தமிழகம் முழுவதும் பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடை என்ற அமைப்பு சார்பில் மதச்சார்பின்மைக்கான அணிவகுப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவது குறித்து மார்ச் 23 ஆம் தேதிக்குள் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர போராட்ட தியாகிகளான பகத் சிங், ராஜ குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் நினைவு நாட்களை முன்னிட்டு சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை அமைதி, ஒற்றுமை மற்றும் மதச்சார்பின்மையை வலியுறுத்தி அணிவகுப்பு நடத்த "பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடை" அமைப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
இதையடுத்து, அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி இந்த அமைப்பை சேர்ந்த சிரிலா என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகத்தில் ரத யாத்திரை நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கும் காவல்துறை, தங்களுடைய அமைப்புக்கு அனுமதி வழங்க மறுப்பது தனி மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத் வாதிட்டார்.
இதையடுத்து, அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என கருத்து தெரிவித்த நீதிபதி, அணிவகுப்புக்கு நடத்துவதற்கான நிபந்தனைகளை மார்ச் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டார்.