந்து கொண்டு பாராட்டியுள்ளனர். இப்போது நெருக்கடியான நிலையில் அவர்களும் சில வாரங்கள் வாடும் மரப் போத்துகளுக்கு தண்ணீர் ஊற்றி உயிர் காக்க உதவலாம்.
மரங்களின் மீது அக்கரையுள்ள சமூக ஆர்வலர்கள் 2 ஆயிரம் மர உயிர்களை காக்க மரங்களின் காதலர்கள் எந்த வகையிலாவது உதவலாம் என்ற கோரிக்கையை கண்ணீரோடு முன் வைத்துள்ளனர் கிரீன் நீடா அமைப்பினர். நன்கு வளரும் மரப் போத்துகளுக்கு டேங்கரில் தண்ணீர் ஊற்றுவதைப் பார்த்து சிலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்துள்ளனர்.
எங்கள் உயிரை காக்க நீங்கள் இப்போது உதவினால் உங்கள் சந்ததிக்கு எப்போதும் நிழல் கொடுப்போம் என்பது போல சோகமாக் பார்க்கின்றன துளிர்விட்டு வளரும் மரக்குழந்தைகள்..
உயிருக்கு போராடும் மரங்களை காப்பாற்ற உதவிகள் செய்ய நினைக்கும் நல்ல உள்ளங்கள் கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு 9940220986 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு நிலை அறிந்து உதவலாம்.
“மரங்களை நாம் வளர்த்தால் மரங்கள் நம்மை வளர்க்கும்”