Mallikarjuna Kharge's response to Prime Minister's comment

சர்தாய் வல்லபாய் படேலின் 149வது பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத்தில் ராஷ்ட்ர்ய ஏக்தா திவாஸ் நிகழ்ச்சி இன்று கொண்டாடப்பட்டது. இரண்டு நாள் பயணமாக குஜராத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு சென்ற அவர், சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கேவாடியில் உள்ள யூனிட்டி ஆஃப் பரேல் மைதானத்தில் நடைபெறும் ராஷ்ட்ர்ய ஏக்தா திவாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வரும். நாம் இப்போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறோம். இது இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டம் தேச ஒற்றுமைக்கு தேவையான ஒன்றாகும். ஒற்றுமை மூலமே வளர்ச்சி ஏற்படும். நாட்டை பலவீனப்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. சாதி ரீதியாக சமுதாயத்தை பிளவுப்படுத்துவது போன்றவற்றில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ராணுவத்தைக் கூட விமர்சனம் செய்து பலவீனப்படுத்த முயற்சி செய்கின்றன. தேச ஒற்றுமைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன” என்று பேசினார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், ஒரே நாடு ஒரே தேர்தல் விரைவில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பிரதமர் மோடி என்ன சொன்னாரோ அதை அவர் செய்யமாட்டார். ஏனென்றால், நாடாளுமன்றத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் என்று வரும்போது, ​​அவர் அனைவரையும் நம்பிக்கையில் வைக்க வேண்டும், அப்போதுதான் இது நடக்கும். இது சாத்தியமற்றது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது” என்று தெரிவித்தார்.