Skip to main content

ஜக்கி ஆசிரமத்தில் தொடரும் மர்மம்; மாயமான சுவாமி பவதுத்தா! கதறித் துடிக்கும் உறவுகள்

Published on 10/03/2023 | Edited on 10/03/2023

 

Person missing in Jaggi's Isha

 

மர்மங்களையும் புதிர்களையும் உள்ளடக்கிய கோவையின் ஈஷா யோகா மையத்தில் அண்மையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மையத்தின் தன்னார்வலர் ஒருவர் காணாமல் போனது ஏரியாவை த்ரில்லில் உறைய வைத்திருக்கிறது.

 

மார்ச் 6 அன்று ஈஷா யோகா மையத்தில் காணாமல் போன தனது தம்பியை பற்றி விசாரிக்க ஈஷா சென்ற அவரது அண்ணனிடம் மையப் பொறுப்பாளர்கள், ‘அவர் தன்னிச்சையாக எங்களிடம் சொல்லாமல் வெளியே சென்றுவிட்டார்’ என்று சொன்னவர்கள் சி.சி.டி.வி. காட்சி ஒன்றை மட்டும் காட்டியிருக்கிறார்கள். இதனால் பதற்றத்தில் மிரண்டு போனவர், சம்பந்தப்பட்ட ஆலந்துறை காவல் நிலையத்தில், ஈஷாவில் மாயமான தன் தம்பியைக் கண்டுபிடித்து தரும்படி புகார் மனு கொடுக்கச் சென்றபோது அவரைப் பின் தொடர்ந்து ஈஷாவின் ஆட்களும் சென்றுள்ளனராம்.

 

அவரின் புகார் மனுவை வாங்க மறுத்த காவல் நிலைய அதிகாரிகள், ஏற்கனவே ஈஷா மையத்திலிருந்து நிர்வாகம் புகார் செய்துள்ளது. அதனை விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லியுள்ளனர். அவ்வளவாக எழுதப் படிக்கத் தெரியாத அவரிடம் வாக்கு மூலம் ஒன்றை வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டார்களாம். தொடர்ந்து உடன் வந்த ஈஷா மையத்தவர்கள், உங்கள் தம்பியைக் கண்டுபிடித்து விடுவார்கள் ஒரு வாரம் பொறுங்கள். இது சம்பந்தமா யாரிடமும் குறிப்பா ஊடகங்களில் பேசக்கூடாது என்று கண்டிப்பாகவும் மிரட்டலாகவும் சொல்லி அனுப்பியதில் மிரண்டு போனவர் வேறு வழியின்றி ஊர் திரும்பியிருக்கிறார்.

 

Person missing in Jaggi's Isha

 

புகார் கொடுக்கச் சென்றவரிடம் புகார் மனுவை வாங்க மறுத்த போதிலும் அவரிடம் காவல் நிலையம் வாக்கு மூலம் வாங்க வேண்டிய அவசியமென்ன. தன்னிச்சையாக வெளியே சென்றுவிட்டார் என்று சொன்ன ஈஷா மையம், சம்பவம் குறித்து வெளியே மீடியாக்களிடம் பேசக் கூடாது என்று கொடுபிடி செய்ய வேண்டும் என்பன போன்ற பல விஷயங்கள், காணாமல் போனவர் பர்றிய மர்மத்தை ஆழப்படுத்திய நேரத்தில் பாதிக்கப்பட்டவரின் உறவினர் பூர்விகம் பற்றி பரவலாக விசாரணை மேற்கொண்டதில்.

 

தென்காசி மாவட்டத்தின் பாவூர்சத்திரம் பக்கமுள்ள குறும்பலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வர, நாம் அங்கே விரைந்தோம். குறும்பலாப்பேரியைச் சேர்ந்த செல்லையா என்பவருக்கு மூன்று மகன்கள் ஒரு மகள். திருமலை, ராமசாமி, கணேசன் ஆகியோரில் மூன்றாவது மகன் கணேசன் என்பவர் தான் ஈஷாவில் காணாமல் போனவர்.

 

அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த இந்தக் குடும்பத்தினர் விவசாயம் செய்தும் கூலி வேலை செய்தும் வாழ்க்கையை ஓட்டி வருபவர்கள். நாம் அவர்களின் குடும்பத்தைச் சந்தித்த போது உடன் பிறந்தவன் என்ன ஆனான் எனத் தெரியாத பதற்றத்திலிருந்தார்கள். அவர்களை சகஜமான நிலைக்குக் கொண்டு வந்த நாம், அவர்களின் தம்பி கணேசன் பற்றிப் பேச ஆரம்பித்த போது மொத்தக் குடும்பத்தாருடன் சேர்ந்து சகோதரர்களான மூத்தவர் திருமலை மற்றும் ராமசாமியும் தங்களைத் திடப்படுத்திக் கொண்டு பேசினார்கள்.

 

Person missing in Jaggi's Isha

 

“வேலை பாத்தாத்தான் குடும்பம் பாடு கழியும்றதால் விவசாயமும், கூலி வேலையும் தான் பாத்து வரோம். அப்பாவுக்கு வயசான காலம். அதனால குடும்பப் பொறுப்புகள் ஏகமாக கவனிச்சோம். தம்பி, தங்கை திருமணமாகிப் போனாலும் நாங்க ஒன்னாத்தானிருப்போம். தம்பி கணேசனும் எங்கூடத்தான் இருந்தான். எங்க குடும்பத்தில் நாங்க எழுதப் படிக்கத் தெரியாதவங்க. அதனால தம்பி கணேசனாவது படிக்கட்டுமேன்னு நானும் என் குடும்பமும் சேர்ந்து பாடுபட்டோம். எவ்வளவு தான் நாங்க கஷ்டப்பட்டாலும், கணேசன் படிப்பு நின்றக் கூடாதுன்னு கடன் பட்டு, அவன ஐ.டி.ஐ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் வரை படிக்க வச்சேம்யா. அவம் நல்லா படிச்சதால அந்தக் கல்லூரியே அவன கோவைல உள்ள கம்பெனிக்கு 1994ல் வேலைக்கு அனுப்பி வைச்சது.


எந்த வேலைன்னாலும் சரி, அவனோட தொழில் சம்பந்தம்னாலும் அந்த வேலைய பிசிறில்லாம சுத்தமா செய்யுறதோட தன்னோட நிர்வாகத்துக்கு உண்மையாவும் விசுவாசமாகவுமிருப்பான். 13 வருஷம் கோவை கம்பெனில் வேலை பாத்த கணேசன், வாங்குற சம்பளத்த அப்படியே வீட்டுக்கு அனுப்பிடுவாம். அடிக்கடி பேசுவாம். அவனுக்கு கல்யாணம் பண்ணனும்னு நா பொண்ணு பாக்கறத தெரிஞ்ச கணேசன் எனக்கு கல்யாணம் வேண்டாம் அதுல எனக்கு விருப்பமில்ல என்னால ஒரு பொண்ணோட வாழ்க்கை கெட வேண்டாம்னு சொல்லிட்டதால சரிப்பா உன்னிஷ்டம்னு வுட்டுட்டேன். இவனோட வேல விசுவாசத்தப் பாத்த கோவை கம்பெனி பெரிய முதலாளி, கணேசன புடிச்சப் போயி அவன நல்லா வச்சுக்கிட்டார்.


இதுக்கிடைல திடீர்னு 2007ல் கணேசன் யோகா மையத்திற்குப் போனது எனக்குத் தெரியாது. 2008ல் எங்கப்பா காலமாயிட்டார். அதுக்குப் பின்னாடி என்ட்ட பேசுன கணேசன், நா ஈஷா யோகா மையத்துக்கு தன்னார்வு சேவைக்காக வந்துட்டேம்ணேன்னு சொன்னதும் எனக்கு ஒரு மாதிரியாயிடுச்சி. மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலைகளப் பாக்கேம் என் பாதை வேற, ஒங்க பாதை வேறயாயிடுச்சி; என்ன இப்படியே வுட்றுங்க நல்லா உழையுங்க. நிறைவாயிருப்பீங்கன்னும், குடும்பத்தப் பாத்துக்குங்கன்னு சாமியார் மாதிரி பேசுனவும் எம் பேரு  சுவாமி பவதுத்தான்னு சொன்னாம்.

 

Person missing in Jaggi's Isha

 

ஈஷாவுக்குள்ள போனதிலருந்து அவம் அடிக்கடி என்ட்டப் பேசமாட்டாம். நா செல்ல பேசுன உடனே எடுக்கமாட்டாம். கொஞ்ச நேரம் கழிச்சி அவம் பேசுவாம். ரெண்டு மூனு வார்த்ததாம் பேசுவாம். நா அவம் பத்தினது கேட்டா ஒடனே போன கட் பண்ணிருவாம். எங்க இருந்தாலும் அவம் நல்லாயிருக்கட்டும்னு விட்டுறுவேம். ஈஷாவுக்குள்ள போனப்ப, அவம் வீட்டுக்கு சம்பளம் அனுப்புறதேயில்ல. நிறுத்திட்டாம். என்ன சம்பளம் என்ன சாப்பாடுன்னே தெரியாது. அதக் கேட்டாலும் சொல்லமாட்டாம்.


அவம் பத்துன வெவரம் சரியா அடைபடலைன்றதால, அவும் ஈஷாவுக்குள்ள போன சில வருஷம் கழிச்சி நா ஈஷாவுக்குப் போனோம். இப்ப அவங்கூட இருந்தவங்கள முக்கியமான நிர்வாகிங்கன்னு சொன்னாம். அப்ப அங்க வந்த ஈஷா சாமிய எங்கண்ணன்னு அவருக்கு அறிமுகம் பண்ணி வைச்சாம். அவரும் வணக்கம் போட்டுட்டுப் போயிட்டாரு. அந்த நேரத்தில அவம் கூட இருந்தவங்க, கணேசன் (சுவாமி பவதுத்தா) உண்மையாவும், விசுவாசமாவும் தொண்டூழியப் பணிகளச் செய்யுறதால் ஈஷாவுக்கு நெருக்கமாயிட்டார். நிர்வாகத்தில மேல் மட்டம் வரை வந்தவரு, முக்கியமான மூணாவது எடத்தில இருக்காருன்னு சொன்னாங்க. அப்ப ஈஷாவுல எனக்கு சாப்பாடு குடுத்தாங்க. எல்லாமே பச்சை பச்சையா இருந்திச்சி எனக்கு அது புடிக்கல. இதையா சாப்புடுறாங்கன்னு எனக்கு ஒரு மாதிரியாயிடுச்சி. நா வெளிய வந்திட்டேம்.


15 வருஷம் ஈஷாவுக்கு உண்மையா உழைச்சி அவருக்கு நெருக்கமாயிருக்காம் தம்பி கணேசன். இந்த நெலமயில 02.03.2023 அன்னக்கி ஈஷாவுலருந்து எனக்கு போன் வந்துச்சி, தம்பி கணேசன் அங்க வந்தாரான்னு கேட்டாங்க. வரலியே. ஏம், என்ன பிரச்சினைன்னு கேட்டப்ப அவங்க பதில் சொல்லல. எங்களுக்கு கெதக்குன்னு ஆயிருச்சி நா உடனே மறு நா ஈஷா போய்ட்டேம். பதற்றத்தில் என்னான்னு கேட்டப்ப, அவ்க நிர்வாகத்தில உள்ளவங்க, ஈஷா சாமி நேபாளம் போய்ட்டார்னு சொன்னவுக, 28.02.2023 அன்னைக்கு கணேசன் மையத்தில் யார்ட்டயும் சொல்லாம தன்னிச்சையா ஆட்டோவுல ஏறிப் போனவரு திரும்ப வரலன்னு சொல்லி, ஒரு வீடியோவக் காட்டுனாக (சி.சி.டி.வி.) நா ஒண்டியாப் போனதால என்னால மேக் கொண்டு கேக்க முடியல. வேற வழி தெரியாம அங்க உள்ள போலீஸ் டேஷனுக்குப் போனேன் (ஆலந்துறை காவல் நிலையம்) அப்ப, மையத்தில உள்ளவங்க எங்கூடவே வந்தாங்க அவங்க கிட்ட நா பேசல.


போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுத்தப்ப அது அவங்க வாங்கல. ஈஷாவுல புகார் குடுத்திருக்காக விசாரிக்கோம்னு சொன்ன இன்ஸ்பெக்டர் என்ட்ட வாக்கு மூலம் வாங்குனவரு, அத வீடியோ பண்ணுனாக. எனக்கு எழுதத் தெரியாததுனால, அதயும் ஈஷா ஆட்களே எழுதினாக. என்னட்டக் கையெழுத்து வாங்கிக் குடுத்திட்டாக. ஒரு வாரம் பொறுங்க இதப்பத்தி யார்ட்டயும் பேசாதீகன்னும் போலீஸ் கண்டுபுடிச்சிரும்னு கொஞ்சம் அழுத்தமாவே சொன்னாங்க தம்பியப் பத்தி வேற விவரமே சொல்ல.


கொஞ்ச நேரம் கழிச்சி என் தம்பி செல் நம்பர்லருந்து எனக்கு போன் வந்திச்சி அதுல பேசுன ஆட்டோ டிரைவர் என்னயக் கேட்டப்ப, ‘என்னோட தம்பி செல்’னு சொன்னேன். ‘அப்படியா என்னோட ஆட்டோவுல அவர் ஏறுனப்ப விட்டுட்டுப் போயிட்டார். வந்து வாங்கிக்குங்க’ன்னு சொன்னவர்ட்ட, எந்த எடத்துக்கு வரணும்னு கேட்டப்ப அவர் சொன்ன இடத்துக்கு நா உடனே போனேன். ஆனா அவரு எங்க தம்பியோட செல்ல ஈஷாவுலருந்து வந்தவங்க வாங்கிட்டுப் போயிட்டாகன்னு சொன்னதும் ஏம் அவுக வாங்கணும்னு எனக்கு சந்தேகமாயிடுச்சி நா எவ்வளவோ பிரயாசப்பட்டும் என்னால அங்க ஒன்னும் முடியாமப் போனதால ஊருக்கு வந்திட்டேம். வெள்ளியங்கிரி மலைக்குப் போனவன் திரும்பலைன்ற ஒரு தகவல் மட்டுந்தாம்யா கெடைச்சது.


15 வருஷம் என் தம்பி ஈஷாவுக்கு விசுவாசமா உண்மையா உழைச்சிருக்காம் பத்து நாளாவுது அவம் என்னானான்னு இது வரைக்கும் தெரியல. சமூகத்தில நாங்க ஆதரவத்தவங்க. எந் தம்பி உசுருக்கு ஈஷா தான் பொறுப்பு. முதல்வரய்யா, எஸ்.பி., கலெக்டர்னு புகார் முறையிடப் போறேன். அவுகளத் தாம்யா நா நம்பியிருக்கேன். எங்களப் போல ஆதரவத்தவுகளுக்கு அவுக தான் கதி என்றார்... கண்ணீர் கொப்பளிக்க உடைந்த குரலில்.


பாதிக்கப்பட்டவர்கள் தென் கடைக் கோடியின் ஒரு சாதாரண குடும்பத்தார்கள் தம்பியைக் காணவில்லை என்றதும் பதைபதைப்போடு மையம் சென்ற அண்ணன் திருமலையிடம் 25.02.2023 அன்று இரவு 7.50 மணியளவில் அன்று கணேசன் தன்னிச்சையாகவே வெளியேறி ஆட்டோவில் சென்றவர் திரும்பவில்லை என்று மைய நிர்வாகிகள் சி.சி.டி.வியைக் காட்டியிருக்கிறார்கள். அவர் எங்கு சென்றார் என்று அப்போது திருமலையிடம் தெரிவிக்கவில்லை. ஆனால் ஈஷா மைய நிர்வாகியான தினேஷ்ராஜாவின் புகாரின் அடிப்படையில் 28.02.2023 இரவு கணேஷன் வெள்ளியங்கிரி பூண்டி மலை கோவில் சென்றவர் மூன்று நாட்களாகியும் வரவில்லை. என்ற விபரங்களோடு க்ரைம் நம்பர் 26/23 மேன் மிஸ்ஸிங் என எப்.ஐ.ஆர். பதிவில் தெரிவித்திருப்பது முரண்பாடானது. ஆட்டோவில் தனியாகச் சென்ற கணேசன் வெள்ளியங்கிரி மலைக் கோவில் தான் சென்றார் என்பது ஈஷா மையத்திற்கு எப்படித் தெரிய வந்தது.


28.02.2023 அன்று காணாமல் போன கணேசன் பற்றி 05.03.2023 அன்று தான் ஆலந்துறை காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவாகியுள்ளது. ஏன் இந்தத் தாமதம். அடுத்து கணேசன் தவறவிட்ட அவரது செல்லை வாங்கிக் கொள்ளுங்கள் என்று திருமலையிடம் சொன்னதும் ஆட்டோ டிரைவரிடமிருந்து வேக வேகமாக வாங்கிய ஈஷா நிர்வாகம் திருமலையிடம் ஏன் ஒப்படைக்கவில்லை. அது கிடைக்கப் பெற்றால் கணேசன் யார் யாரிடம் தொடர்பிலிருந்தார் என்பதை உடனே தெரிய வந்திருக்குமல்லவா.


இதுபோன்ற முரண்பாடுகள் கொண்ட இந்த வழக்கு கணேசன் காணாமல் போனது போல் மர்மாகி விடக்கூடாது.