Skip to main content

ஆண்கள் இன்னும் சல்லிப்பயல்கள்... சில்லறை பயல்கள் தான்! - திருமுருகன் காந்தி

உடுமலைப்பேட்டை ஆணவக்கொலையில் தன் கணவர் சங்கரை இழந்த கவுசல்யா ஆணவக்கொலையை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். இதற்கு ஒரு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்கிற நோக்கில் பல மேடைகளில் பேசிவந்த இவர், தற்போது பல கோரிக்கைகளுடன், சங்கரின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளில் (13 மார்ச்) சங்கர் சமூகநீதி அறக்கட்டளையை ஆரம்பித்து அறிமுக விழாவை நடத்தினார். இதில் பல்வேறு இயக்க தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் கலந்துகொண்டனர். மே17 இயக்கத்தின் தலைவரான திருமுருகன் காந்தி இந்த விழாவில் கலந்து  கொண்டு பேசுகையில்...

 

thirumurugan gandhi"நான் முதன் முதலில் கவுசல்யாவை ஒரு தனியார் நிகழ்ச்சியில்தான் சந்தித்தேன். அந்த மேடையை சரியாக பயன்படுத்திய ஒரே ஒருவர் கவுசல்யாதான். அவரின் நோக்கம் என்ன என்று கேட்கும்போது, ஆணவப்படுகொலைக்காக ஒரு சட்டம் கொண்டுவரவேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்று அந்த மேடையை ஒரு அரசியல் மேடையாக மாற்றினார். அவர் அங்கு பேசியது ஒரு துயரத்தின் அடிப்படையில் இல்லை. ஒரு விடுதலையின் அடிப்படையில்தான் பேசுகிறார்.


நான் இதை மட்டும்தான் படித்து இருக்கேன் என்று ஒரே கோட்பாட்டினுள் இல்லாமல், விடுதலை என்பது என் இலக்கு அந்த விடுதலைக்கு தேவையானது எதுவோ அவை எல்லாவற்றையும், மிக எளிமையாக அழகாக தொகுத்து கொடுத்திருக்கிறார். இது ஒரு பிரகடனமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் ஒரு குறிப்பிட்ட இயக்கங்களை மட்டும் அழைக்காமல் ஒரு நோக்கத்துக்காக போராடும் அனைவரையும் அழைத்திருக்கின்றனர். அந்த புத்தகத்தில் சொல்லியிருக்கிறார், சாதி ஒழிக, தமிழ் வெல்க என்று. சாதி எப்போது தமிழர்களிடத்தில் ஒழிகிறதோ, அப்போதுதான் தமிழ் வெல்லும் என்கிறார். சாதிகளை கற்றுத்தரும் பார்ப்பனிய ஆரிய சமூகத்தை 2000 ஆண்டுகளாக எதிர்ப்பதும் தமிழ்தான் என்று சொல்லிக்கொள்கிறேன். தமிழீழ கோட்பாடுகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இந்த சாதி ஒழிப்பை வைத்திருந்தனர். இதுதான் தமிழ்தேசியத்திற்கு ஒரு விரோதி என்று கருதினர். மேலும் பெண்விடுதலையும் தமிழ்த்தேசியத்தை வளர்க்கும் என்றனர். இந்த இரண்டும்தான் தமிழர்களின் விடுதலையை பின்னுக்கு தள்ளுகிறது என்று கருதினர். அதைதான் விடுதலை புலிகள் நடைமுறையில் கொண்டுவந்தனர். கவுசல்யா அவர்களும் இதைதான் மிக எளிய முறையில் இங்கு குறிப்பிடுகிறார்.


இன்னமொரு விஷயம் பெண்கள் ஆண்களுக்கு நிகராக வளர வேண்டும் என்கின்றனர். ஆனால், ஆண்களோ இன்றும் சல்லிப்பயல்கள், சில்லறை பயல்கள்தான். எல்லா பிரச்னைகளுக்குமே ஆண்கள்தான் காரணம். ஆண்களுக்கு நிகர் என்றால் என்ன? ஆண்களுக்கு படிப்பனையை கற்றுத்தருபவர்களாக இருக்கவேண்டும். அந்த அடையாளத்தை அவர்கள் உருவாக்க வேண்டும். பெண்கள் மிக உறுதி வாய்ந்தவர்கள். அந்த உறுதியை நாம் பேரறிவாளனின் தயார் அற்புதம்மாளிடம் இருந்து தெரிந்துகொள்ளலாம். பெண்கள் உயர்ந்துதான் இருக்கிறார்கள், ஆண்கள்தான் அந்த உயரத்திற்கு நிகராக வரவேண்டும். இந்த அறக்கட்டளைக்கு மே 17 இயக்கம் உறுதுணையாக இருக்கும்" என்று தன் உரையை முடித்துக்கொண்டார்.
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர் நல்லகண்ணு பேசுகையில்....
 

nallakannu"அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியல் அமைப்பு சட்டம் என்ன சொல்கிறது என்றால், பெண்களின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும் என்கிறது. பெண்கள் அடிமைப்படுகிறார்கள் என்பதால்தான் நான் இந்த சட்டத்தை நேருவின் ஒப்புதலுடன் கொண்டுவந்தேன். இருந்தாலும் யாரும் அதனை ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் இந்த பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று பதவியை ராஜினாமா செய்தவர், அப்போதைய சட்ட மந்திரி டாக்டர் அம்பேத்கர். ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அந்த உரிமைகள் எல்லாம் பெண்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தைகூட அரசியல் சபையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுதான் வரலாறு. அதை இன்று வரை எதிர்த்து போராட்டங்கள் செய்துகொண்டுதான் வருகிறோம். இன்று கூட அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுதான் வருகிறோம். காதலன் என்றாலும் சந்தேகப்பட உரிமை உண்டு. ஆனால் அவர்களை கொலை செய்வது என்பது முற்றிலும் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று. நாங்கள் இதை எதிர்த்துதான் அப்போதே சட்டம் போடவேண்டுமென்று கேட்டுக்கொண்டோம், இதற்கு ஓபிஎஸ் ஒன்றுமே இங்கு நடப்பதில்லை என்றார். அதன்பின்னும் 500 கொலைகள் நடந்துவிட்டது. இப்போதுதான் உச்சநீதிமன்றம் சட்டம் கொண்டுவந்துள்ளது. சட்டத்திலேயே சொல்கிறது பெற்ற குழந்தையை கொல்வதற்கு பெற்றோருக்கே உரிமை கிடையாது என்று. இன்றைக்கு ஜாதி என்பது ஒரு விஷயமாக பார்க்கிறார்கள், அப்படி இருக்கும்போது நீதி எங்கே கிடைக்கும்? பெத்த பிள்ளையை விட இந்த ஜாதி பெரியதாய் போய்விட்டதா, பத்து மாதம் சுமந்து பெத்த குழந்தையை ஜாதி என்ற பெருமையை சொல்லி கொல்வதால் பெத்த குழந்தைக்கு என்ன மரியாதை? 

 

ஜாதி, மதம் இல்லாமல் அவர்கள் சொல்வதுபோலவே பார்த்தால் கூட ஜோசியம் வந்து நிற்கிறது. அதற்கு பத்து பொருத்தம் வேண்டும் என்கிறார்கள். ஒருவேளை பெண் வீட்டாரோ, ஆண் வீட்டாரோ பணக்காரர்களாக இருந்தால், இங்கு ஜாதகம் ஒத்துவரவில்லை என்றால் மனப்பொருத்தம் இருக்கிறது என்று முடித்துவிடுகிறார்கள். அவர்களே மனப்பொருத்தத்துடன் வந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? எல்லாம் சரிவர பொருந்தியும் கல்யாணம் செய்யப்பட்டவர்கள் பிரிந்திருக்கிறார்கள். தர்மபுரியில் இளவரசன், திவ்யாவுக்கு எல்லாமும் பொருந்தியிருந்தது, படிப்புகூட. ஆனால் அதில் இளவரசனையும், திவ்யாவின் தகப்பனாரையும் கொன்றது ஜாதி தான். வீட்டில பிள்ளைங்க நல்லா வாழனும்னு நினைக்க வேண்டும். ஏதோ கல்யாணம் பண்ணோம் நம்ப வேலை முடிஞ்சது அப்படினு இல்லாமல், அவர்களுக்கு பிடித்தவர்களுடன் சேர்த்து வைக்க வேண்டும். கவுசல்யாவின் இந்த அறக்கட்டளைக்கு துணையாக எல்லோரும் இருக்க வேண்டும்."
 

எவிடென்ஸ் கதிர் பேசிய உரை...
 

evidence kathir


"மார்ச் 13 ஆம் தேதி  2016 ஆம் ஆண்டு பிற்பகல் 2.10 மணி அளவில் மிகவும் கொடூரமான முறையில் சங்கர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அன்று மாலை நான் சங்கரின் சொந்த கிராமமான குமாரலிங்க கிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்கு தண்டோரா போடுகிறார்கள், சங்கரின் இறுதி ஊர்வலம் நடக்க உள்ளது அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. இந்தியாவை  உலுக்கிய ஒரு சாதியப்படுகொலை இதற்கு நீதி வேண்டும், குற்றவாளிகள் கைது செய்யப்படவேண்டும். மிக எளிதாக தண்டோரா போடுகிறார்களே என்ற அச்சம் எனக்கு இருந்தது. ஒரு எட்டு கோரிக்கைகளை முன்வைத்து அந்த எட்டு கோரிக்கைகளை நிறைவேற்றிய பின்புதான் உடலை வாங்க வேண்டும் என்று நான் வலியுறுத்தி இருந்தேன். குமரலிங்கம் மக்கள் போராட்டக்களத்தில் குதித்தார்கள். குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும், எஸ்.சி, எஸ்.டி தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். இதுபோன்ற எட்டு கோரிக்கைகளை நிறைவேற்றிய பிறகுதான் உடலை வாங்கினர் குமாரலிங்க மக்கள். இந்த தொடக்கப்பயணத்திற்கு குமரலிங்க மக்கள் அளித்த ஒத்துழைப்பை மறந்து விடமுடியாது.
 

நண்பர்களே இந்தியாவிலே சிறந்த பெண்மணி யார் என்றால் அது கவுசல்யாதான். இந்த இரண்டு ஆண்டுகளில் எவ்வளவு பெரிய அபரிதமான வளர்ச்சி? நீதியின் தேவதை யார் என்று இந்தியாவில் சொன்னால் அது கவுசல்யா மட்டும்தான். குற்றம் செய்தவர்கள் பெற்ற தாயாக இருக்கலாம், தந்தையாக இருக்கலாம். சாதிய ரீதியாக ஆணவக்கொலை செய்தாய் என்று தூக்குமேடைக்கு கொண்டு சென்ற வீரமங்கை கவுசல்யா மட்டும்தான் வேறு யாருமில்லை. சங்கரின் கனவுகளை நிறைவேற்றினார். வீடு கட்டினார், அறக்கட்டளை தொடங்கியுள்ளார். இதில் முக்கியம் கல்வி ,கலை மற்றும் சமூகநீதி இவைதான். "ஆணுக்கு நிகராக வாழ்வேன்" என்று சொன்னவர் தான் கவுசல்யா. அம்பேத்கரையும்,பெரியாரையும் சரியாக படித்தவர் கவுசல்யா.
 

எனக்கு சந்தேகம் இருந்தது இந்த சம்பவத்தின் பொழுது இந்த பெண்ணிற்கு 19 வயது இந்த பெண் சட்டப்போராட்டத்திற்கு வருவாளா என்று. ஏனென்றால் பல ஆணவக்கொலை வழக்கிலே பெண்கள், பெற்றோர் பக்கம் சென்று விடுவார்கள். 32 முறை சென்றோம் குமாரலிங்கத்திற்கு வழக்கு நடத்தச்சொல்லி, ஒப்புக்கொள்ளவில்லை. அதன்பின்புதான் சங்கர் தகப்பனார் வேலுச்சாமிக்கும், கவுசல்யாவிற்கும் நம்பிக்கை வந்தது. இதில் மொத்தம் 61 சாட்சிகள் இதில் 60 சாட்சிகள் சரியாக சொல்லிவிட்டார்கள். அந்த ஒரு சாட்சி தவறாக சொல்லிவிட்டால் மொத்தமும் முடிந்தது அந்த ஒரு சாட்சி கவுசல்யாதான். இந்த தண்டனை வந்தபொழுது 6 நபருக்கு இராட்டை தூக்கு அதில் ஒருவர் கவுசல்யாவின் அப்பா. எப்படி கவுசல்யாவின் மனம் அந்த கனத்தை தாங்கபோகிறது என்று. கவுசல்யா என்னிடம் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்கிறார், 'எனக்கு நீதி கிடைத்துவிடும், இந்த சாதி ஒழியுமா?' என்றார்.


உச்சநீதிமன்றத்தில் 22 மாநிலங்கள் ஒப்புக்கொண்டது ஆணவக்கொலை நடக்கிறது என்று. ஆனால் தமிழகத்தில் ஐந்தாண்டுகளிலில் 187 ஆணவக்கொலைகள் நடந்துள்ளது. இன்னும் தமிழக அரசு ஒப்புக்கொள்ளவில்லை."

இதை படிக்காம போயிடாதீங்க !