மே17 ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது மத்திய அரசு. அந்த அறிவிப்பை எதிர்பார்த்தது போலவே இருக்கிறார்கள் மக்கள். எப்போது இந்த கரோனா பதற்றம் முடியும்? இன்னும் எவ்வளவு காலம் இப்படியே இருக்கும் என்பதுதான் மக்களின் ஒரே கேள்வி.
சுற்றுலா தொழில் சார்ந்த தங்கும் விடுதிகள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்டுகள், ரிசார்ட்டுகள் உள்ளிட்டவை அக்டோபர் வரை மூடப்பட்டிருக்கும் என இந்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால் மற்ற தொழில்கள்? மக்களின் வாழ்வாதாரம்? இன்னும் எத்தனை காலம் என பிரபல பில்ரோத் மருத்துவமனையின் ஐ.சி.யூ. மருத்துவரும் மயக்கவியல் நிபுணருமான டாக்டர் நெடுமாறனிடம் கேட்டோம்.
"இந்தியாவில் ஜனவரி- 30ந்தேதி முதல் கரோனா பாசிட்டிவ் வந்தபிறகும் கூட ஊரடங்கு உத்தரவு அறிவித்தது மார்ச்- 23ந் தேதிதான். அதாவது, கிட்டத்தட்ட 52 நாட்களை வீணாக்கிவிட்டது. முன்கூட்டியே விமான போக்குவரத்தை நிறுத்துவது, ஊரடங்கு அறிவித்தால் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரி செய்ய என்ன செய்வது என்ற குழு அமைப்பது, பி.பி.இ. கிட் உட்பட கரோனா பாதுகாப்பு உபகரணங்களை தயார் செய்வது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் ஆகிவிட்டது.
திடீர் திடீர் ஊரடங்கு- முழு ஊரடங்கு அறிவிப்பால், மக்கள் பதற்றமாக வெளியே வந்த தால் சமூகப் பரவல் அதிகமாக ஆரம்பிவித்து விட்டது. இதைத் தடுக்க ஆரம்பத்திலிருந்தே அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என்று சொல்லியிருக்கலாம். அப்போதே, மாஸ்க் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தால் ஊரடங்கு அறிவித்தபோது மாஸ்க் விலையும் ஏறியிருக்காது. தட்டுப்பாடும் ஆகியிருக்காது.
கரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுகிறவர்களைவிட அறிகுறிகளே இல்லாத 80 சதவீத ‘ஏ சிம்ட மேட்டிக் கேரியர்’ மூலம்தான் அதிகமாக கரோனா பரவிக்கொண்டிருக்கிறது. அறிகுறிகள் தெரிந்தாலாவது டாக்டரை பார்ப்பார்கள், பரிசோதிப்பார்கள், குவாரண்டைனில் இருப்பார்கள். ஆனால், அறிகுறிகளே இல்லாத கரோனா தொற்றாளர்கள் ஸ்லீப்பர் செல்கள் போல நமக்குள்ளேயே உலாவி கரோனாவை பரப்பிக்கொண்டிருப்பார்கள். அந்த பரவலை தள்ளிவைக்கத்தான் இந்த ஊரடங்கு உத்தரவு.
ஒருவேளை ஊரடங்கை தளர்த்தி முழுமையாக திறந்து விட்டால் 15 வது நாள் அமெரிக்கா, இங்கிலாந்துபோல கரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாக ஆரம்பித்துவிடும்.
உலக அளவில் கரோனா பாதிப்பை பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என மூன்று மண்டலமாக பிரிக்கிறார்கள். இரண்டுவாரத்தில் 15க்கும் மேற்பட்ட பாசிட்டிவ் கேஸ்கள் வந்தால் அவை ரெட். அதற்குக்கீழ் இருந்தால் ஆரஞ்சு. கேஸ் இல்லை என்றால் கிரீன்.
ரெட் கேஸ்கள் இரண்டுவாரத்தில் 15 கரோனா பாசிட்டிவ் கேஸ்களுக்குக்கீழ் வந்தால்தான் ஆரஞ்சு கேஸாக மாற்றப்படும். ஆரஞ்சுலிருந்து இரண்டு வாரங்களுக்கு கேஸ் இல்லை என்றால்தான் கிரீன் கேஸ்க்கு கொண்டுவரப்படும்.
ரெட் இருக்கும் சென்னையில் ஒருநாளைக்கே 120 கரோனா பாசிட்டிவ் வருகின்றன. ஜீரோ பாசிட்டிவ் என்றால்தான் ரெட் கேஸ்களிலிருந்து சென்னை கிரீன்க்கு வரும். அப்படி, வரும்போதுதான் ஊரங்கு உத்தரவிலிருந்து ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2, ஸ்டேஜ்-3, ஸ்டேஜ்-4 என கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்த்தப்படும். அதுவரை, மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் வீட்டிற்குள் இருந்து சமூகப் பரவலை உண்டாக்காமல் அனைவரும் அரசு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். அப்போது தான், இலக்கை எட்டமுடியும்'' என்கிறார் டாக்டர் நெடுமாறன்.