நாகையில் அமைய உள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்ததற்காக திருவாரூரில் நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொள்ள டெல்டா மாவட் டத்திற்கு ஒருநாள் பயணமாக வந்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
முதல்நாள் இரவே திருவாரூர் மாவட்டத்திற்கு வந்துவிட்ட துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் காலமானதால் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்னைக்குத் திரும்பிவிட்டார்.
மார்ச் 7-ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர், அங்கிருந்து கார் மூலம் நாகை வந்தார்.
நாற்று பறிக்கும் விவசாயிகளை சந்திக்கவைப்பது, நடவு நடும் பெண்களை சந்திக்க செய்வது, மாட்டுவண்டியில் போக செய்வது, இஸ்லாமியர்களை சந்திக்க செய்வது என முன் கூட்டியே முதல்வருக்கான ஏற்பாடுகளை தயார் செய்திருந்தார் உணவு அமைச்சர் காமராஜ். அதன்படியே நீடாமங்கலம் அருகே சித்தமல்லி கிராமத்தின் ரோட்டோரம் கோடை சாகுபடி செய்வதற்காக நாற்று பறித்துக் கொண்டிருந்தவர்களை சந்திக்கவைத்தார் அமைச்சர்.
வேட்டியை மடித்துக்கட்டி வயலில் இறங்கி நடவு நடுவது போல் காட்சி கொடுத்தார் முதல்வர். நாற்றைப் பறித்து நடவு வயலில் ஊன்றாமல், நாற்றுப் பாத்தியிலேயே ஊன்றிய விவசாயி முதல்வரின் செய்கையை கிசுகிசுப்பாக கிண்டலடித்தனர் உண்மையான விவசாயத் தொழிலாளர்கள்.
மன்னார்குடி அருகே ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் சோழங்க நல்லூர் மக்கள் ஒன்று சேர்ந்து, கறுப்புக்கொடி காட்டியது முதல்வரை அதிருப்திக்கு உள்ளாக்கியது. ஆனாலும், நாகையில் நடந்த மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழா வரவேற்பில் உச்சி குளிர்ந்தார் முதல்வர். அங்கேயும், முதல்வருக்குக் கறுப்புக்கொடி காட்டவும், வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கவும் திட்டமிட்டிருந்தனர், கடந்த 30 ஆண்டுகளாக மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கக்கோரி வரும் போரட்டக்குழுவினர். நாகை விழாவில், மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கப் போகிறார் முதல்வர்’’என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சொன்னதை நம்பி, போராட்டத்தை கைவிட்ட போராட்டக்குழுவினருக்கு, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்கும் பரிசீலனை அரசிடம் இருக்கிறது’என்று மட்டும் முதல்வர் சொல்லியது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
நாகை நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருவாரூர் வான் மீகபுரத்தில் ஓ.என்.ஜி.சி கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டுவிழா நிகழ்ச்சிக்கு வந்தார் முதல்வர். செலவினங்களுக்கு ஏற்ப கூட்டமும் பெருமளவில் திரண்டிருந்தது. விழா அரங்கின் வாசலில் தயார் நிலையில் நின்ற மாட்டுவண்டியில் ஏறி, அங்கிருந்து விழா மேடைக்கு வந்த முதல்வரை பலத்த கரகோசத்துடன் வரவேற்றது கூட்டம்.
விழாவில் பேசிய காவிரி ரெங்கநாதன், "காவிரி தீர்ப்பை பெற்றுத்தந்த ஜெயலலிதாவிற்கு "பொன்னியின் செல்வி' என பட்டம் கொடுத்தோம், டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு "காவிரிக் காப்பாளர்'’என்ற பட்டத்தை வழங்குகிறோம்''’என்றபோது, முதல்வரின் முகத்தில் அத்தனை பரவசம்.
பட்டம் வாங்கிய மகிழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "நான் முதல்வராக இருப்பதால் சட்டத்துக்கு உட்பட்டு வெளியில் சிலவற்றை பேச முடியவில்லை. இருப்பினும் ஒரு விவசாயியாக இருப்பதால் டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்ட முன்வடிவை தாக்கல் செய்தேன்''’என்று சொல்லிவிட்டு, கம்பன் எக்ஸ்பிரஸில் ஏறி சென்னைக்குச் சென்றார்.
முதல்வரின் வருகை குறித்தும் எக்ஸ்பிரஸ் வேகத்திலே விமர்சனங்களும் எழுந்துவிட்டன.
"முதல்வரால் பேசமுடியாமல் போன விசயங்கள் என்னவாக இருக்கும்?'’’என்று பலரும் முணுமுணுத்து வருகின்றனர்.
"பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், ஏற்புடையது அல்ல. ஏற்கனவே இங்கு அபாயகரமான எந்த திட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. இனிமேல் புதிய அபாயகர திட்டம் வராது என்பதற்கும் உத்தரவாதமும் கிடையாது'' என்று ஆத்திரப்பட்டார் சோழங்கநல்லூர் போராட்டக்குழு தலைவர் எ.கே.ராஜபாலன்.
முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா குறித்து விவசாயிகள் சங்க தலைவர்களில் ஒருவரும், குறு விவசாயியுமான க.பாலகுரு நம்மிடம்,’கடந்த எட்டு ஆண்டுகளாக விவசாயம் பாழாகி, வாங்கிய கடனை அடைக்க விவசாயிகள் பண்ட பாத்திரங்களை விற்கும் சூழலாகி விட்டது. இப்படி இருக்கும்போது ஊருக்கு ஊர் பஸ், வேன்களை அனுப்பி மக்களை திரட்டி விழாவை நடத்தும் அளவிற்கு எங்கிருந்து அவர்களுக்கு பணம் வரும்? அவ்வளவு வசதியான விவசாயிகள் யார்? இது விவசாயிகளுக்கான விழாவோ, விவசாயிகளின் விழாவோ அல்ல... அ.தி.மு.க. பொதுக்கூட்டம் அவ்வளவு தான்'' என்கிறார் எரிச்சலாக.
அ.தி.மு.க. கரைவேட்டி கட்டிய தொண்டர்கள் பலர், பச்சைத் துண்டு அணிந்த விவசாயிகளாக விழா நடந்த இடத்தில் குழுமியிருந்ததையும் காண முடிந்தது.
வேளாண் மண்டலம் என்கிற அறிவிப்பிற்கே ’"காவிரிக் காப்பாளர்'’ என்று பட்டம் வாங்கிவிட்ட எடப்பாடியின் அடுத்தடுத்த செயல்பாடுகள் எப்படி இருக்கப்போகின்றன என்பதுதான் டெல்டா விவசாயிகளின் கேள்வியாகவும், பெரும் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.