Skip to main content

“அண்ணாமலையின் முதலாளிகளுக்கு மு.க. ஸ்டாலின் யார் என்று தெரியும்” - அமுதரசன் 

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

“The bosses of Annamalai know who M.K.Stalin is” - Amudharasan

 

பீகார் தலைநகர் பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சிக் கூட்டம் தொடர்பாக திமுக மாணவர் அணி செயலாளர் வழக்கறிஞர் அமுதரசன் நமக்கு அளித்த பேட்டி:

 

பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சிக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்கிறார். ஆனால், அதனை மத்தியில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என அண்ணாமலை கூறுகிறாரே?

 

தமிழ்நாட்டில் அண்ணாமலையை வைத்துக் கொண்டு பாஜகவினர் அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை பேசுவதில் 1 சதவீதம் கூட உண்மை இருக்காது. கும்மிடிப்பூண்டியை தாண்டினால் தமிழக முதல்வரை யாருக்கும் தெரியாது என்று கூறிய அதே அண்ணாமலை, மு.க. ஸ்டாலினை பார்த்து இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள் என்று கூறுகிறார்.  இதுவே பெரிய முரணாக இருக்கிறது. 

 

இன்றைக்கு இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓர் அணியில் சேர்க்கக் கூடிய வல்லமை படைத்தவர் நம் முதல்வர். காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இல்லாத மாநில கட்சிகளான எதிர்க்கட்சிகள் கூட இன்றைக்கு மு.க.ஸ்டாலின் எடுக்கும் இந்த முன்னெடுப்பில் கலந்து கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இது மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அதைப் பார்த்து பொறுத்துக் கொள்ளாத அண்ணாமலை வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறார்.

 

பாட்னா கூட்டம் வரவேற்பை பெற்று வருகிறது என்று கூறுகிறீர்கள். ஆனால் அங்கு தான் ‘கோ பேக் ஸ்டாலின்’ என்று ட்ரெண்ட் ஆகி வருகிறது என்று கூறுகிறார்களே?

 

கும்மிடிப்பூண்டியை தாண்டினால் முதல்வரை யாருக்கும் தெரியாது என்று சொல்கிறார்கள். அப்படிப்பட்டவரை பார்த்து ஏன் பயப்பட வேண்டும். யாருக்கும் தெரியாத முதல்வரை பார்த்து அமைதியாக போக வேண்டியது தானே. அண்ணாமலை போன்றவருக்கு முதல்வரை தெரியாமல் இருக்கலாம். ஆனால், அண்ணாமலையின் முதலாளிகளுக்கு மு.க. ஸ்டாலின் யார் என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் என்ன என்பதும் கண்டிப்பாக தெரியும்.

 

பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வருவதை விமர்சிப்பதால் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பீகார் முதல்வர் கலந்து கொள்ளவில்லை என்று கூறுகிறார்களே?

 

இதெல்லாம் அவர்கள் கூறும் கட்டுக்கதை தான். மொழியை வைத்தோ இங்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களை வைத்தோ திமுக என்றைக்கும் கிண்டல் செய்ததே இல்லை.

 

தன்னுடைய சொந்த கட்சியில் உள்ளவர்கள் உள்பட அனைவர் வீட்டிலும், கழிவறையிலும் கேமரா வைத்து வீடியோ எடுப்பது போன்று மலிவான அரசியலை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு கூட அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவினர் பேசியதை முன்னுக்குப் பின் ஒட்டி வடமாநில தொழிலாளர்களை கேவலமாக பேசுகிறார்கள் என்று புரளியை கிளப்பி வருகிறார். பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இதுபோன்று வேலை தான் பார்ப்பார்கள். அதைத் தான் அண்ணாமலை பார்த்து வருகிறார்.

 

இதுபோன்ற மலிவான பிரச்சாரங்கள் மூலமாகவும், மலிவான அரசியல் யுக்திகள் மூலமாகவும் தேர்தலில் வென்று விடலாம் என்று எண்ணுகிறார்கள். இதையே தான் இவர்களின் முப்பாட்டர்கள் முதற்கொண்டு செய்தார்கள். அதனால் இதையெல்லாம் நாங்கள் அப்போதே பார்த்து விட்டோம். ஆகவே இதுபோன்ற மலிவான பிரச்சாரங்களின் வாயிலாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை ஒரு போதும் சீர் குலைக்க முடியாது  என்று அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும்.