புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசுப்பள்ளியில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் ஒன்றுகூடி ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தனர். உடல் தளர்ந்த நிலையில் முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பெருமிதம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1998 ஆண்டு மேல்நிலை வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள் தங்களது வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட அரசுப்பள்ளியில் பள்ளிப்படிப்பின் இருபது ஆண்டுகால நிறைவை கொண்டாட முன்னாள் மாணவர்கள் முடிவு செய்தனர். இந்நிகழ்வில் தங்களுக்கு ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள முன்னாள் ஆசிரியர்களை இந்நிகழ்விற்கு கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தனர். விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார், சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சின்னப்பா, கிராமக்கல்விக்குழு நிர்வாகிகள் தம்பிராஜ் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உதவித்தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் செய்திருந்தார்.
விழாவின்போது பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முதன்மைக்கல்வி அலுவலர் தமிழரசு, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் கௌதமன், சிவக்குமார், பள்ளியின் முன்னாள் இயற்பியல் சேகர், முதுகலை ஆசிரியர் சப்பாணிமுத்து, கணித ஆசிரியர் முருகையன் ,விலங்கியல் ஆசிரியர் அழகிரிசாமி ,தமிழ் ஆசிரியர் அப்பாசாமி , அறிவியல் ஆசிரியர்கள் திருநாவுக்கரசு ,ஜெய்சிங் , கணித ஆசிரியர் அய்யாத்துரை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் சீனிவாசன்,தாமஸ் இம்மானுவேல் ஆகியோரை பாராட்டி முன்னாள் மாணவர்களின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் பல துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர், கோபிநாத் காவல்துறை உதவி ஆய்வாளராகவும் , ஜகாங்கீர் லண்டனில் கணினி இயந்திர பொறியாளராகவும், செந்தில்ராஜன் , ஸ்டாலின் , கலையரசன் , ரவி கணினி மென் பொறியாளர்களாகவும், கருப்புச்சாமி சென்னையில் போக்கு வரத்து நிறுவன அதிபராகவும், மணிகண்டன் , முத்துக்குமார்,ரமேஷ்குமார், சுரேஷ்குமார், இளையராஜா , பாரதி தாசன் , அண்ணாத்துரை , பால்ராஜ் , குமாரவேல் , முருகாயி, அருந்தேவி, மனோகரன் ஆகியோர் அரசுப்பள்ளி ஆசிரியர்களாகவும், தெய்வராசு, கோதண்டபாணி ஆகியோர் கல்லூரி பேராசிரியர்களாகவும் , ரமேஷ் தனியார் போக்குவரத்து மேலாளராகவும் , செல்வேந்திரன், ஜானகிராமன், செந்தில் வேல் , முருகானந்தம், கோதண்டராமன், விஜயகுமார், சித்திரவேல் ஆகியோர் தனியார் நிறுவனங்களை நடத்தி சுய தொழில் புரிவோராகவும் பலர் நாட்டுக்கே சோறு கொடுக்கும் விவசாயிகளாகவும் வாழ்வில் உயர்ந்ததற்கு தங்களது ஆசிரியர்கள்தான் காரணம் என வாழ்த்தி பேசினர்.
முன்னாள் மாணவர்கள் சார்பில் பேசிய ஜகாங்கீர் தான் தற்போது லண்டனிலுள்ள ஒரு நிறுவனத்தில் தாம் நிர்வாகத்தலைவராக இருப்பதாகவும் , தற்போது தமது திறமைகளுக்கு அடித்தளமிட்டது இந்தப்பள்ளியின் ஆசிரியர்களும், இந்த வகுப்பறைகளும் தான் என நினைவு கூர்ந்தார் மேலும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ள அனைவரும் சமூகத்தின் உயர்ந்த நிலையில் இருப்பதற்கு அடித்தளமாக விளங்கிய எம் ஆசிரியர்களை என்றும் நன்றியோடு பார்க்கிறோம் மேலும் இப்பள்ளிக்கும் தற்போதுள்ள மாணவர்களின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து நலப்பணிகளை செய்ய தயாராக உள்ளோம், தற்போது பள்ளிக்கு சைக்கிள் நிறுத்துமிடம் அமைத்து தர முடிவு செய்துள்ளோம் என்றார் .
ஏற்புரை வழங்கிய முன்னாள் தலைமை ஆசிரியர் கவுதமன் பேசியதாவது, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய எங்களை தேடிபிடித்து இவ்விழாவில் சிறப்பித்த எங்கள் முன்னாள் மாணவர்களின் ஏற்பாடு மிகுந்த மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய முன்னாள் விலங்கியல் ஆசிரியர் மனித நேயத்தையும் , சமூக நெறிகளையும் கற்பிக்கும் இடமாக அரசுப்பள்ளிகள் இருப்பதை நன்றி நவிழும் இந்த நிகழ்வு மெய்ப்பித்துள்ளது என்றார்.
முன்னாள் முதன்மைக்கல்வி அலுவலரும் இப்பள்ளியின் முன்னாள் ஆசிரியருமான தமிழரசு பேசுகையில் , இங்கே எங்களுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் மாணவர்கள் கிழிந்த உடையோடு பள்ளிக்கு வந்த அடித்தட்டு மாணவர்கள் என்றாலும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை அப்படியே பயன்படுத்தி கொண்டதால் இன்று உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர், உடையும் , பகட்டும் மனிதனை உயர்த்தாது , அரசுப்பள்ளியில் படிப்பவர்கள் மட்டும் சுய படைப்புத்திறன் மிக்கவர்களாக இருக்கிறார்கள். எனவே அரசுப்பள்ளிகளில் படிக்கும் தற்போதைய மாணவர்களே நீட் உள்ளிட்ட எதையும் எதிர்கொள்ளும் திறனை வளர்க்க தற்போதைய ஆசிரியர்களின் உழைப்பு போற்றத்தகுந்த வகையில் உள்ளது என்றார்.