சேலம் மாவட்ட மைய நூலகத்திற்குச் சொந்தமான இடத்தை தனியார் புத்தக நிறுவனத்திற்கு தாரை வார்க்கத் துடிக்கும் மாவட்ட ஆட்சியருக்கும், இடத்தை கொடுக்க மறுக்கும் நூலகத்துறைக்கும் பனிப்போர் மூண்டுள்ளது.
சேலம் குமாரசாமிப்பட்டியில் மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. மாநகரின் மையப்பகுதியில் பரந்த நிலப்பரப்பு, மரங்கள் என காற்றோட்டமான வகையில், ஆத்தூர் முதன்மைச் சாலையையொட்டி அமைந்துள்ளது. நாள்தோறும் முந்நூறுக்கும் மேற்பட்ட வாசகர்கள் நூல்கள், செய்தித்தாள்கள் வாசிக்க வந்து செல்கின்றனர். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது.
இந்திய குடிமைப்பணிகள் தேர்வு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கென தனிப்பிரிவு தொடங்கப்பட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைஞர்களை பெருமளவு இந்த நூலகம் ஈர்த்துள்ளது. இது ஒருபுறம் இருக்க, முள்ளுவாடி ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால், நூலகத்திற்குச் சொந்தமான முகப்பு பகுதியில் கணிசமான பரப்பளவு பாதிக்கப்படுகிறது.
மேம்பாலம் கட்டுமானத்தால் சேலம் பேலஸ் திரையரங்கு அருகில் இயங்கி வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான நியூ செஞ்சுரி புத்தக கடையும் முற்றிலும் அகற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் வர்த்தக இடம் முற்றிலும் பாதிக்கப்படுவதால், அரசுக்குச் சொந்தமான இடத்தில் புத்தக நிலையம் அமைக்க மாற்று இடம் ஒதுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, மாவட்ட மைய நூலகத்திற்குச் சொந்தமான காலி இடத்தில் 450 சதுர அடி பரப்பளவுள்ள நிலத்தை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு கடை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், கடந்த ஜூலை 31ம் தேதி மாலை 4.30 மணியளவில், திடீரென்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மாவட்ட மைய நூலகத்தின் பின்பக்கம் உள்ள காலி இடத்தை நேரில் பார்வையிட்டார். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர். பத்து நிமிடங்கள் பார்வையிட்ட அவர் பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
அப்போது ஆட்சியர் ராமனிடம், திடீர் ஆய்வு குறித்து நாம் கேட்டபோது, 'சும்மா...நூலகத்தை ஆய்வு செய்ய வந்தேன். வேறு ஒன்றும் இல்லை,' என்று மழுப்பலான பதிலைச் சொல்லிவிட்டு காரில் ஏறி புறப்பட்டார்.
ஆனால், நூலகத்திற்கு புதிய புத்தகங்கள் கட்டுகட்டுகளாக வந்து இறங்கியுள்ளதால் அவை வாசகர்கள் அமரும் இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் நூலகத்திற்குள் வாசகர்கள் அமர்வதற்குக்கூட போதிய இடமின்றி தடுமாறி வருகின்றனர். பத்து நாள்களுக்கும் மேலாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் முடங்கியதால், பாதுகாக்கப்பட்ட குடிநீர்கூட இல்லாத நிலை நிலவுகிறது. கழிப்பறையில் கழிவுநீர் செல்லும் பாதை அடைப்பட்டிருந்ததால், கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தன.
ஆட்சியர் ஆய்வுக்கு வந்த நாளில், நூலகத்தின் நிலை அப்படித்தான் இருந்தது. ஆய்வு என்று சொன்னவர் நூலகத்திற்குள் செல்லாமலேயே வெளியே இருந்து பெயர் பலகையை மட்டும் பார்த்துவிட்டுச் செல்வது என்ன மாதிரியான ஆய்வோ? என்று நாம் மனதில் கேட்டுக்கொண்டோம்.
ஆனால், சில நாள்கள் கழித்த பின்னர்தான், ஆட்சியர் ராமன் வந்து சென்றது, தனியார் நிறுவனமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்காக, நூலகத்திற்குச் சொந்தமான இடத்தை தாரை வார்க்கும் வேலைக்காக வந்திருப்பதாக தகவல்கள் கசிந்தன. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு ஒதுக்கப்படுவதாகச் சொல்லப்படும் இடத்தில் விரைவில், குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம் கட்ட நூலகத்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியரிடம் நூலகத்துறை தரப்பில் எடுத்துச் சொன்ன பிறகும், அவர் தரப்பில் நூலகத்துறைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுவதால் ஆட்சியருக்கும் நூலகத்துறைக்கும் இடையே பனிப்போர் மூண்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் முதல்வரை நேரில் அணுகி இது தொடர்பாக பேசியதாகவும், அதனால் முதல்வரின் அரசுத்தரப்பு நேர்முக உதவியாளர், ஆட்சியருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், அதனால்தான் அவர் நூலகத்திற்குச் சொந்தமான இடத்தை தாரை வார்க்கத் துடிப்பதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சியரின் முடிவு, வாசகர்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நூலகத்தின் மூத்த வாசகரும், இலக்கிய ஆர்வலருமான சொல்லரசர் நம்மிடம், ''சேலம் மாவட்ட மைய நூலகம் பழமையான நூலகம். சேலம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது இருந்தே செயல்பட்டு வந்தாலும், எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது தான் இந்த நூலகம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த நூலகத்தை விரிவாக்கம் செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். அரசு இடத்தை அந்நியருக்கு விடக்கூடாது.
இப்போது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு இந்த இடத்தை விட்டுக்கொடுத்தால், பிறகு இன்னொரு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களும் இதே இடத்தில் ஏதாவது கடை நடத்த அனுமதி கேட்பார்கள். அதன்பின் ஆளுங்கட்சியினரும் உள்ளே நுழைவார்கள். பெரிய அறிவுஜீவிகளையும், படைப்பாளர்களையும், போட்டித்தேர்வுகள் மூலம் அதிகாரிகளையும் உருவாக்கும் வகையில் இந்த நூலகத்தை கன்னிமாரா நூலகம் போல் விரிவாக்கம் செய்ய வேண்டுமே தவிர, இப்படி தனியாருக்கு இடம் கொடுப்பதை கைவிட வேண்டும். வாசகர்களுக்கு ஏசி வசதி, வாசிப்பை பகிர்ந்து கொள்ள கூட்ட அரங்கு வசதிகள் செய்ய வேண்டும்,'' என்றார்.
இது தொடர்பாக நாம் சென்னையில் உள்ள நூலகத்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.
''சேலம் மாவட்ட மைய நூலகம், 1953ம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. சேலம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் ஒன்றாக இருந்தபோது இதுதான் ஒரே மைய நூலகம். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என வாசகர்களுக்கு தனித்தனி வாசிப்புப்பகுதி ஏற்படுத்தும் திட்டம் இருக்கிறது. அப்படிச் செய்தால், இப்போது இருக்கும் இடமே எங்களுக்கு போதாது. விரைவில், 50 லட்சம் ரூபாயில் சிறுவர்களுக்கான நூலகம் கட்டுவதற்கான பணிகளை துவங்க இருக்கிறோம். அந்த நூலகத்துடன் சிறுவர் விளையாட்டு பூங்காவும் உருவாக்கப்பட உள்ளது.
சிறுவர் நூலகம் கட்டுவதற்கான இடத்தைதான் இப்போது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு ஒதுக்க ஆட்சியர் ராமன் திட்டமிட்டுள்ளார். இந்த இடம் குறிப்பிட்ட அந்த நிறுவனத்துக்கு இலவசமாக கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அரசுக்குச் சொந்தமான இடத்தில் தனியாரை அனுமதித்தால் இதுவே எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் அபாயமும் இருக்கிறது.
மேலும் பலரும் எல்லா மாவட்டங்களிலும் நூலக இடங்களை ஆக்கிரமிக்கும் அபாயமும் உள்ளது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் உள்ளிட்ட எந்த ஒரு தனியாருக்கும் இடம் கொடுக்க சம்மதம் இல்லை என்று நூலகத்துறை இயக்குநர் வரை ஆட்சேபனையை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் சொல்லி விட்டோம். இதற்குமேல் அவர்தான் இப்பிரச்னையில் முடிவெடுக்க வேண்டும்,'' என்றனர்.