2016 நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நள்ளிரவோடு இந்திய மக்கள் சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தார்.
அடுத்தநாள் முதல் லட்சக்கணக்கில் பணம் போட்டவர்கள்கூட வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்காக வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலில் காத்திருந்த கொடுமையைக் காணநேர்ந்தது.
வேலைக்கே போகமால் பணம் எடுப்பதும் பணத்தை மாற்றுவதுமே வேலையாகிப் போனது. அதிர்ச்சியிலும், வெயிலிலும் பலர் உயிரிழந்தனர். 6 மாதங்களில் கருப்புப்பணம் மீண்டுவிடும். அப்படி மீட்காவிட்டால் என்னை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்துங்கள் என்று மோடி சவால் விட்டார்.
மக்கள் படும் அவஸ்தைகளைப் பேசினால், எல்லையில் ராணுவ வீரர்கள் செய்யும் தியாகத்தை பாஜகவினர் பேசினார்கள். வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கிய கருப்புப்பணத்தை கைப்பற்றி இந்தியர்களின் கணக்கில் நபர் ஒருவருக்கு 15 லட்சம் ரூபாய் வங்கிக்கணக்கில் ஏற்றுவேன் என்ற மோடி, உள்நாட்டு மக்களின் சேமிப்புகளை நாசம் செய்தார். சிறு தொழில்கள் செய்தவர்கள் முடங்கினார்கள். புதிய ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்கு முன்னரே கோடீஸ்வரர்களின் வீடுகளுக்கு கட்டுக்கட்டாக அனுப்பி வைத்தார்கள்.
ஏராளமான திருமணங்கள் பணமின்றி நடத்த முடியாமல் தடைப்பட்டன. வர்த்தகம் நாசமானது. சொந்தப் பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க முடியாமல் மக்கள் அல்லாடினார்கள்.
வளர்ச்சிக்காக இந்தக் கஷ்டங்களைத் தாங்கும்படி மோடி கேட்டார். ஆனால், கருப்புப்பணம் பிடிபட்டதா என்றால் திரும்பிய பணத்தை கணக்கிட்டபிறகுதான் சொல்ல முடியும் என்றார்கள்.
இதோ கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி மோடியின் உருப்படாத முகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது. மோடி செல்லாது என்று அறிவித்த நாளின் கணக்குப்படி புழக்கத்திலிருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15 ஆயிரத்து 417.93 லட்சம் கோடி ரூபாய் திருப்பி வந்த நோட்டுகளின் மதிப்பு 15 ஆயிரத்து 310.73 லட்சம் கோடி ரூபாய். ஆக, வங்கிகளுக்கு திரும்ப வராதது 9 ஆயிரத்து 720 கோடி ரூபாய் மட்டும்தான். பணமதிப்பிழப்பு மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் கருப்புப்பணம் ஒழியும் என்ற மோடி இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?
அவர் என்றைக்கு பதில் சொன்னார்? எதையாவது அள்ளிவிட்டுவிட்டு போயிருவாரு. அவர் செய்ற ஒவ்வொரு வேலையும் அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும்தான் லாபம் தரும். மக்களுக்கு கஷ்டத்தை மட்டுமே கொடுக்கும் என்பதே இதுவரை நிஜமாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் வளர்ச்சியை நோக்கி என்ற ஒற்றைக் கோஷத்தை நாலேகால் ஆண்டுகளாக முழக்கி வருகிறார்கள்.
விரைவில் ஜிஎஸ்டி விதிப்பால் பலனடைந்தோர் யார் என்பதும், நாட்டுக்கு எவ்வளவு இழப்பு என்பதும் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறார்கள் மக்கள்...