அ.தி.மு.க.வில் கட்சி ரீதியான நடவடிக்கைகளில் இ.பி.எஸ்சும் ஓ.பி.எஸ்சும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருக்கின்றனர். ஆட்சியைப் பொறுத்த வரை ’தனி ஒருவராக’ காட்டி வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தற்போது தனது முடிவில் சில மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறார். முதல் கட்டமாக, கட்சியில் ஓ.பி.எஸ்சுடன் இணைந்து எப்படிச் செயல்படுகிறாரோ அதேபோல ஆட்சி நிர்வாகத்திலும் ஓ.பி.எஸ்சுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்திருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். அதன் பிரதிபலிப்பு சமீபத்தில் கோட்டையில் எதிரொலித்தது.
கடந்த 30-ஆம் தேதி கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்சும் கலந்துகொண்டார். அப்போது, தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட, ‘காம்ப்ரஹென்சிவ் ஹைடுலைன்ஸ் கோவிட்-19’ என்கிற புத்தகத்தை எடப்பாடி வெளியிட, அந்தப் புத்தகத்தை ஓ.பி.எஸ். பெற்றுக்கொண்டார்.
இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டபோதே, இதனை எடப்பாடி வெளியிட, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொள்வதாகத்தான் முடிவு செய்யப்பட்டிருந்ததாம். ஆனால், புத்தகம் வெளியிடுவதற்கு இரு நாட்களுக்கு முன்பு, 'நான் வெளியிடும் அந்தப் புத்தகத்தை அண்ணன் ஓ.பி.எஸ். பெற்றுக்கொள்ளட்டும்’ என சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் சொல்லி திருத்தம் செய்திருக்கிறார் எடப்பாடி. மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை முடிந்ததும் ஓ.பி.எஸ்சுடன் தனியாக 30 நிமிடம் எடப்பாடி விவாதித்திருக்கிறார்.
இது குறித்து விசாரித்தபோது, ‘’சட்டமன்றத் தேர்தலில் நம்முடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் நம்முடன் இருப்பார்களா? எனத் தெரியாது. குறிப்பாக பா.ஜ.க. நம்முடன் இருக்குமா? அல்லது பா.ஜ.க.வை நாம் வைத்துக்கொள்வோமா? என்பதற்கு உறுதி கிடையாது. ஆனால், கிடைக்கிற தகவல்கள், நமக்கு எதிராக மத்திய அரசு செயல்படும் என்பதாகவே இருக்கிறது. நம்முடைய பொது எதிரி திமுக. அதனால், தேர்தல் காலத்தில் மத்திய அரசையும் தி.மு.க.வையும் நேரடியாக எதிர்கொள்ள வேண்டி வரலாம். அதனால் அந்த எதிர்ப்புகளை முறியடிக்க, அ.தி.மு.க.வில் கோஷ்டி தகராறுகள் இல்லாமல் கட்சியை வலிமைப்படுத்தியாக வேண்டும். இது தவிர, சசிகலா விடுதலையாகி வெளியே வரும் நிலையில், அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும்னு தெரியாது. அவரையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலும் உருவாகலாம். அதனால், அ.தி.மு.க.வில் குழப்பங்கள், கோஷ்டி தகராறுகள் இல்லாமல் இருக்க வேண்டும். நம்முடைய ஒற்றுமைதான் மற்றவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். அதற்கேற்ப நாம் இணைந்து அரசியல் செய்ய வேண்டும் என இருவரும் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இருவருக்குமிடையே தாமரை இலை தண்ணீர் போல இருந்த உறவு தற்போது இணைந்த கைகளாக மாறியிருக்கிறது. இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இது மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்றாலும், இணைந்த கைகள் எத்தனை நாளைக்கு பிரியாமல் இருக்கும் எனத் தெரியவில்லை?’’ என்று தெரிவிக்கின்றனர் நம்மிடம் பேசிய அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள்.