Skip to main content

மக்கள் முதல்வர் தெரியும், திடீர் முதல்வர் தெரியும், ரௌடி முதல்வர் தெரியுமா? - நோட்டா விமர்சனம் 

Published on 06/10/2018 | Edited on 06/10/2018

அமைதிப்படை, மக்களாட்சி, முதல்வன், கோ... ஒரு புறம், ஜி, ஆயுத எழுத்து, சகுனி மறுபுறம் என தமிழ் சினிமாவில் அரசியல் படங்கள் மிகப்பெரிய வெற்றிகளையும் தோல்விகளையும் பதிவு செய்திருக்கின்றன. இதில் எந்த வரிசையில் நோட்டா இணைகிறது என்று பார்ப்போம். தெலுங்கு தேசத்தில் 'பெல்லி சூப்புலு' படம் மூலம் மிகவும் பிரபலமடைந்து பின் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் ஆகிய படங்கள் மூலம் ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்ந்த விஜய் தேவரகொண்டா நடிப்பில் நேரடி தமிழ் படமாக வந்துள்ளது நோட்டா.
 

nota vijay



முதல்வராக இருக்கும் நாசர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கி கைது செய்யப்பட இருப்பதால், லண்டனில் ஜாலியாக ஊர் சுற்றி கும்மாளம் அடித்துக்கொண்டு, கேம் டெவலப்பராக வேலை பார்க்கும் தன் மகன் விஜய் தேவரகொண்டாவை ஒரே இரவில் சி.எம் ஆக்குகிறார். ஆரம்பத்தில் தனக்கு பிடிக்காமல் வேண்ட வெறுப்புமாக பதவி ஏற்கும் விஜய் தேவரகொண்டா பின்னர் ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியின் உன்னதத்தை உணர்ந்து, பத்திரிகையாளர் சத்யராஜின் ஆலோசனைப்படி பொறுப்பாக ஆட்சி நடத்தும் வேளையில் ஏற்படும் எதிர்ப்புகளையும், சவால்களையும் சமாளித்தாரா இல்லையா என்பதே 'நோட்டா'.

நிகழ்கால அரசியல் சூழலை கதையின் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையில் படத்தைத் தாங்கி நிற்கும் இரு தளபதிகளாக சத்யராஜும், நாசரும் நடித்துள்ளனர். அரசியல் படம் என்பதால் சத்யராஜும், நாசரும் கரும்பு தின்னக்  கூலியா என்பதுபோல் காட்சிக்கு காட்சி சுலபமாகப் புகுந்து விளையாடி விடுகின்றனர். இப்படி அரசியல் என்றால் என்ன என்பதை இவர்கள் வசனம் மட்டுமல்லாமல், உடல் மொழியிலும் காட்டி அசத்திக்கொண்டிருக்கும் வேலையில் இவர்களுக்கு சரியான டஃப் கொடுத்து நடித்துள்ளார் எம்.எஸ் பாஸ்கர். இவர்கள் இருவரும் மாறி மாறி வசனம் பேசி கவரும் வேலையில் சின்னச்  சின்ன அசைவுகள் மூலமே அப்லாஸ்களை தட்டிச் சென்றுவிடுகிறார் நடிகர் எம்.எஸ் பாஸ்கர். குறிப்பாக சொகுசு விடுதியில் நாசர் எம்.எல்.ஏக்களிடம் உணர்ச்சிபொங்க பேசும் இடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் காட்டும் உடல் மொழி வேற லெவல்.

 

nota sathyaraj



தெலுங்கு தேசத்திலிருந்து வந்தாலும் தமிழை ஒழுங்காக உச்சரித்ததற்கே விஜய் தேவரகொண்டாவிற்கு மிகப் பெரிய பாராட்டுக்கள். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட பயிற்சியும், உழைப்பும் தெரிகிறது. பத்திரிகையாளர்களிடம் உணர்ச்சிகரமான மிரட்டல் தொனியில் பேசுவது, மக்களுக்கு ஒரு பிரச்னை என்றவுடன் துரித நடவடிக்கையில் இறங்குவது, உருக்கமான காட்சியில் காட்டும் முகபாவம் என நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி தமிழுக்கு சரியான விதத்தில் அறிமுகமாகியுள்ளார். வெல்கம் டு தமிழ் சினிமா ப்ரோ.

படத்தின் நாயகி மெஹ்ரின் பிர்சாடாவிற்கு அதிக வேலை இல்லை. சொல்லப்போனால் இவரைக்காட்டிலும் பெண் அரசியல்வாதியாக வரும் சஞ்சனா நடராஜன் அந்த வேலையை சிறப்பாக செய்து மிரட்டியுள்ளார். தன் அறிமுகப்படத்திலேயே மனதில் பதியும்படியான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
 

nota nasser



எம்.எல்.ஏ க்கள் சொகுசு விடுதியில் குடித்து கும்மாளம் அடிப்பது, ஐ.சி.யு வார்டு அட்ராசிட்டி, ஸ்டிக்கர் பிரச்சனை, முதல்வரை பார்க்கும் எம்.எல்.ஏ க்கள் தலைகுனிந்தபடியே இருப்பது, இரவு நேர அறிக்கை, இடைத்தேர்தல் என நிகழ்கால அரசியல் நையாண்டியை கலந்துகட்டி கொடுத்துள்ளார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர். செம்பரம்பாக்கம் ஏரி திறந்து ஏற்பட்ட வெள்ளம் போன்ற சம்பவங்களை இக்கால நிகழ்வுகளோடு காட்சிப்படுத்தி அதிரடியாகக் கதை சொல்ல முயற்சி செய்துள்ளார். என்னதான் படத்தில் உள்ள பலமான காட்சிகள் ஆங்காங்கே ரசிக்கும் படி இருந்தாலும் முதல்பாதி முடிவில் ஏற்பட்ட எதிர்பார்ப்பை பிற்பாதியில் நிறைவாக பூர்த்தி செய்யாதது சற்று ஏமாற்றமே.

ரௌடி சி.எம் எனும் பில்ட்-அப்போடு வரும் இடைவேளைக்குப் பின் ரௌடி சி.எம் பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஷான் கருப்பசாமி எழுதிய வெட்டாட்டம் நாவலின் அடிப்படையில்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். திரைக்கதையை அவரும் இணைந்து எழுதியிருக்கிறார். ஆனால், அந்த விறுவிறுப்பு படத்தில் குறைவே. படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஏற்படும் சவால்களும் அவர் எதிர்கொள்ளும் வில்லன்களும் பலமாக இல்லை. நிகழ்கால அரசியல் சம்பவங்களை இணைத்தது தைரியம்தான், பாராட்டலாம். ஆனால், அந்தக் காட்சிகளை காமெடியாக அமைத்தாலே போதுமென்று நினைத்தது தவறாகிவிட்டது.

சாம் சி எஸ்ஸின் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் விக்ரம் வேதாவிற்கு பிறகு நோட்டா உட்பட இவர் இசையில் வந்த படங்களின் பாடல்கள் மனதில் பதியும்படி இல்லாததை அவர் சற்று சின்சியராக பரிசீலிப்பது நல்லது.  சந்தானகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்தை தரமாக உருவாக்க உதவியுள்ளது. 'அருவி' ரேமண்ட் டெரிக் க்ராஸ்டாவின் படத்தொகுப்பு ஷார்ப்பான கட்டிங்கால் படத்தை பரபரப்பாக்க முயற்சி செய்துள்ளது.     
 

நோட்டா - மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்