கந்துவட்டியை இப்படித்தான் கட்டுப்படுத்தியது கேரளா...
கந்துவட்டித் தொல்லை, தமிழகத்தில் பல காலமாக இருக்கின்றது. அவ்வப்போது அரசு நடவடிக்கையெடுத்தால் சற்று அடங்கியது போல இருந்தாலும், கண்டுகொள்ளாத அரசுகள் அமையும்பொழுது, முழுமையாகத் தலையெடுக்கும். கடன் வாங்கியவர்கள் பணம் செலுத்த முடியவில்லை என்றால் மிரட்டுவது, துன்புறுத்துவது மற்றும் அவர்களின் உரிமையில் உள்ள வாகனம், சொத்து, வீடு, நகை போன்றவற்றை அபகரிப்பது என்று ரவுடித்தனம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சிலர் தற்கொலை எனும் முடிவை தேடிக்கொள்கின்றனர்.அவ்வாறுதான் நெல்லையில் கந்து வட்டி தொல்லை காரணமாக ஒரு குடும்பமே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தனர். இந்த செய்தி தமிழகத்தில் உள்ள அனைவரையும் கந்து வட்டியின் கொடுமைகளை திரும்பி பார்க்க செய்துள்ளது. அரசும் அதிகாரிகளும் கந்து வட்டியை முழுமையாக ஒழிப்பதாகக் கூறிவருகின்றனர்.
நெல்லைத் தீக்குளிப்பு துயரம்
இதே போன்று மே மாதம் 2014 ஆம் ஆண்டில் கேரளாவில் கந்து வட்டி கொடுமையால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.இதனால் கேரள அரசாங்கம் கந்து வட்டியையும் மற்றும் 'பிளேட் மாஃபியா'வை ஒழிக்க 'ஆப்பரேஷன் குபேரா' என்றொரு திட்டத்தை கொண்டு வந்தது. பிறகு மக்களுக்கு கந்து வட்டி விடுபவர்கள்,தொல்லை கொடுப்பவர்கள் என்று அனைவரையும் கைது செய்தது. நம்மூர்களில் 'இன்கம் டாக்ஸ்' ரெய்டு அடிக்கடி நடப்பது போன்று, குபேரா குழு ரெய்டு நடத்தியுள்ளது. கந்து வட்டிக் கொடுமைகள் குறித்து மக்கள் புகார் தெரிவிக்க அவசர உதவி தொலைபேசி எண்ணும் அறிவித்தது. அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா இதனை செயல்படுத்தினார்.
ரமேஷ் சென்னிதாலா
2014 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை இந்த 'ஆப்பரேஷன் குபேரா' குழு 14160 ரெய்டுகள், 3200 கேஸ்கள் அதில் 2594 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், 2459 நபர்களுக்கு 'சார்ஜ் ஷீட்' போடப்பட்டுள்ளது, 1373 ரிமான்ட்கள் மற்றும் 7 காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 4.5 கோடி பணம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
'ஆப்பரேஷன் ஷைலாக்'
'கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம்' போன்ற மாவட்டங்களில், இந்த 'ஆப்பரேஷன் குபேரா' குழுவால் மட்டும் சமாளிக்க முடியாமல் மேற்கொண்டு 'ஆப்பரேஷன் ஷைலாக்' மற்றும் 'ஆப்பரேஷன் ஆக்டொபஸ்' என்று மேலும் இரண்டு நடவடிக்கைகளைக் கொண்டு வந்து கந்துவட்டிக்காரர்கள் கடன் வாங்கியவர்களிடம் சட்டவிரோதமாக வாங்கி வைத்த நகைகள், பிராமிஸரி நோட்டுகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர். இதன் மூலம் கந்து வட்டியை முன்பை விட பல மடங்கு குறைத்தனர். ஒரு கட்டத்தில் கேரளாவில் மாதம் சுமார் 2000 கோடி அளவுக்கு கந்து வட்டிக்காரர்கள் சாதாரண பொதுமக்களிடம் வட்டியாக சம்பாரித்ததாக கூறப்படுகிறது. 2016 ஆண்டு மே மாதம் கேரள முதல்வராக பொறுப்பேற்ற 'பினராயி விஜயனும்' ஆப்பரேஷன் குபேராவை சில மாற்றங்களுடன் செயல்படுத்தி வருகிறார். அங்கு கந்துவட்டி முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கூறமுடியாவிட்டாலும், வெளிப்படையாக இல்லாமல், கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ளூர் அரசியலும் கந்துவட்டியும் நெருக்கமாக இருக்கின்றன. பெரும்பாலான கந்துவட்டிக்காரர்கள், அரசியல்வாதிகளாகவும் அரசியல் நட்புள்ளவர்களாகவும் இருக்கின்றனர். இதைப் போன்ற உறுதியான நடவடிக்கைகள் எடுத்தால்தான் இந்த மீட்டர் வட்டி, ஸ்பீட் வட்டி, ரன் வட்டி எல்லாம் ஒரு கட்டுக்குள் வரும். கண் முன்னே உயிர்கள் கருகிவிட்டன, இனியாவது சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்று பார்ப்போம்...
சந்தோஷ்