ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரம், பெயில் கேட்டு டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். இது குறித்து சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது டெல்லி ஹை கோர்ட்.
நீதிமன்றம் வலியுறுத்திய வசதிகளைக் கடந்து சிறப்பு வசதிகள் எதுவும் சிறையில் சிதம்பரத்திற்கு கொடுக்கப்படவில்லை. இரும்புக் கட்டிலில் தான் படுத்துறங்குகிறார். முதல் இரண்டு நாள் தூக்கம் வராமல் அவஸ்தைப்பட்ட அவருக்கு, தற்போது அது பழகிப்போனது. தினமும் காலை, மாலை இரு வேளைகளில் நடைப்பயிற்சி செய்யும் போது, பொருளாதார குற்றங்களை செய்து சிறையில் இருக்கும் கிரிமினல்கள் பலரும் அவருக்கு வணக்கம் வைத்து சினேகம் வைத்துக்கொள்கிறார்கள். தம்பி (கார்த்தி சிதம்பரம்) இங்கே இருக்கும்போது எங்களுக்கு அவர் நல்ல நண்பராக இருந்தார் என சிதம்பரத்திடம் சிறைவாசிகள் பலரும் சொல்லியுள்ளனர். அவர்களிடம் இயல்பாகப் பேசத்துவங்கியிருக்கும் சிதம்பரம், ஒவ்வொருவரின் கதையையும் கேட்டு தெரிந்து கொண்டதுடன், 'நான் வெளியே போனதும் உங்களுக்கு சட்டரீதியாக உதவுகிறேன்' என நம்பிக்கை கொடுத்திருக்கிறாராம் சிதம்பரம்.
இந்த சூழலில், வழக்கறிஞர்களும் சிதம்பரத்தின் மனைவி நளினி மற்றும் மகன் கார்த்தியும் தனித்தனியாக சிதம்பரத்தை சந்தித்துள்ளனர். அப்போது, "உடனடியாக பெயில் கிடைக்கும்னு நம்பிக்கை இல்லை. இன்னும் சில நாட்கள் இங்கேயே இருக்க வேண்டியது இருக்கும்' என வருத்தத்துடன் சொன்னதாக டெல்லியிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன. இதற்கிடையே, "சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்கிற சூழல் வரும்போதுதான் சிதம்பரத்திற்கு பெயில் கிடைக்க வாய்ப்பு உண்டு' என்கிற சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள், ஒரு வேளை பெயில் கிடைக்கும்பட்சத்தில் உடனடியாக சிதம்பரத்தை கைது செய்ய காத்திருக்கிறது அமலாக்கத்துறை என்கின்றனர்.
இந்த நிலையில், சிதம்பரத்தின் சிறை வாழ்க்கையை ஓரிரு மாதங்களுக்கு இழுத்துச் செல்ல துடிக்கும் மத்திய அரசு, சிதம்பரத்தின் மகன் கார்த்திசிதம்பரத்தின் எம்.பி. பதவியை குறி வைத்து காய்களை நகர்த்தி வருவதை அறிந்து அதிர்ச்சியில் இருக்கிறது சிதம்பரத்தின் குடும்பம். இது குறித்து விசாரித்தபோது, சென்னை முட்டுக்காடு கிராமத்தில் சிதம்பரத்தின் மனைவி நளினிக்கு சொந்தமாக 1 ஏக்கர் 16 சென்ட் நிலம் இருந்தது. இதன் பங்குதாரர்களாக கார்த்தியும் அவரது மனைவி ஸ்ரீநிதியும் இருந்தனர். இந்த நிலத்தை கடந்த 2015-16 காலகட்டத்தில் விற்பனை செய்தது சிதம்பரத்தின் குடும்பம்.
தமிழக அரசுக்கு பருப்பு, முட்டை சப்ளை செய்த பிரபல கிறிஸ்டி ஃபுட் நிறுவனம்தான் இந்த நிலத்தை வாங்கியது. ஆனால், நேரடியாக அந்த நிறுவனத்திற்கு விற்பனை செய்தது போல எந்த ஆவணங்களும் இருக்கக் கூடாது என திட்டமிட்ட கார்த்தி சிதம்பரம், பிரபல தொழிலதிபரான ஜே.பி. என்கிற ஜெயப்பிரகாஷிடம் விற்பனை செய்தார். இதனையடுத்து, அந்த நிலம் கிறிஸ்டி ஃபுட் நிறுவனத்திற்கு மடை மாற்றப்பட்டது. நிலத்தை விற்பனை செய்த வகையில் கார்த்தி சிதம்பரத்திற்கு வருமானமாக கிடைத்தது 3 கோடியே 65 லட்ச ரூபாய். இந்த தொகையை செக் மூலம் கொடுத்திருந்ததால் அதனை வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டியிருந்தார் கார்த்தி. அதற்குரிய வரியும் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த நில பரிவர்த்தனை விவகாரத்தில் 1 கோடியே 35 லட்ச ரூபாய் பணமாக கைமாறியிருக்கிறது. அதனை கார்த்தி சிதம்பரம் கணக்கு காட்டாததால் வரியும் கட்டவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், கிறிஸ்டி ஃபுட் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 2017-ல் அந்நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தியது வருமானவரித்துறை. அப்போது கிடைத்த பல ஆவணங்களில் முட்டுக்காடு நிலத்தை வாங்கிய நிலம் தொடர்பான டாகுமெண்ட்டுகளும் அடங்கும். இதனையடுத்து, தொழிலதிபரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கார்த்தி சிதம்பரத்திற்கும் அவரது மனைவி ஸ்ரீநிதிக்கும் சொந்தமான நிலத்தை வாங்கி கிறிஸ்டி ஃபுட் நிறுவனத்துக்கு விற்றதாகவும், அப்படி விற்பனை செய்ததில் 3.65 கோடி ரூபாய் வெள்ளையாகவும், 1.35 கோடி ரூபாய் கறுப்பாகவும் கொடுத்ததாகவும் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார். அதனடிப்படையில், வரி ஏய்ப்பு செய்திருப்பதாக பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் எழும்பூர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி மீது வருமானவரித்துறை 2018-ல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நிச்சயம் அவர் தப்பிக்க முடியாது'' என்கிறது வருமானவரித்துறை வட்டாரம்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ள அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா, வருமான வரித்துறை வழக்கில் சிதம்பரத்தின் குடும்பம் தண்டிக்கப்படும். ஆனால், இந்த விவகாரத்தில் மேலும் பல வில்லங்கங்கள் இருப்பதால் இவ்வழக்கை சி.பி.ஐ.யும் எடுத்து விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறையில் புகார் தெரிவித் திருக்கிறேன் என்கிறார்.
இந்த சூழலில், கார்த்தி சிதம்பரம் எம்.பி.யாகிவிட்டதால், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் அடங்கிய மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு, எழும்பூர் பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்திலிருந்து கார்த்தியின் வழக்கு அண்மையில் மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் கார்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். பதிவாளரும் அது குறித்து விரிவான பதிலை தாக்கல் செய்த நிலையில், கடந்த 9-ந்தேதி இவ் வழக்கு விசாரணைக்கு வந்த போது, கிரிமினல் வழக்குகளை எந்த ஒரு கோர்ட்டிலிருந்தும் மற்றொரு கோர்ட்டுக்கு மாற்ற அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இருக்கிறது என சொல்லி கார்த்தியின் கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன் விரைவில் தீர்ப்பளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் நீதிபதி ஆதிகேசவலு.
நீதிபதியின் கருத்துக்கள் சிதம்பரம் குடும்பத்தினரை பலகீனப்படுத்தியிருக்கிறது. இது குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசியபோது, "வரி ஏய்ப்பு வழக்கு தொடரப்பட்ட போது நான் எம்.பி.யாக இல்லை. அதனால் சிறப்பு நீதிமன்றத்துக்கு எனக்கு எதிரான வழக்கை மாற்றியது தவறானது என்கிற கார்த்தியின் கோரிக்கை நிச்சயம் தள்ளுபடியாகும். அதேசமயம், இவ்வழக்கில் விரைந்து தீர்ப்பளிக்க டெல்லியிலிருந்து அழுத்தம் தரப்பட்டு வருவதால், கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் வேகம் எடுத்திருக்கிறது. ஆக, வரி ஏய்ப்பு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு 2 வருடங்களுக்கு அதிகமாக தண்டனை கிடைக்கும் பட்சத்தில் அவருடைய எம்.பி.பதவி பறி போகும். சி.பி.ஐ. மூலம் சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்பிய மோடி அரசு, கார்த்தியின் எம்.பி. பதவியை பறிக்கும் திட்டத்துடன் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறது. இதனால் இவ்வழக்கு சிதம்பரம் குடும்பத்தினரை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். சிவகங்கை எம்.பி. தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்துவதில் குறியாக இருக்கிறது மோடி-அமித்ஷா கூட்டணி.