Skip to main content

உண்மையான வெற்றி என்பது எது? திறமையா? அங்கீகாரமா?

Published on 30/09/2019 | Edited on 30/09/2019


பலவீனங்களை தனக்குள் உணர்ந்து, பலத்தை வெளியுலகுக்கு காட்டும் ஆற்றல் பெற்றவர்களையே சாதனையாளர்கள் என்கிறது உலகம். வாழ்க்கையில் திறமைக்கும் வெற்றிக்கும் ஓர் இடைவெளி உண்டு. அந்த இடைவெளியைக் குறைக்கிறதுதான் நீங்க கற்றுக்கொள்கிற கல்வி. இங்கே காலேஜில் படித்து சர்டிபிகேட் வாங்கினால்தான் மரியாதை-கௌரவம்-அங்கீகாரம் எல்லாம் கிடைக்கும். அந்த சர்டிபிகேட் இல்லையென்றால் அதிகாரப்பூர்வமாக வேலை செய்ய முடியாது என்பதுதான் இன்றுள்ள நிலை. பி.இ.  மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்து சர்டிபிகேட் வாங்கிய பல இளைஞர்களுக்கு ஒரு சைக்கிள் செயின் கழன்றுபோனால்கூட சரியாக மாட்டத் தெரியாமல் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அதே நேரத்தில் ஒரு கார் மெக்கானிக், புது ஆடி காரை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து அசெம்பிள் செய்வதையும் பார்த்திருக்கிறேன். அதேபோலத்தான் சிவில் இன்ஜினியரிங் முடித்தவருக்கு ஒரு சின்ன ப்ளாட்பார்ம் கூட கட்டத் தெரியாது. ஆனால், நம்ம வீட்டுக்குப் பக்கத்திலே கோடு போட்ட டவுசர் போட்டுக்கொண்டு வேலை செய்யும் ஒரு கொத்தனாரிடம் ப்ளானைக் கொடுத்து இதுபோல கட்டிக் கொடுங்கள் என்று சொன்னால், அப்படியே கட்டிவிடுவார்.

 

gj



இது இன்ஜினியரிங் காலேஜ் ஸ்டூடன்ட்ஸூக்கு மட்டும் உள்ள பிரச்சினையில்லை. எல்லா ஸ்டூடன்ட்ன்ஸூக்கும் இதே பிராப்ளம்தான். ஆனாலும், படித்தவர்களுக்குத்தான் இங்கே மரியாதை. அப்படி என்றால் உண்மையான வெற்றி என்பது எது? திறமையா? உரிய அங்கீகாரமா? இந்த இடத்தில்தான் நீங்கள் கேட்க வேண்டும். அறிவை கல்லூரியில், இன்டர்நெட்டில் என்று எங்கு வேண்டுமானாலும் தேடிப் பெறலாம். அப்படி பெற்ற அறிவை பிராக்டிக்கலாக எந்த அளவுக்கு செயல்படுத்துகிறோம் என்பதுதான் திறமை. படித்த படிப்பை நடைமுறை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாத அளவில் பலர் இருக்கிறார்கள். படிப்பும் திறமையும் இன்றைக்கு எத்தனை பேரிடம் சரியான அளவில் இருக்கிறது என்பதுதான் நாம் பதில் பெற வேண்டிய கேள்வி.

சான்றிதழ் மூலமாகக் கிடைக்கும், அங்கீகரிக்கப்பட்ட அறிவு. அதை நடைமுறைகேற்றபடி மேற்கொள்ளும் பயிற்சியால், வளரும் திறமை. இந்த இரண்டையும்விட மிக முக்கியமானது வெற்றி பெறுவோம் என்கிற உறுதியான மனநிலை. எனவே, வெற்றி என்பது நம் மனநிலையைச் சார்ந்ததாக இருக்கிறது. உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கும். இன்றைய உலகில் மிகப் பெரும் சாதனையாளர்களாகப் பார்க்கப்படுபவர்களில் சிலர், முறைப்படி படித்து வந்தவர்கள் இல்லை. நாம் சொல்கிற கல்வி முறையில் அவர்கள் பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அவர்கள் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை இன்றைக்குத் தெரியாத இளைஞர்களே இருக்க முடியாது. அதன் தலைவர் யார் என்று கேட்டு முடிப்பதற்குள்ளேயே, பில்கேட்ஸ் என்று பதில் வரும். அதுபோல, ஆப்பிள் கம்ப்யூட்டர் என்று சொன்னதுமே ஸ்டீவ்ஜாப்ஸ் என்ற பதில் வரும். இவர்களைப் போல கம்ப்யூட்டர் ஃபீல்டில் கலக்கியவர்கள் யாரும் கிடையாது. ஆனால், இந்த இரண்டு பேருமே முறைப்படியான கல்வியில் பெரிதாக சாதிக்கவில்லை. பள்ளிக்கூட அளவில்தான் படித்திருக்கிறார்கள். பெரிய பெரிய கல்லூரிகளுக்கோ பல்கலைக்கழகங்களுக்கோ போகவில்லை. ஆனால், பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் படித்தவர்களைவிட பல மடங்கு அதிகமாக இவர்கள் சாதனை செய்திருக்கிறார்கள். இப்படிச் சொல்வதால், கல்லூரியில் ஒழுங்காகப் படிக்க வேண்டியதில்லை என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால், எது எளிதானதாகத் தோன்றுகிறதோ அதை நம் மனது சட்டெனக் கவ்விப் பிடித்துக் கொள்ளும். அது இயல்பானது என்றாலும், சரியானது அல்ல. எது எளிதானது என்பதைவிட எது சரியானது, உண்மையானது என்பதையே நம் மனது தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

 

fg



பில்கேட்சும், ஸ்டீவ் ஜாப்சும் அப்படித்தான். படிப்பு, திறமை இதைவிட வெற்றிக்கான மனநிலைதான் அவர்களிடம் அதிகமாக இருந்தது. இப்படிப் பலரை நாம் உதாரணம் காட்ட முடியும். ஆனால், இதை அப்படியே திருப்பிப் போட்டுப் பாருங்கள். வெற்றிக்கான மனநிலை இல்லாமல் படிப்பையும் திறமையையும் மட்டுமே வைத்துக்கொண்டு வெற்றிபெற்றவர்கள் என்று யாரையாவது அடையாளம் காட்ட முடியுமா? ஒருநாள் முழுவதும் உட்கார்ந்து யோசித்தாலும் யாரும் கிடைக்க மாட்டார்கள். ட்ரிபிள் இ இன்ஜினியரிங் முடித்துவிட்டு, ஒரு ஃப்யூஸ் போடத் தெரியவில்லை என்றால், வாங்கிய பட்டத்தினால் என்ன பலன்? எந்த காலேஜில் நீங்கள் படிப்பவராக இருந்தாலும், டிகிரி முடித்தால் உங்களுக்குப் பட்டம்  கிடைக்கும். பி.பி.ஏ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.இ., பி.டெக் இப்படிப் பல பட்டங்கள். அந்தப் பட்டத்தை நீங்கள் விசிட்டிங் கார்டில் போட்டுக் கொள்ளலாம். கல்யாணப் பத்திரிகையில் போட்டுக்கொள்ளலாம். லெட்டர் பேடு- நேம் போர்டு என்று போட்டுக் கொள்ளலாம். ஆனாலும், கல்வித் தகுதியுடன் திறமை என்பது மிக முக்கியம். கல்வி என்பது நாம் நிறைய சம்பாதிப்பதற்கானது என்று மட்டும் நினைத்துவிடக்கூடாது. அது நம் வாழ்க்கையை வெற்றி-தோல்வி இரண்டிலும் தாக்குப்பிடிக்கக்கூடியதாக மாற்றும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். ஒரு சின்ன சம்பவம் சொல்றேன்.

ஆஃப்கானிஸ்தான் பாலைவனத்தில் ஒரு அமெரிக்கக்காரர் ஜீப்பில் போறாரு. ரொம்ப ஸ்பீடா போய்க்கிட்டிருக்கிறப்ப, ஜீப் திடீர்னு நின்று போயிடுது. அவருக்கு ரிப்பேர் பண்ணத் தெரியலை. வெயிலோ கொளுத்தது. நம்ம ஊருல சொல்ற மாதிரி சொல்லணும்னா, உச்சி வெயில் மண்டையைப் பொளக்குது. இரண்டு மணிநேரமா அந்த வெயிலிலேயே நிக்கிறாரு அந்த அமெரிக்கக்காரரு. அப்ப ஒருத்தரு தாடி வச்சிக்கிட்டு அந்தப் பக்கம் வர்றாரு. அவர் ஆஃப்கானிஸ்தான் நாட்டுக்காரருதான். அந்த நாட்டுக்காரங்களைப் பார்த்தா அமெரிக்காக்காரங்களுக்கு ஒரு இளக்காரம், திமிரு இதெல்லாம் இருக்கும். ஜீப் நின்று போனதால் தவிச்சிக்கிட்டிருந்த அந்த அமெரிக்கக்காரருக்கும் அந்த திமிர் குறையலை. தாடி வச்சிருந்தவரைப் பார்த்து அமெரிக்கக்காரரு கேட்கிறாரு…"இந்த ஜீப்பை உனக்கு ரிப்பேர் பண்ணத் தெரியுமா? இல்லேன்னா, யாராவது மெக்கானிக்கைக் கூப்பிட்டுக்கிட்டு வர்றியா? நான் உனக்கு பணம் தர்றேன்'னு. அதிலேயே ஒரு தெனாவெட்டு தோரணை. தாடி வச்சிருந்த ஆஃப்கானிஸ்தான்காரர் அந்தக் கொளுத்துற வெயிலிலும் ரொம்ப கூலா, "நானே ரிப்பேர் பண்றேன்'னு சொல்லிக்கிட்டே பேனட்டை திறந்தாரு. அமெரிக்கக்காரரைப் பார்த்து, ஸ்பேனர் இருக்கான்னு கேட்டாரு.

அமெரிக்கக்காரர் அந்த ஜீப்பிலிருந்து ஸ்பேனரை எடுத்துக் கொடுத்தாரு. அதை வாங்கி, ஜீப்பிலே ஒரு தட்டு தட்டுனாரு அந்த ஆஃப்கானிஸ்தான் தாடிக்காரரு. ஜீப் உடனே ஸ்டார்ட் ஆயிடிச்சி. அமெரிக்கக்காரருக்கு ஒரே ஆச்சரியம். என்னய்யா நாம இரண்டு மணிநேரமா வெயிலிலே நிற்கிறோம். இந்த ஆளு வந்து, ஒரு தட்டு தட்டுனான். வண்டி ஸ்டார்ட் ஆயிடிச்சே அப்படிங்கிறதால ஆச்சரியம். "ரொம்ப தேங்க்ஸ்.. ஜீப்பை ரிப்பேர் செஞ்சதற்கு எவ்வளவு காசு வேணும்'னு மறுபடியும் அதே தெனாவெட்டு தோரணையோடு அமெரிக்கக்காரரு கேட்டாரு. அவரை அந்தத் தாடிக்கார ஆஃப்கானிஸ்தர் மேலும் கீழும் பார்த்துவிட்டு "500 யு.எஸ். டாலர்'னு சொன்னாரு. அமெரிக்கக்காரருக்கு தூக்கிவாரிப் போட்டது. "என்னப்பா.. இரண்டு நிமிஷ வேலைதானே.. வந்ததும் தட்டுனே.. வண்டி ஸ்டார்ட் ஆயிடிச்சி. இதுக்கு 500 யு.எஸ். டாலரா'ன்னு கேட்டாரு. நம்ம இந்திய ரூபாய் மதிப்பில் 26 ஆயிரம் ரூபாய். அதனாலதான் அமெரிக்கக்காரருக்கு அதிர்ச்சி.
"எதுக்கு 500 டாலர்? என்னென்ன ரிப்பேர் பார்த்தே? எனக்கு பிரேக்-அப் வேணும். சொல்லு'ன்னு அமெரிக்கக்காரர் கேட்டாரு. அப்பவும் அந்த ஆஃப்கானிஸ்தான்காரர் ரொம்ப கூலா, "தட்டுனதுக்கு 5 டாலர். எந்த இடத்தில் பிராப்ளம்னு பார்த்து தட்டுனேன்ல அதுக்கு 495 டாலர்'னு சொன்னாரு. அமெரிக்கக்காரரால ஒண்ணும் பேச முடியலை. கேட்ட பணத்தைக் கொடுத்துட்டு ஜீப்பை எடுத்துட்டு கிளம்பிட்டாரு. திறமையை எப்படி அறிவாகப் பயன்படுத்தவேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் படிக்கலாம். எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், அந்த அறிவுடன் திறமை சேராவிட்டால் எந்தப் பயனும் இல்லை.

எனக்குத் தெரிந்த ஒருவர், மெட்ராஸ் ஐ.ஐ.டியில் படித்தவர். இப்போது ஒரு இன்ஜினியரிங் காலேஜ் நடத்துகிறார். அவர் செகன்ட் இயருக்கு கணக்குப்பாடம் எடுக்கப்போகிறார். அங்கே இருந்த மாணவர்களுக்கு ஏ ப்ளஸ் பி ஹோல் ஸ்கொயர் என்பது எப்படி வந்தது என்பது சொல்லத் தெரியவில்லை. இது நாம் ஏழாம் கிளாஸில் கற்றுக்கொண்ட பாடம். அதைச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. அந்த மாணவர்களுக்கு ஒரு ஸ்கூல் டீச்சரை வைத்து, டியூஷன் எடுக்கப்படுகிறது. அதாவது,  மனப்பாடம் செய்வது மட்டுமே கல்வி என்று நாம் நினைத்துவிடுவதால், இன்ஜினியரிங் போன்ற உயர் படிப்புகளுக்கு வரும்போதுகூட அடிப்படையான விஷயங்கள் தெரியாமல் போய்விடுகிறது. அதற்கு டியூஷன் படிக்க வேண்டியிருக்கிறது. ஸ்கூலில் செய்ய வேண்டியதை காலேஜில் செய்யவேண்டிய நிலைமை.
 

h



நீங்கள் சின்ன வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டிருப்பீர்கள். சின்ன வயதில் நீச்சலடிக்கக் கற்றுக் கொண்டிருப்பீர்கள். இப்போது டூ-வீலர், பஸ், கார் என்று பயணம் செய்துகொண்டிருக்கலாம். சைக்கிள் ஓட்டி பத்து வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கலாம். ஆனாலும், ஒரு  சைக்கிளை உங்களிடம் கொடுத்து இப்போது ஓட்டச் சொன்னாலும் நீங்கள் ஓட்டிவிடுவீர்கள். அதுபோல ஒரு நீச்சல் குளத்திலோ ஆற்றிலோ இப்போது நீச்சல் அடிக்கச் சொன்னாலும் அடித்துவிடுவீர்கள். எப்போதோ பழகிய சைக்கிளும் நீச்சலும் எத்தனை ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னாலும் இப்போதும் மறக்காமல் இருக்கிறது. ஆனால், கடந்த செமஸ்டரில் படித்த பாடம் இந்த செமஸ்டருக்கு ஏன் மறந்துபோய்விடுகிறது?

ஏன் என்றால், செமஸ்டருக்குப் படிக்கிறோம். சைக்கிளையும் நீச்சலையும் கற்றுக்கொள்கிறோம். படிப்பதற்கும், கற்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொண்டால், கல்வியின் மூலமாகப் பெறும் அறிவை நாம் திறமையாக மாற்றிக் கொள்ள முடியும். அப்படி மாற்றுவதற்கு மனநிலை   மிக மிக அவசியம். சரி ஆட்டிடியூட் என்கிற மனநிலையை நாம் எந்தக் கல்லூரியில் படிக்க முடியும்? வீட்டிலாவது அதைக் கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறதா? வேறு எங்கேயாவது படிக்க முடியுமா? யாராவது சொல்லித்தர இருக்கிறார்களா? இந்தக் கேள்விகள்தான் உங்களுக்குத் தோன்றும். பதில்கள் நிறையவே இருக்கின்றன. சொல்லித்தர நான் ரெடி.. கேட்பதற்கு நீங்களும் ரெடிதானே...