உத்தரபிரதேசம் மாநிலத்தில் புல்டோசர் கலாச்சாரம் புழக்கத்தில் இருந்து வருகிறது. அரசுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியிருந்தால், அரசு அதனை புல்டோசர் கொண்டு இடித்து வருகிறது. அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுப்பட்டு பொதுச் சொத்துகளுக்குச் சேதப்படுத்தும் நபர்களின் வீடுகளையும் யோகி ஆதித்யநாத் தலைமையில்னாக பாஜக அரசு புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கி வருகிறது. அவ்வப்போது பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக சில இஸ்லாமியர்களின் வீடுகள் கூட புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், லக்னோவில் உள்ள ஒரு காவல் நிலைய கட்டிடம் புல்டோடர் கொண்டு இடிக்கப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லக்னோவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால், அந்த பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
அப்போது, சித்தார்த்நகர் பகுதியில் 55 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றும் பட்டியலில் இருந்த நிலையில், அதில் கோட்வாலி காவல்நிலையத்தின் சுற்றுச் சுவரும் ஒன்று. இதன் காரணமாக அதிகாரிகள் புல்டோசருடன் காவல் நிலையம் முன்பு வந்தனர். ஆனால், அந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள், “எழுத்துப்பூர்வமாகக் கடிதம் கொடுக்காமல் எப்படி கட்டிடத்தை இடிக்க வந்தீர்கள்” என்று வாக்குவாதம் செய்தனர். அதற்கு, “நாங்கள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வந்தோம்; அதில் ஒரு கட்டிடம் மட்டும் விதிவிலக்கா என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, “எங்க காவல் நிலைய கட்டடம் மட்டுமா அப்படி இருக்கிறது... அருகே இருக்கும் தாசில்தார் அலுவலக சுற்றுச்சுவரும் தான் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது” என்று போலீசார் கூற உடனே, புல்டோசருடன் அங்கு சென்ற அதிகாரிகள் சுற்றுச்சுவரை இடித்தனர். அதன் பிறகு காவல்நிலையத்தின் சுற்றுச்சுவரையும் இடித்து தரைமட்டமாக்கினர். இது அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் மத்திலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.