பெரியார் பல்கலைக்கழகம் வழங்கிய வினாத்தாளில் சாதி சார்ந்த கேள்வி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே வினாத்தாளில் மாபெரும் வரலாற்றுப் பிழையுடன் மற்றொரு வினாவும் கேட்கப்பட்டு உள்ளது.
சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலை செயல்பட்டு வருகிறது. இத்துடன் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 113 கலை, அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்றுள்ளன.
பல்கலையில் முதுகலை படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் இரண்டாவது செமஸ்டர் தேர்வுகள் நடந்து வருகின்றன. எம்.ஏ., வரலாற்றுத்துறை மாணவர்களுக்கு ஜூலை 14ம் தேதி, 'கி.பி. 1880 முதல் 1947 வரையில் தமிழ்நாட்டில் விடுதலை போராட்டம்' என்ற பாடத் தேர்வு நடந்தது.
இதில், பகுதி-அ, ஒரு மதிப்பெண் பிரிவில், வரிசை எண்.11ல், 'தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?' என்ற வினா கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு மகர், நாடார், ஈழவர், ஹரிஜன் என நான்கு விடை வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தன. தேர்வில், சாதி சார்ந்த வினா கேட்கப்பட்டது மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினரிடமும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.
சாதி சார்ந்த கேள்வி என்பது மட்டும் ஆட்சேபனைக்குரியது என்றில்லாமல், அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே நீக்கப்பட்ட 'ஹரிஜன்' என்ற சொல்லை விடைகளுள் ஒன்றாக வழங்கப்பட்டதும் விவாதத்தை ஏற்படுத்தியது.
மேலும், தாழ்த்தப்பட்ட என்றும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஷெட்யூல் கேஸ்ட் என்பதை ஆதிதிராவிடர் அல்லது பட்டியல் சமூகத்தினர் என்றுதான் குறிப்பிட வேண்டும் என்கிறது அரசாணை.
முன்பு, நாடார் சாதி, பட்டியல் சமூகத்தின் பிரிவில் வைக்கப்பட்டு இருந்தது. அதனால் அவர்களைக் குறி வைத்து இப்படியொரு வினா தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சிலர் சந்தேகத்தை கிளப்பி விட்டுள்ளனர்.
சர்ச்சைகள் இறக்கை கட்டி பறக்கத் தொடங்கியவுடன், பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் வருத்தம் தெரிவித்தோடு, வினாத்தாள் வடிவமைப்பில் பின்பற்றக்கூடிய நடைமுறைகள் குறித்து நீண்ட விளக்கமும் கொடுத்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, இதே வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பிரிவில், வரிசை எண்.10ல், 'பெரியார் என்ற பட்டத்தை ஈ.வெ.ரா.வுக்கு வழங்கியவர் யார்?' என்ற வினாவும் கேட்கப்பட்டு உள்ளது.
இந்த வினாவுக்கு, சரோஜினி நாயுடு, டாக்டர் தர்மாம்பாள், முத்துலட்சுமி ரெட்டி, அன்னிபெசன்ட் ஆகிய நான்கு விடை வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. உண்மையைச் சொல்லப்போனால் இந்த நான்கு விடை வாய்ப்புகளுமே முற்றிலும் தவறானது ஆகும்.
ஈ.வெ.ரா.வுக்கு 'பெரியார்' என்ற பட்டத்தை வழங்கியவர், அன்னை மீனாம்பாள் அம்மையார் ஆவார். பெண் விடுதலை, சாதி ஒழிப்பு போராட்டங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர், அன்னை மீனாம்பாள். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தில் பெண் தலைவர்களுள் முக்கியமானவராக இருந்தார். 1938ம் ஆண்டு நவ. 13ம் தேதி, சென்னையில் நடந்த தமிழ்ப்பெண்கள் மாநாட்டில்தான், ஈ.வெ.ரா.வுக்கு 'பெரியார்' என்ற பட்டத்தை அன்னை மீனாம்பாள் வழங்கினார்.
இதே மாநாட்டில் டாக்டர் தர்மாம்பாள் கலந்து கொண்டார். அதனால் அவருடைய பெயரை விடை வாய்ப்புகளுள் ஒன்றாக, வினாத்தாளை வடிவமைத்த ஆசிரியர் குழு சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
முன்னத்தி ஏர் போல, சாதி சார்ந்த கேள்விக்கு மட்டும் Ôசெலக்டிவ்Õ ஆக யாரோ ஒருவர் பொங்கியெழ, அதையே சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும் கண்டனம் என்ற பெயரில் வழிமொழிந்துள்ளனர்.
அதே வினாத்தாளில், சர்ச்சைக்குரிய வினாவுக்கு முந்தைய வினா, பெரியார் பற்றி கொஞ்சமும் அடிப்படை ஞானமின்றி, பிழையாக கேட்கப்பட்டு இருந்ததை ஒருவர் கூட கண்டுகொள்ளாமல் கடந்து போனதுதான் ஆகப்பெரிய வியப்பு எனலாம்.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், வரிசை எண். 11ல் கேட்கப்பட்ட சாதி பற்றிய கேள்விக்கு மட்டும் வருத்தம் தெரிவித்து நீட்டி முழங்கிய பெரியார் பல்கலை, பெரியார் பற்றிய தவறான கேள்வியை கவனத்தில் கொள்ளாமல் கடந்து போனதை என்னவென்று சொல்வது எனத் தெரியவில்லை.
வினாத்தாள் வடிவமைக்கப்பட்ட பிறகு, அச்சகத்திற்கு கொடுக்கப்பட்டு, அங்கிருந்து தேர்வுக்கூடத்திற்குச் செல்லும் வரை பல்கலை துணைவேந்தர் முதல் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வரை எவர் ஒருவருக்கும் அதை முன்கூட்டியே பிரித்துப் பார்க்கும் அதிகாரம் இல்லை எனக்கூறும் பல்கலை நிர்வாகம், சர்ச்சை எழுந்த பிறகும் கூட வினாத்தாளை முழுமையாக ஆய்வு செய்யாமல் அரைகுறையான விளக்கம் கொடுக்கலாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வரலாற்றுத்துறை தேர்வுக்கான வினாத்தாளையே வரலாற்றுப் பிழையுடன் எழுதியது எவரோ அவரையும், கூர்ந்தாய்வின்போது கூட கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்ட குழுவினரையும் பணியில் இருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்ற குரலும் பலமாக ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது.