இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் இதே நாளில், சர்தார் வல்லபாய் படேலின் 149வது பிறந்தநாளும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ராஷ்ட்ர்ய ஏக்தா திவாஸ் நிகழ்ச்சி குஜராத் மாநிலத்தில் கொண்டாடப்படும். இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்றே இரண்டு நாள் பயணமாக குஜராத்துக்கு சென்றார்.
அங்கு சென்ற அவர், சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கேவாடியில் உள்ள யூனிட்டி ஆஃப் பரேல் மைதானத்தில் நடைபெறும் ராஷ்ட்ர்ய ஏக்தா திவாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “இந்த முறை தேசிய ஒற்றுமை தினம் ஒரு அற்புதமான தற்செயல் நிகழ்வைக் கொண்டு வந்துள்ளது. இன்று நாம் ஒற்றுமையின் பண்டிகையைக் கொண்டாடுகிறோம், மறுபுறம் இது தீபாவளி பண்டிகையாகும். இந்த நாளில், நாட்டை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், இந்தியாவை உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கத் தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகை, பல நாடுகளில் தேசிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் விரைவில் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வரும். நாம் இப்போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறோம். இது இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டம் தேச ஒற்றுமைக்கு தேவையான ஒன்றாகும். ஒற்றுமை மூலமே வளர்ச்சி ஏற்படும். நாட்டை பலவீனப்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. சாதி ரீதியாக சமுதாயத்தை பிளவுப்படுத்துவது போன்றவற்றில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ராணுவத்தைக் கூட விமர்சனம் செய்து பலவீனப்படுத்த முயற்சி செய்கின்றன. தேச ஒற்றுமைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன.
ஜம்மு காஷ்மீர் மக்கள் பிரிவினைவாதம், பயங்கரவாதத்தை நிராகரித்துள்ளனர். தங்கள் வாக்குகள் மூலம் அரசியலமைப்பை, ஜனநாயகத்தை வெற்றிப்பெறச் செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் முதல்வர் இந்திய அரசமைப்பின் உறுதிமொழியை முதல்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளார். 75 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய அரசியலமைப்பை காஷ்மீர் முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார்” என்று கூறினார்.