Skip to main content

டெபாசிட்டுக்கு அதிக வட்டி; 100 கோடி ரூபாய் சுருட்டிய சேலம் நகைக்கடை அதிபர்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

High interest on deposits; Salem jewelry store owner who rolled 100 crore rupees

 

நகைக்கடை பெயரில் டெபாசிட் தொகைக்கு அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, 100 கோடி ரூபாய் சுருட்டிய சேலம் நகைக்கடை உரிமையாளர் உள்ளிட்ட மூவர் மீது, மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம் வலசையூர் சுக்கம்பட்டி மேட்டுத்தெரு, மின்வாரிய அலுவலகம் அருகே வசிப்பவர் சபரி சங்கர் (40). இவர் சேலம் அம்மாபேட்டையை தலைமை இடமாகக் கொண்டு, எஸ்.வி.எஸ். ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நகைக்கடை தொடங்கினார். 

 

இதன் தொடர்ச்சியாக சீலநாயக்கன்பட்டி, தாமரமங்கலம், ஆத்தூர் ஆகிய இடங்களிலும் கிளைகளை தொடங்கியவர், ஒரு கட்டத்தில் வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக நாமக்கல், திருச்செங்கோடு, கோவை, கரூர், அரூர், தர்மபுரி, திருச்சி ஆகிய ஊர்களிலும் நகைக் கடைகளைத் திறந்தார். வாடிக்கையாளர்களை பிக்கப் செய்வதற்காக 6 மாவட்டங்களில் 119 சேவை மையங்களைத் தொடங்கினார். 

 

சபரி சங்கர், தன்னுடைய நகைக் கடைகளில் வழக்கமான தங்கம், வெள்ளி, வைர நகைகளை விற்பனை செய்து வந்தது மட்டுமின்றி மாங்கல்யம், தங்க புதையல் ஆகிய பெயர்களில் தங்கத்தின் பேரில் நகை சீட்டு சேமிப்பு திட்டத்தையும் நடத்தி வந்தார். தவிர, முதலீட்டுத் தொகைக்கு 2.50 ரூபாய் வரை வட்டி வழங்குவதாகக் கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் முதலீடுகளைப் பெற்றார். ஆரம்பத்தில் முதலீடுகளுக்கு உரிய காலத்தில் வட்டித் தொகையை சரியாக வழங்கி வந்ததால், தங்க நகை சேமிப்புத் திட்டத்தை விட ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் எஸ்.வி.எஸ். நகைக் கடையில் நேரடியாக லட்சங்களை டெபாசிட்டாக கொட்டினார்கள். 

 

ஒருபுறம் பல நூறு கோடி ரூபாய் குவிந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாகவே குறித்த காலத்தில் வட்டி மற்றும் அசல் தொகையைத் தர முடியாமல் ஆட்டம் காட்டி வந்துள்ளனர். நகை சீட்டுத் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கும் நகைகள் வழங்காமல் போக்குக் காட்டி வந்துள்ளனர். 

 

சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள இந்தக் கடையின் கிளை அருகில்தான் சொந்தமாக நகை செய்யும் பட்டறை நடத்தி வந்துள்ளனர். நகைகளை ஆர்டர் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத அவகாசத்தில் இந்த பட்டறை மூலம் தயாரித்து விநியோகம் செய்து வந்துள்ளனர். 

 

High interest on deposits; Salem jewelry store owner who rolled 100 crore rupees

 

தீபாவளி பண்டிகையை குறி வைத்து நகை சீட்டுத் திட்டத்தில் சேர்ந்த வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் நகையை கேட்டு கடையில் குவிந்ததால் போதிய அளவில் சரக்கு இருப்பு இல்லாமல் தடுமாறி வந்துள்ளார் சபரி சங்கர். 

 

இந்த நிலையில்தான் தீபாவளிக்கு இரண்டு நாள் முன்னதாக அதாவது நவ. 10ம் தேதி திடீரென்று 6 மாவட்டங்களிலும் இயங்கி வந்த எஸ்.வி.எஸ். நகைக் கடைகளை மூடிவிட்டார் சபரி சங்கர். ஒரே நேரத்தில் சொல்லாமல் கொள்ளாமல் இந்தக் கடைகள் மூடப்பட்டதோடு, சபரி சங்கரின் செல்போனும் சுவிச் ஆஃப் செய்யப்பட்டது. ஏற்கனவே இரண்டு மாதமாக சம்பளம் கொடுக்காமல் சாக்குப்போக்கு சொல்லி வந்துள்ளனர். இந்தக் கடுப்பில் இருந்த ஊழியர்கள் 150க்கும் மேற்பட்டோர், சேலத்திற்கு விரைந்தனர். 

 

வலசையூரில் உள்ள வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, சபரி சங்கருக்குச் சொந்தமான ஜாக்குவார், பி.எம்.டபுள்யூ, ஆடி கார்கள் வீட்டு வராண்டாவில் நிறுத்தப்பட்டு இருந்தன. ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. அதே பகுதியில் 6 கோடி ரூபாயில் அவர் புதிதாக வீடு கட்டி வருவதை அறிந்து, அங்கும் சென்றனர். அங்கேயும் சபரி சங்கரை காணாததால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மூலமாக நகை சீட்டுத் திட்டம், டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கினர். 

 

இந்த நெருக்கடியைத் தொடர்ந்தே எஸ்.வி.எஸ். நகைக்கடை ஊழியர்கள் சேலம் மாவட்ட காவல்துறை எஸ்பி அருண் கபிலனிடம் நேரடியாக புகார் அளித்தனர். இது தொடர்பாக சேலம் மாநகர மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையிலும் புகார் அளித்தனர். 

 

இது தொடர்பாக எஸ்.வி.எஸ். நகைக்கடை ஊழியர்களிடம் பேசினோம். “எஸ்.வி.எஸ். நகைக் கடையில் நகை சீட்டு சேமிப்புத் திட்டத்தை விட, டெபாசிட் திட்டத்தின் கீழ் முதலீடு செய்தவர்கள்தான் அதிகம். மாதம் 2 முதல் 2.50 ரூபாய் வரை வட்டி வழங்கப்படும் என அறிவித்ததால் இந்த திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இங்கு மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்த 150 ஊழியர்களும் நகை சேமிப்பு திட்டம், பழைய நகைகளை வாங்கிக் கொடுத்தது, டெபாசிட் திட்டத்தில் முதலீடுகளை திரட்டியது என சராசரியாக 50 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை திரட்டிக் கொடுத்திருக்கிறோம். 

 

ஆனால், இந்த நகைக்கடை உரிமையாளர் சபரி சங்கர் உறுதியளித்தபடி, குறித்த காலத்தில் டெபாசிட்டுக்கு வட்டியும், நகை சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு நகையும் திருப்பித் தரவில்லை. இதன்மூலம் அவர் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். பல ஆயிரம் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்துள்ளனர். 

 

நவ. 10ம் தேதி அதிகாலை 3 மணி வரை சபரி சங்கர் எங்களுடன் செல்போன் மூலம் தொடர்பில் இருந்தார். ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பள பாக்கியை காலையில் கொடுத்து விடுவதாகச் சொன்னார். நகை சீட்டுத் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு ஸ்டாக்குகள் வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். திடீரென்று அதிகாலை 3.15 மணியளவில் சபரி சங்கரிடம் இருந்து கடையின் சி.ஜி.எம். முரளிக்கு வாட்ஸ்ஆப்பில் நவ. 10 முதல் 12ம் தேதி வரை தலைமையகம் உள்பட அனைத்து கடைகளுக்கும் தீபாவளி விடுமுறை என்று ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த விவரமே காலை 8.15 மணிக்கு மேல்தான் எங்களுக்குத் தெரியவந்தது. 

 

சபரி சங்கரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்திருந்ததால், இதில் ஏதோ உள்குத்து இருப்பதாக அப்போதே எங்களுக்குத் தோன்றியது. சி.ஜி.எம். முரளியும், சி.இ.ஓ. முருகனும், கடையின் உரிமையாளர் வக்கீலைப் பார்க்கச் சென்று இருப்பதாகச் சொன்னார்கள். நவ. 13ம் தேதி கடைகள் திறக்கப்பட்டு விடும் எனக்கூறி எங்களை மடைமாற்றம் செய்ய முயன்றனர். இதற்குள் இந்த விஷயம் வாடிக்கையாளர்களுக்கும் தெரியவந்ததால் அவர்கள் எங்களிடம் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்யத் தொடங்கினர். அதன்பிறகுதான் நாங்கள் காவல்துறையில் புகார் அளித்தோம். கடை உரிமையாளர் சபரி சங்கர் மட்டுமின்றி மோசடியில் உடந்தையாக இருந்த கடையின் சி.இ.ஓ.க்கள் முரளி, முருகன், அப்புராஜ், முருகேசன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குமுறினார்கள் கடை ஊழியர்கள். 

 

நகைக் கடைகளில் நடக்கும் விழாக்கள், வாடிக்கையாளர் சேவை மையங்கள் உள்ளிட்ட எந்த இடத்திற்கும் சபரி சங்கர் நேரில் சென்றது இல்லை. இதனால் ஊழியர்கள் பலர் அவரை நேரில் பார்த்ததே இல்லை என்கிறார்கள். பரிசுத் திட்டங்கள் சம்பந்தமான விழாக்கள், பெஸ்ட் பெர்மார்மர் அவார்டு விழாக்களையும் சி.ஜி.எம்., சி.இ.ஓ.க்கள் மூலமாகவே நடத்தி விடுகின்றனர். கடை உரிமையாளர், பி.எம்.டபுள்யூ, ஆடி, ஜாக்குவார் என வித விதமான சொகுசு கார்களில் வலம் வந்த நிலையில், தன்னிடம் வேலை செய்து வந்த முதன்மைச் செயல் அலுவலர்களுக்கும் 10 சொகுசு கார்களை வாங்கிக் கொடுத்துள்ளார்.

 

தமிழ்ப் பட நடிகை ஒருவரை வைத்து விளம்பரப் படமும் எடுத்துள்ள சபரி சங்கர், மக்களிடம் சுருட்டிய பணத்தை எங்கெங்கெல்லாம் முதலீடு செய்தார் என்ற முழு விவரம் தெரியவில்லை என்றே சொல்லப்படுகிறது.

 

கடை உரிமையாளர் குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தோம். சபரி சங்கர், ஆரம்பத்தில் சேலத்தில் உள்ள கல்யாணம் ஜூவல்லர்ஸ் நகைக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு இருந்து சில ஆண்டுக்கு முன்பு வெளியேறிய அவர், சேலத்தில் தனியாக நகைக் கடையைத் தொடங்கி உள்ளார். 

 

இவருடைய முதல் மனைவி கீர்த்தனா என்றும், அவர் மூலமாக இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் கூறுகின்றனர். கீர்த்தனாவின் தோழி ஒருவர், அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதில் சபரி சங்கரும் அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் வெடிக்க, கீர்த்தனா அவரை சட்ட ரீதியாக பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் அவருடைய தோழியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். சபரி சங்கர், அவருக்கு நெருக்கமான வழக்கறிஞர்கள் மற்றும் ஆடிட்டர்களின் பாதுகாப்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் மூலமாக, நீதிமன்றத்தில் முன்பிணை எடுக்கவும் முயற்சி செய்து வருகிறார். 

 

இது ஒருபுறம் இருக்க, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள எஸ்.வி.எஸ். நகைக் கடைகள் முன்பும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சபரி சங்கர் உள்ளிட்ட மூன்று பேர் மீது மோசடி, நம்பிக்கை துரோகம் செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சேலம் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

 

மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சூர்யா தலைமையிலான மூன்று தனிப்படை காவல்துறையினர், சபரி சங்கர் உள்ளிட்டோரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால்தான், மோசடி செய்யப்பட்ட தொகையின் மதிப்பு மற்றும் அவர் வாங்கிக் குவித்துள்ள சொத்துகள் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். 

 

பக்கத்து வீட்டுப் பையன் போல எளிமையாக தோற்றம் அளிக்கும் சபரி சங்கர், 100 கோடி ரூபாய் வரை சுருட்டிவிட்டு தலைமறைவான சம்பவம் சேலம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்