Skip to main content

''உண்மையை சொல்ல நினைத்த ஒரே காரணத்தால் நக்கீரன் எதிர்கொண்ட துஷ்பிரயோகங்கள் ஏராளம்''- சர்வதேச பத்திரிகையாளர் ரீடா பெய்ன் பேச்சு!

 

nakkheeran

 

யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன் (Universal Peace Federation) என்ற தொண்டு நிறுவனம் இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகளில் கிளைகளைக் கொண்ட ஒரு சர்வதேச தொண்டு நிறுவனம் இது. இந்த அமைப்பு ஆண்டுதோறும் 'அமைதிக்கான தூதர்' விருதுகளை வழங்கி வருகிறது. 

 

அந்த வகையில், நடப்பாண்டிற்கான 'அமைதிக்கான தூதர்' விருதுக்கு (Ambassador for Peace) நக்கீரன் ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷனின் அறங்காவலரான டாக்டர். அப்துல் பாசித் சையத், நீதியை நிலைநாட்டவும், பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டவும், அச்சமின்றி உண்மையை அம்பலப்படுத்தியதையும், துணிச்சலான முயற்சிகளை எடுத்த 'நக்கீரன் ஆசிரியர்' குறித்து இந்த அமைப்பின் செயலாளர் ரோபின் மார்ஷிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, நக்கீரன் ஆசிரியருக்கு 'அமைதிக்கான தூதர்' விருது வழங்க முடிவு செய்த  யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன், அதற்கான அழைப்பு கடிதத்தை நக்கீரன் ஆசிரியருக்கு வழங்கியிருந்தது. பிபிசி - ஏசியாவின் முன்னாள் ஆசிரியரும், காமன்வெல்த் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான திருமதி ரீதா பெய்ன் இவ்விருதை வழங்கினார். 

 

nkn

 

இந்நிகழ்வில் பிபிசி - ஏசியாவின் முன்னாள் ஆசிரியரும், காமன்வெல்த் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவருமான ரீடா பெய்ன் பேசுகையில், ''நக்கீரன் கோபால் அவர்களை அழைத்து இந்த விருதினை கொடுப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். ஏனென்றால் அவரது செயல்பாடுகள் குறித்து நான் நன்கு அறிவேன். ஊழல்களை வெளிகொண்டு வந்ததற்காக அவர் மிரட்டப்பட்டது, சிறையில் அடைக்கப்பட்டது குறித்தெல்லாம் நான் படித்திருக்கிறேன். உண்மையை மக்களுக்கு சொல்லவேண்டும் என நினைத்த ஒரே காரணத்தால் அவர் எதிர்கொண்ட அதிகார துஷ்பிரயோகங்கள் ஏராளம். இந்த சமூகத்திற்கான மிகவும் மதிப்பு மிக்க நபர் அவர்; உலகம் முழுவதும் உள்ள இளம் பத்திரிகையாளர்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரை சந்திப்பதற்கும், அவரை இந்த விருந்து சென்றடைவதற்கான ஒரு பாலமாய் இருப்பதற்கும் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்'' என்றார். 

 

அப்துல் பசித் சையத் - யூனிவர்சல் பீஸ் ஃபெடரேஷன் பொருளாளர் பேசுகையில், ''மக்களுக்கான அமைதி, அன்பு, நம்பிக்கை ஆகியவற்றிற்காக பாடுபடும் இந்த அமைப்பிற்கு இன்று ஒரு சிறப்பான நாள். தனிப்பட்ட ஒரு சாதனையாளராக பத்திரிகைத் துறையிலும், உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்காகவும் நக்கீரன் கோபால் அவர்கள் செய்த சாதனைகளைக் கூறி அவரை இங்கு அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.

 

இன்றைய சூழலில் பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 140 ஆவது இடத்தில் உள்ளது. என்னைப் பொறுத்தவரை இதில் இந்தியா இந்த நிலைக்கு சென்றிருக்க கூடாது. எதையெல்லாம் மக்கள் அதிகம் கவனிக்க வேண்டும் என்பதற்கான அளவுகோல்களை நிர்ணயிப்பதில் ஊடகங்கள் ஆழமான பங்கு வகிக்கின்றன என்று நான் நம்புகிறேன். முதன்முறையாக இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது, நான்கு முக்கியமான விஷயங்களை நாட்டின் தூணாக அது கருதியது. அதில் முதல் தூண் நீதித்துறை. அடுத்ததாக அனைத்து துறைகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரிகள். மூன்றாவது தூணாக, நாட்டுக்கான கொள்கைகளை உருவாக்கக்கூடிய அரசியல் அமைப்புகள் கருதப்பட்டது. ஒருவேளை இந்த மூன்று தூண்களும் ஊழல் மயமாகிவிட்டால் அவற்றை காப்பாற்றுவதே நான்காம் தூணான ஊடகத் துறையின் பணி. அந்த அளவுக்கு இந்திய அரசியலமைப்பில் ஊடகத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இன்று (ஊடக சுதந்திரத்திற்கு எதிராக) கவலைக்குரிய நிறைய செயல்பாடுகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் நடைபெறுகிறது. துருக்கியில் கஷோகி கொலை, இந்தியாவில் கல்புர்கி, கௌரி லங்கேஷ் கொலை போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால், ஊடக சுதந்திரத்தை காப்பதும் நிலைநாட்டுவதும் நமது தார்மீக கடமை.

 

கடந்த மூன்று தசாப்தங்களாக நண்பர் நக்கீரன் கோபால் மக்களுக்காகவும், மனித இனத்திற்காகவும் செய்திருக்கும் சேவைகள் குறித்து இங்கிருப்பவர்கள் அறிந்திருப்பீர்கள். நல்லவைகளை நல்லவைகளாகவும், கெட்டவைகளை கெட்டவைகளாகவும், உண்மையை மக்களுக்கு எடுத்துரைப்பதே ஓர் ஊடகத்தின் கடமை. ஒரு புலனாய்வு பத்திரிகையாளராக அவர் கண்டுள்ள வெற்றி மிகப்பெரியது. இந்தியாவில் நடந்த போதைப்பொருள் கடத்தல் குறித்தெல்லாம் அவருக்கே உரித்தான பாணியில்  பல பேட்டிகளை எடுத்து, அது குறித்து மிக ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.  நடுநிலையான நிலைப்பாட்டோடு தமிழகத்தின் முதல்வர்களை எதிர்த்தது, வீரப்பனை பேட்டி எடுத்தது போன்றவற்றோடு பல சூழல்களில் அனைத்து  பத்திரிகையாளர்களுக்குமான வெற்றிக்காக அவர் உழைத்துள்ளார். அவரது வெற்றி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, ஊடக சுதந்திரத்திற்காக அவர் வாதாடி, அதற்கு ஆதரவாக தீர்ப்பு பெற்றது நம்மை வியக்க வைக்கிறது. குரலற்றவர்களின் குரலாக ஒலிப்பதும், சமூகநீதி குறித்த பார்வைகளை ஊக்குவிப்பதும் இன்றைய உலகிற்கும், நாளைய எதிர்காலத்திற்கும் இன்றியமையாத ஒன்று. அவர் பாதுகாக்க விரும்பும் அதே சுதந்திரத்தை தான் நாங்களும் பாதுகாக்க முயற்சித்து வருகிறோம். எதிர்காலத்திலும் இந்த சமூகத்தின் நலனுக்கு நாம் இணைந்து உழைப்போம் என நம்புகிறேன்'' என்றார்.