இயக்குநர் மு.களஞ்சியம் இயக்கியுள்ள படம் முந்திரிக்காடு. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் டைரக்டரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், " களஞ்சியத்தின் கனவுப்படைப்பாக முந்திரிக்காடு படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நான் இடம் பெற்றதற்காக மகிழ்கிறேன். தம்பி களஞ்சியம் இமையத்தின் எழுத்தை அப்படியே திரையில் வார்த்தெடுக்கிறார். சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் கலக்கட்டும் என்று கவிதை எழுதும் நிலையில் சமூகம் இருக்கிறது. முந்திரிக்காடு படம் பரியேறும் பெருமாள் ஏற்படுத்திய தாக்கத்தை விட அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு விழாவில் ஒரு நடிகர் பேசுகிறார், திஸ் பிலிம்ல சாங்ஸும், பைட்டும் சூப்பரா வந்திருக்கு என்று ஆங்கிலத்தில் பேசுகிறார். இவர்களை வைத்து என்ன செய்ய முடியும்.
நாக்கில் கூட தமிழ் சரியா வரலயே, நீங்க எப்படி நாட்டை சரி பண்ணுவீங்க. நமக்குள் இருக்கும் சாதி, மத உட்பகை தான் நம்மை வீழ்த்துகிறது. அது நமக்குள் ஒற்றுமை இல்லாமல் பார்த்துக்கொள்கிறது. சாதிய எண்ணம் கொண்டவன் இறைவனை வணங்குவதற்கே தகுதி இல்லாதவன். கோவில்களில் இருக்கும் சாதி, திரையரங்குகளில் செத்துப்போய்விட்டது. அதனால் இப்போது திரை அரங்குகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. சாதிய விடுதலை, மத விடுதலை, பொருளாதார விடுதலை என்று இதுவரை நாம் எதுவுமே பெறவில்லை. மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படும் போது யாரும் சாதிப்பார்ப்பதில்லை. காரணம் சாதிக்கு ரத்த வெறி இருக்கு. இரத்தத்திற்கு சாதி வெறி இல்லை.
முன்னேறிய ஜாதி பிரிவினருக்கு எதற்கு இடஒதுக்கீடு. அதுதான் முன்னேறிவிட்டாரே, எதற்கு இடஒதுக்கீடு என்று கேட்டால் பதில் இல்லை. சாதிக்கு ஏது முன்னேற்றம். சாதிக்கு ரத்த வெறி இருக்கு. ரத்தத்திற்கு சாதி வெறி இல்லை. கிமு, 300 ஆண்டுதான் தமிழ் தொன்மையானது என பாடப்புத்தகத்தில் போட்டுள்ளனர். கீழடியை தோண்டுங்கள் தமிழ் எத்தனை பழமையானது என தெரியும். எதையெல்லாம் தோண்ட சொல்கிறோமோ அதை தோண்டமாட்டார்கள். எதையெல்லாம் மூட சொல்கிறோமோ அதையெல்லாம் தோண்டுவார்கள். உதாரணத்துக்கு ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்கள். சிலர் சாமியை காப்பாற்ற போராடுகிறார்கள். நாங்கள் பூமியை காப்பாற்ற போராடுகிறோம்" என சீமான் கூறினார்.