நீட் தேர்வு தமிழகத்தில் பல உயிர்களை காவு வாங்கியது, பலரை அலர வைத்தது, அலைய வைத்தது. இருந்தும் அதைத் தடுக்க ஒன்றும் செய்யமுடியவில்லை. போன வருடம் நீட் வேண்டாம் என்றவர்களை இந்த முறை தயவுசெய்து சொந்த ஊர்களிலேயே நடத்துங்கள் என கெஞ்சவைத்தது. அந்த வகையில் நீட் (மத்திய அரசு) வென்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். தற்போது அடுத்த பிரச்சனையாக இந்திய குடிமைப் பணிகள் தேர்வு மற்றும் கேடர் ஒதுக்கீட்டில் கைவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அரசு பணிகள்தான் இந்திய குடிமைப் பணிகள் (civil services). இந்தப் பணிகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தேர்வுமுறை என்னவென்றால் முதலில் முதல்நிலைத் தேர்வு (preliminary exam) எழுதவேண்டும். அதில் தேர்ச்சி பெறுவோர் பிரதான தேர்வுக்கு (main exam) அழைக்கப்படுவர். பிரதான தேர்வை முடித்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். இவைகளிலெல்லாம் தேர்ச்சி பெறுபவர்கள் அவர்களின் ரேங்க் அடிப்படையில் கேடர் அல்லோகேஷன் (பணிபுரியும் மாநிலம்), சர்வீஸ் அல்லோகேஷன் (பணி) வழங்கப்படுவர். அதன்பின் பயிற்சி நடக்கும். பயிற்சி காலம் மொத்தம் இரண்டு ஆண்டுகள். இதில் முதல் வருடம் மிசோரியிலுள்ள பயிற்சி மையத்திற்கு சென்று பயிற்சி பெறுவர், இதற்கு அகாடமிக் ட்ரெய்னிங் என்று பெயர். இதில் முதல் நூறு நாட்கள் ஃபவுண்டேஷன் கோர்ஸ் என்று நடத்தப்படும். தேர்ச்சி பெற்ற அனைவரும் அதில் பங்கு பெறுவர்.
இந்த சிவில் சர்வீஸ் பணிகளில் கேடர் அல்லோகேஷன் என்பது மிக முக்கியமாகக் கருதப்படுவது. நல்ல ரேங்க் எடுத்தவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். அதைத் தாண்டி பொதுவாக முன்னணி ரேங்கில் இருப்பவர்கள் பஞ்சாப், தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களை விரும்பித் தேர்ந்தெடுப்பார்கள். இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்த கேடர் அல்லோகஷன் முறையில் மாற்றத்தைக் கொண்டுவர ஆலோசித்து வருகிறது மத்திய அரசு.
தற்போது அரசு கருத்தில் கொண்டிருக்கும் முறைப்படி, தேர்வில் வெற்றி பெற்று ரேங்கிங் எல்லாம் முடிந்த பிறகு ஃபவுண்டேஷன் கோர்ஸில் எடுக்கும் மதிப்பெண்ணுக்கு பின்புதான் பணியிடம் நியமிக்கப்படும். இதை பலரும் எதிர்க்கின்றனர். தேர்வுகளில் விடைத்தாள் திருத்தும் பணி ரகசியமாக நடப்பது, மாணவர்கள் யார் என்ன எதுவும் தெரியாமல் நடத்தப்படும். அதனால் யாருக்கும் சார்பின்றி தேர்ச்சியாளர்களின் விபரங்கள் வெளிவரும். ஆனால் இந்த புதிய முறை அமலுக்கு வந்தால் பயிற்சி மையத்தில் உள்ள ஆசிரியர்களின் கையில் முடிவுகள் செல்லும். அவர்கள் அவர்களுக்கு தேவையானவர்கள், பணபலம், செல்வாக்கு பலம் உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட வாய்ப்புள்ளது. அதனால்தான் இதை துறை சார்ந்த பலரும் எதிர்க்கின்றனர்.