கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் வியாழக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. அம்மாநில தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் கொறடா விஜயதாரணி.
கர்நாடக தேர்தல் களம் எப்படி உள்ளது, காங்கிரஸ் கட்சிக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது, பாஜகவும், பிரதமர் மோடியும் ராகுல்காந்தியை தாக்கிப் பேசியதைப் பற்றியும் அவரிடம் நாம் கேள்வி எழுப்பினோம்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர், கர்நாடக பொறுப்பாளர் என்ற முறையில் கடந்த மாதம் கள ஆய்விலும், இந்த மாதம் 8 நாட்கள் தொடர் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தேன். பெங்களூரு நகரத்தில் தமிழர்கள் பகுதிகளில் முழுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டோம். நான் சென்ற இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு பெரிய அளவில் இருந்தது. கர்நாடக தேர்தலில் வெற்றி வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு பிரமாதமாக உள்ளது. 124 முதல் 128 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
இருப்பினும் மோடியின் பேச்சால் சந்தேகம் எழுகிறது. ஏனென்றால் மணிப்பூரில் நடந்ததை பாருங்கள், கோவாவில் நடந்ததை பாருங்கள், உத்திரப்பிரதேசத்தில் நடந்ததை பாருங்கள் என பல மாநிலங்களில் நடந்ததை பாருங்கள் என்று சொல்லும்போது எலக்ட்ரானிக் ஓட்டு மிஷினில் ஏதாவது செய்வார்களோ என்ற சந்தேகம்தான் இருக்கிறது.
ஏற்கனவே சில மாநிலங்களில் பாஜகவுக்கு சாதகமாக கருத்துக் கணிப்புகளை வெளியிட வைத்து, எலக்ட்ரானிக் ஓட்டுமெஷினில் தில்லு முல்லு செய்தார்கள், ஆட்சியை கபளீகரம் செய்தார்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அதேபோல் கர்நாடகாவிலும் கருத்துக் கணிப்புகளை தங்களுக்கு சாதமாக வெளியிட வைத்து, இழுபறியில் உள்ள தொகுதிகளில் தில்லுமுல்லு பண்ண முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது. தேர்தல் ஆணையத்தை அவர்கள் கையில் வைத்துக்கொண்டு எதை செய்தாலும், மக்களின் தீர்ப்பால் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும்.
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் தவறான தகவல்களை பரப்புகிறார் மோடி. இந்திய வரலாற்றையே திரித்து கூறுகிறார். கரியப்பா, திம்மய்யாவைப் பற்றி உண்மை தெரியாமல் பேசுகிறார். அவருக்கு யாரோ தவறாக குறிப்பெழுதி கொடுத்திருக்கிறார்கள். யாரோ அவருக்கு குழிதோண்டுகிறார்கள். ராகுலை முதிர்ச்சியற்ற தலைவர் என்று சொல்ல மோடிக்கு என்ன தகுதி உள்ளது. ஒரு பிரதமராக இருப்பவர் ஒரு வரலாற்றை பிழையோடு எப்படி பரப்புரையில் சொல்லுவார். மோடிக்குதான் முதிர்ச்சி இல்லை, தகுதி இல்லை, நாட்டைப் பற்றி பேசவும் தெரியவில்லை என்றார்.