Skip to main content

“திராவிடம் என்ற காலாவதியான தத்துவத்தைப் பேசி உரிமைகளை இழக்கிறோம்” - ராமதாஸ்

Published on 31/10/2024 | Edited on 31/10/2024
Ramadoss said We are disenfranchised by outdated philosophy of Dravidianism

தமிழ்நாடு நாளில், தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வளர்ச்சிமாடலை உருவாக்க உறுதி ஏற்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘சென்னை மாகாணம் என்ற பெயரிலான பெரு நிலப்பரப்பு 68 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் ஒன்றாம் நாளான இதே நாளில் தான் மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. அந்த வகையில் நவம்பர் ஒன்றாம் தேதி  தான் உண்மையான தமிழ்நாடு நாள். இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அதை நாம் சகோதர உணர்வுடன்  ஏற்றுக் கொண்டோம். நமது நிலப்பரப்பை சகோதர மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்தோம். நம்மிடமிருந்து நிலத்தை பெற்றுக் கொண்ட திராவிட மாநிலங்கள் எதுவுமே நமக்கு நீரைக் கூட தர மறுக்கின்றன. அதனால் தான் கூறுகிறேன், மொழிவாரி மாநிலங்களால் நாம் அடைந்ததை விட இழந்தது அதிகம். நாம் இழந்த உரிமைகள் உள்ளிட்ட அனைத்தையும் மீட்டெடுக்க இந்த நாளில் உறுதியேற்போம்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக திராவிடம் என்ற காலாவதியாகிப் போன தத்துவத்தைப் பேசி நமது உரிமைகளை இழந்து வருகிறோம். தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறோம். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ்நாடு அதன் திறனுக்குரிய வளர்ச்சியை எட்ட வேண்டும். அதற்காக வளர்ச்சி மாடல் அரசை உருவாக்க வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தவும் இந்த நாளில் நாம்  உறுதி ஏற்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்