Husband marries his wife her lover uttar pradesh

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஒருவர், தனது மனைவியை அவர் விரும்பிய காதலனுக்கே திருமணம் செய்து வைத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூரைச் சேர்ந்தவர் ஒரு நபருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் அந்த பெண், யஷ்வந்த் பிந்த் என்ற நபரை ஏற்கெனவே காதலித்து வந்ததால் அந்த பெண்ணுக்கு, இந்த திருமணத்தின் மீது துளியும் இஷ்டம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால், தனது கணவரின் குடும்பத்தினருடன் அரிதாகவே தங்கி வந்துள்ளார். இதனிடையே, பெற்றோர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறி தான் காதலித்து வந்த யஷ்வந்தை அடிக்கடி அந்த பெண் காணச் சென்றுள்ளார். இதனை அறிந்த கணவர், திருமண உறவை காப்பாற்றும் நோக்கத்தில் தனது மனைவியை நொய்டாவிற்கு அழைத்து வந்துள்ளார்.

Advertisment

இருப்பினும், அந்த பெண் தனது காதலனைத்தொடர்ந்து சந்தித்துப் பேசி வந்துள்ளார். இந்த விவகாரம் அறிந்த கணவரும், அவரது பெற்றோரும் அந்த பெண்ணை எச்சரித்துள்ளனர். அதற்கு, திருமண உறவில் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கடுமையான விளைவுகள் சந்திக்க நேரிடும் என்று அந்த பெண், கணவரின் குடும்பத்தினருக்கு எச்சரிக்கை விடுத்தார். இதில் மன உளைச்சல் அடைந்த கணவர், இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவை எடுத்தார். விருப்பமில்லாத திருமண உறவில் இருப்பதற்கு பதிலாக, மனைவியை அவரது காதலனுக்கே திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அதன்படி அந்த நபர் தனது மனைவியுடன் ஜான்பூருக்குத் திரும்பியுள்ளார். அதன் பிறகு, யஷ்வந்தை துர்கா கோவிலுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இறுதியாக, தனது மனைவியை அவர் விரும்பிய காதலன் யஷ்வந்துக்கே திருமணம் செய்து வைத்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், யஷ்வந்த் பிந்த் மணமகளில் நெற்றியில் குங்குமம் பூச, பெண்ணின் முன்னாள் கணவர் தம்பதியினரை ஆசிர்வதிக்கிறார். இது குறித்து கணவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ‘எங்களுடைய திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நம்பினேன். ஆனால், அவளுடைய மனது வேறு ஒரு நபரிடம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அதனால், அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். மனைவியை என்னுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த விரும்பவில்லை. இப்போது அவர்கள் தங்கள் விருப்பப்படி வாழலாம், நான் ஆசிர்வதித்தேன்’ என்று கூறினார்.