2022 ஆம் ஆண்டில் மக்களுக்கான நீதியை வழங்குவதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் இரண்டு வழக்குகள் தொடர்பான விடுதலை முடிவுகள் பெருத்த விவாதத்தை நாடு முழுக்க ஏற்படுத்தின.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 30 ஆண்டுகளாக சிறைவாசத்தை அனுபவித்து வந்த தமிழர்கள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக கவர்னர் முடிவெடுக்கலாம் என்று 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில், தமிழக அமைச்சரவையும் உடனடியாக 7 தமிழர்களையும் விடுதலை செய்யலாமென தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது. ஆனால், கவர்னர் அந்த தீர்மானத்தைக் கிடப்பில் போட்டார்.
இந்நிலையில், பேரறிவாளன் மீண்டும் தனது விடுதலைக்காக உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட, இம்முறை, அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்வதாக மே மாதம் 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கவர்னர் முடிவெடுக்கக் காலதாமதம் செய்ததையும், பேரறிவாளனின் உடல் நலம், நன்னடத்தை ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு விடுதலை செய்வதாக உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. பேரறிவாளனின் விடுதலைக்கு தமிழக முதல்வர், வைகோ, மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர். காங்கிரஸ் கட்சி எதிர்ப்பைப் பதிவு செய்தது.
பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து, நவம்பர் 11 ஆம் தேதி நளினி, சாந்தன் உள்ளிட்ட 6 தமிழர்களையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த விடுதலையின்போதும் ஆளுநர் முடிவெடுக்கக் காலதாமதம் செய்ததை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. இதன் மூலம் ஆளுநரின் செயல்பாடு கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இதேபோல் குஜராத் மாநிலத்தில், 2002 ஆம் ஆண்டில் நடைபெற்ற கலவரத்தால் 2000 பேர் வரை கொல்லப்பட்ட துயர சம்பவத்தின் போது, ராதிக்பூர் கிராமத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானோ என்ற பெண்மணி, அவரது மூன்றரை வயது மகள் சலேஹா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் மீது வன்முறையாளர்கள் கொடூரமான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் என்னவானார்களென்றே தெரியவில்லை. பில்கிஸ் பானோ, அவரது தாயார் மற்றும் மூன்று பெண்களையும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்களைக் கொடூரமாகத் தாக்கியதில் மற்றவர்கள் இறந்துவிட பில்கிஸ் பானோ மயக்கமடைந்ததால் அவரும் அவரது குழந்தையும் மட்டும் உயிர்பிழைத்தனர்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பில்கிஸ் பானோ, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கிடையே தொடர்ச்சியாக சட்டப்போராட்டம் நடத்தி, கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. 15 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரையும் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுதலை செய்தது நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் மனம் குமுறிய பில்கிஸ் பானோ மேல்முறையீடு செய்ய, அதில் நீதிமன்றத்துக்குப் பதிலளித்த குஜராத் அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின் பேரில்தான் குற்றவாளிகளை விடுதலை செய்தோமென்று தெரிவித்தது. இந்த விடுதலைக்கெதிராக ஓவைஸி, ராகுல் காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். பெண்களுக்கு ஆதரவான சமூக அமைப்புகளும் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.
- தெ.சு.கவுதமன்