Skip to main content

ஆபத்தான தடை! போராடும் சிவகாசி!

Published on 14/11/2018 | Edited on 14/11/2018
Dangerous ban! Fight for Sivakasi!


 

சிவகாசி கொந்தளித்துப் போய்க் கிடக்கிறது. காரணம். உச்சநீதிமன்றத்தின் தடை 8 லட்சம் பட்டாசுத் தொழிலாளர்களின் அடிப்படை ஆதாரமான உயிர் நாடியை அறுப்பது போன்ற உணர்வு. காலம் காலமாக விளிம்பு நிலை மக்களின் அரை அடி வயிற்றை வளர்க்கிற அடிப்படைத் தொழிலே ஆட்டம் கண்டிருக்கிறது என பரிதவிக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கான விடை இல்லை. 
 

இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பட்டாசுத் தயாரிப்புத் தொழில் மரணத்தின் பிடியிலிருப்பதை உணர்ந்த அந்தத் தொழிலின் படைப்பு நகரமான சிவகாசி, தனது அடுத்தகட்ட நகர்வை ஆலோசிக்கத் தொடங்கியது.
 

நல்லா இருந்த சிவகாசியும், நீதிமன்றத் தீர்ப்புப் பற்றியுமான ஆய்வுக்காக நவ. 12 அன்று சிவகாசி நகர பட்டாசு மற்றும் கேப் வெடி தயாரிப்பு உரிமையாளர்களின் அமைப்பான டான்ஃபாமா அனைத்துத் தயாரிப்பாளர்களையும் உள்ளடக்கிய கலந்துரையாடலை நடத்தியது.
 

ஏறத்தாழ 80 சதவீத தயாரிப்பு உரிமையாளர்கள் திரண்டிருந்த கூட்டம் கொதிப்புடனிருந்தது.
 

டான்ஃபாமாவின் தலைவர் ஆசைத்தம்பி தடை பற்றியும் அதன் தெளிவற்ற நிலை பற்றியும் உறுப்பினர்களுக்கு விரிவாகச் சொன்னார்.
 

பட்டாசுத் தயாரிப்பைப் பற்றியும் அதில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களையும் பற்றிய அரிச்சுவடி தெரியாத மத்திய, மாநிலத்தின் சில அதிகாரிகளே தங்களுக்குத் தெரிந்த ஞானத்தைக் கொண்டு நீதிமன்றத்திற்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் அடிப்படைத் தன்மையை நீதிமன்றத்திக்குச் சரியாகப் புரியவைக்கவில்லை. அதனால் தான் நம் தொழிலுக்கு இந்த நிலைமை. பசுமைப் பட்டாசுதான் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவு. ஆனால் அதை எப்படி தயாரிக்க வேண்டும் என்னென்ன ரசாயன மூலக்கூறுகள் தேவை என்று இந்த நிமிடம் வரை அதிகாரிகளுக்குக்கூடத் தெரியாத ஒன்று.
 

இது ஒரு விசித்திரமான வழக்கு. நம் தொழில் பற்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும். அவர்களைத் திரட்ட வேண்டும். தீர்ப்பின் அபாயம் பற்றி யாருக்கும் தெரியாது. ஒட்டு மொத்தமாகக் கிளம்பினால்தான் தீர்வு காண முடியும். இல்லையென்றால் 1070 தொழிற் சாலைகளைக் கொண்ட நம் தொழில் முடிவை நோக்கிச் சென்று விடும் என்று யதார்தத்தைச் சொல்ல கூட்டத்தில், அனல் பற்றிக் கொண்டது. ஆபத்தின் வீரியம் அவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

 

Dangerous ban! Fight for Sivakasi!


 

அடுத்துப் பேசிய நிர்வாகியான மாரியப்பன், இந்த் தீர்ப்பால் எந்த ஒரு பட்டாசு பேக்டரியும் செயல்படாது. இந்த வழக்கிற்காகப் போராடிய நமக்கு 80 லட்சம் செலவு ஆகியிருக்கு. அந்தச் செலவுக்குப் பின்பே, இத்தகைய தடையை பெற்றுள்ளோம். முதலில் தடை இல்லை என்றார்கள். பின்பு இப்படி ஒரு தீர்ப்பு. மாநில அரசும், மத்திய அரசும் நமக்குப் பாதுகாப்பாக இல்லை. மூன்று அதிகாரிகள் தான் இதற்குக் காரணம். அலுமினியம் குறைந்த அளவு தான் பயன்படுத்த வேண்டும். அது இல்லாமல் பட்டாசு தயாரிப்பு இல்லை என்ற யதார்த்தம் அவர்களுக்குத் தெரியாதா?. பசுமைத் தீர்ப்பாய தலைவர் அப்துல் காதர் சட்டம் தெரிந்தவர். விவரமாகச் சொல்லியிருக்க வேண்டும். அதனால் இந்தத் தடை. நடைமுறையில் பெரியத் தடையாக நிற்கிறது. வரும் டிசம் 11ல் மறுபடியும் வழக்கு வருகிறது. அதில் நமது தரப்பை முழுமையாகத் தெரிவிப்போம் என்றது கூட்டத்தின் விவாதமானது.
 

தொடர்ந்து பேசிய நிர்வாகிகளின் பேச்சில், காரம் தெறித்தது.
 

நாம் நம்முடைய கடைசிக் கட்டத்தில் நிற்கிறோம். வாழ்வா, சாவா விவகாரம். இதை முழுமையாக நீக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவுகட்ட வேண்டிய நேரமிது. என்று முன்னாள் நிர்வாகியான ராதா கிருஷ்ணன் பேசியது விஷயத்தின் நெருக்கடியை உணர்த்தியது.
 

தொடர்ந்து பேசிய உறுப்பினர்களான இளங்கோவன், கண்ணன், உள்ளிட்ட உறுப்பினர்களின் பேச்சில் தீர்ப்பு, தொழில் அபாயம் பற்றிய எதிரொலிப்பு இருந்தது.
 

வெளிநாடுகளில் பட்டாசு வெடிப்புகளுக்கு எந்த ஒரு தடையும் கிடையாது. ஆனால் இந்தியாவில் மட்டுமே தடை. நம் தேசத்தில் அன்னியத் தயாரிப்புகளை எதிர்ப்பவர்கள் நமது சுதேசித் தயாரிப்பான பட்டாசு தயாரிப்புத் தொழிலை எதிர்க்கிறார்கள். மத உணர்வுகளைப் பேணிக் காக்க வேண்டும் என்கிறார்கள்.
 

தேசத்தின் கலாச்சாரமான பட்டாசிற்குறிய இந்தத் தடையை நாம் முழு பலத்தோடு எதிர்க்க வேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பு அது நமக்குப் புடிக்கிறதோ புடிக்கலையோ, அதுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும். இந்தத் தடை நிரந்தரமல்ல.
 

அரசுக்கு நாம் பல நூறு கோடிகள் வரியாகக் கட்டுகிறோம். ஆனால் இந்த ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு இல்லை. நமது தொழில் மூடப்பட்டால் இந்த அரசுக்கு பெருத்த வருமானம் இழப்பு ஏற்படும். அப்போதான் உரைக்கும். இந்த அரசுதான் வெடிப் போடும் சின்னப் புள்ளைக 2300 பேர் மேல கேஸ் போட்டு நம்ம தொழிலையும் சிவகாசியையும் நசுக்குது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலயும் வெடிச்சதா வழக்குப் போடவேயில்ல.ரெண்டு மணிநேர வெடிப்புக்காக நாம் வருடம் முழுக்கப் பட்டாசு தயாரிக்க முடியுமா. தயாரிப்பு ரெண்டு மணி நேரத்துல காலியாயிறுமா. அதிகாரிக இன்ஸ்பெக்ஷன் வந்தா வெளிய தெரியாம அள்ளிக் குடுக்கிற மாதிரி செலவப்பத்தி யோசிக்கக் கூடாது. ஜெயிக்கனும். என்று கூட்டத்தில் கொட்டிய உணர்வுகள், போராட்டத்தின் வலிமையை பெருக்கியது.
 

கூட்டத்தில் எழுந்து நின்ற பட்டாசு விற்பனையாளரான காமராஜ்,
 

பிரதமர் மோடி, தொழில் வளர்ச்சிக்காக நமது விருதுநகர் மாவட்டத்தைத் தத்தெடுத்தவர், தொழில் முன்னேற்றத்தில் இந்த மாவட்டத்தை மாதிரி மாவட்டமாக மாற்றுவேன்னு சொன்னார். அதுக்கப்புறம் ஒரு திட்டத்தையும் முன்னேற்றத்திற்காக அவர் கொண்டுவரல. ஆனால் தொழில் கெட்டு, சிவகாசி சீரழியுறத நாம பிரதமர் கவனத்துக்குக் கொண்டு போகணும் என்று சொன்னது சலசலப்பை ஏற்படுத்தியது.
 

ராஜதுரை சொன்ன கருத்து சரவெடி ரகம்.
 

தடையால தொழில் நெறுக்கடி ஏற்பட்டிருக்கு. நாம தொழில மூடுனா பாதிப்பான லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப் போவுது. சபரிமலை தீர்ப்பை எதிர்த்துப் போராடுரது வெளிய தெரியுது. ஆனா, நம்ம எதிரி யாருன்னே நமக்குத் தெரியல. வரப் போர எம்.பி. எம்.எல்.ஏ உள்ளாட்சித் தேர்தல நாம புறக்கணிக்கனும். நாம, நம்ம தொழிலாளர் குடும்பங்க கண்டிப்பா ஓட்டுப் போடக்கூடாது என்றது உறுப்பினர்களை நிமிர வைத்தது.

 

Dangerous ban! Fight for Sivakasi!


 

இறுதியாக நீதிமன்றத்தில் எதிர் கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பற்றிப் பேசி முடித்து வைத்த செயலர் மாரியப்பனிடம் பேசியதில்.
 

ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில் கூட எங்கள் தரப்பைப் பற்றி டே்கவில்லை. தடையில்லை. ஆனா நிபந்தனைகள் மட்டுமே என்று சொல்லப்பட்ட பின்பு இது போன்றதொரு நாங்கள் எதிர்பார்க்காத தடை. காற்று மாசுவைப் பொறுத்தமட்டில் டெல்லிநகரின் நிலைமையே வேறு. அங்கு நிலவும் கடுமையான மாசு, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலயும் கிடையாது. டெல்லி நகரில் நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு நடக்கிற தொழிற்சாலைகள். அண்டைப் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்பயிரில் வைக்கப்பட்ட நெருப்புப் புகை காரணமாக ஏற்பட்ட அடர்த்தியான காற்று மாசு எப்போதும் டெல்லியைச் சுற்றியிருக்கும். ஆனா பட்டாசு வெடிப்பின் மாசு 48 மணிநேரத்தில் குறைந்து விடும் தன்மை கொண்டது என்று மாசு கட்டுப்பாட்டு கொடுத்த ரிப்போர்ட் கவனிக்கப்படவில்லை. மாறாக டெல்லி நகரில் நிலவும் மாசுத் தன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு பட்டாசுக்குத் தடை போடப்பட்டிருக்கு.
 

பட்டாசுத் தயாரிப்பில் ஒளியை ஏற்படுத்தக் கூடிய பேரியம் நைட்ரேட் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் மத்தாப்பு, சக்கரம், புஸ்வானம் போன்ற ஒளி வகைப் பட்டாசுகளுக்கு இது தேவை. இந்த மூலப் பொருட்களின்றி 60% பட்டாசுகள் தயாரிக்கவே முடியாது. சி.எஸ்.ஐ.ஆர். ஆய்வுக்கூடம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தனது இடைக்கால அறிக்கையில், பசுமைப் பட்டாசுக்கான ஒரு சில தீர்வு ஜூலை 2019க்குள் தான் கொடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. அதை நீதிமன்றம் கவனிக்காமல் பசுமைப் பட்டாசு தயாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இது போன்று சில தெளிவற்ற விஷயங்கள் உள்ளதால் மறு விசாரணையில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம். என்றார்.
 

இதனிடையே தீபாவளிக்குப் பின் அண்டை நகரம், கிராமப் பகுதிகளில் நடந்த அறுவடைப் பயிர் கழிவுகளின் தீ எரிப்புக் காரணமாக ஏற்பட்ட புகையின் டென்சிட்டி (அடர்த்தி) அளவு 299 மைக்ரோ கிராம் கியூபிக் மீட்டராக உயர்ந்த டெல்லியின் மாசு, மற்ற பகுதியில் 477 மைக்ரோ கிராம் கியூபிக் மீட்டராக இருந்ததாக சிபிசிபி யான மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தரவுகளின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் டெல்லியின் 28 பகுதிகள் காற்றின் தரம் மோசம் என்ற பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.