மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் பரசுராம். இவருக்கு திருமணமாகி தபஸ்யா என்ற 15 வயது மகள் இருந்தார். தொழில் நிமித்தமாக மகாராஷ்டிராவில் இருந்து தனது குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வந்தார்.
பரசுராமின் மகள் தபஸ்யா, கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த 21ஆம் தேதி, சக மாணவர்களுடன் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, கிரிக்கெட் பந்து தபஸ்யா தலையின் மீது பட்டுள்ளது. இதில், அவர் நிலைகுலைந்த்ய் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
கிரிக்கெட் பந்து பட்டு படுகாயமடைந்த தபஸ்யாவை அங்குள்ளவர்கள், மீட்டு உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில், கோழிக்கோடு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்ததால், தபஸ்யாவின் குடும்பத்தினர், அவரை மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்ற தபஸ்யா, இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கிரிக்கெட் பந்து தலையில் பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.