நடிகர் கார்த்தியின் திரைப்பயணம் கவனிக்கத்தக்கது. முதல் படமான 'பருத்தி வீரன்' மிகப்பெரிய வெற்றி. அப்படி ஒரு படத்தில் அறிமுகமாவது அனைவருக்கும் கிடைக்காத வாய்ப்பு. அந்த வெற்றியை தொடர்வதும் அனைவருக்கும் வாய்க்காத கலை. அவர் எடுத்த அனைத்து படங்களையும் எடுத்துக்கொண்டால் மோசமான தேர்வு என்பது வெகு சில படங்களாகத்தான் இருக்கும். இப்படி, வெற்றிகரமாகத் திகழும் கார்த்திக்கு தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என இரண்டு தரமான வெற்றிகளுக்குப் பிறகு வந்திருக்கும் 'தேவ்' அந்த வெற்றியைத் தொடர்கிறதா?
உயரமான மலையிலிருந்து ஆற்றுக்குள் குதித்து பிறந்தநாளை கொண்டாடும் சாகச விரும்பி 'தேவ்'வாக கார்த்தி. சிறு வயதிலிருந்தே தனித்துவமிக்க கேரக்டர் கொண்ட அவர், எப்போதுமே தன் இரு நண்பர்களான விக்னேஷ்காந்த், அம்ருதாவுடனே இருக்கிறார். ஒரே நாளில் பிறந்த இவர்கள் பள்ளியில் தொடங்கி கல்லூரி முடிந்தும் ஒன்றாகவே இருக்கின்றனர். எந்த விஷயத்திலும் சாதாரணமாகவே இருக்கக்கூடாது என்ற எண்ணம் கொண்ட 'தேவ்'வுடன் இருந்தால் தான் நினைத்தபடி வாழ முடியாது என்று எண்ணும் விக்னேஷ்காந்த் அவரை காதல் செய்யத் தூண்டுகிறார். காதலையும் ஒரு சாகசமாகக் கருதி களத்தில் இறங்குகிறார் கார்த்தி. சுயமாக உழைத்து முன்னேறிய இளம் தொழிலதிபரான ரகுல் ப்ரீத் சிங் மேல் காதல் கொள்ளும் கார்த்தி, ஆண்கள் என்றாலே வெறுக்கும் அவரை சம்மதிக்க வைத்தாரா, அவர்கள் காதல் தொடர்ந்ததா என்பதே இயக்குனர் ரஜத் ரவிஷங்கரின் 'தேவ்'.
சென்னை, மும்பை, உக்ரைன், அமெரிக்கா... என பயணம் செய்யும் படம், செம்ம அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. கார்த்தியின் தோற்றம், உடைகள் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது. இந்தப் படத்தில் சென்னை அண்ணா சாலை கூட, அழகாகத் தெரிகிறது. காட்சிகள் நடக்கும் இடங்களும் ரிச்சாக இருக்கின்றன. இயக்குனர் ரஜத்தின் இந்த உருவாக்கம்தான் படத்தின் பெரும் பலம். கார்த்தி - ரகுல் செய்யும் அந்த பைக் பயணம் அழகு... இப்படி காட்சி அளவில் புத்துணர்ச்சி தருவதாக இருக்கும் படம் கதையளவில் எப்படியிருக்கிறது? ஒரே நாளில் பிறந்த மூன்று நண்பர்கள், ஆண் பெண் பேதமில்லாமல் பழகுவது, காதலுக்குள் ஏற்படும் சண்டைகள் காமெடியாக முடிவது, 'வாங்க' என்று மரியாதையுடன் மகனை அழைக்கும், அவனுக்கான சுதந்திரத்தைக் கொடுக்கும் தந்தை... என ஒரு ஃபீல் குட் படத்துக்கான பல விஷயங்களை சரியாக உருவாக்கி சேர்த்திருக்கிறார்கள்.
'இந்த உலகம் எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்குதோ அப்படி இருக்கக்கூடாது, உன் மனசுக்குப் பிடிச்சதை செய்துதான் வாழணும்' என்று தானும் தீவிரமாக நம்பி, நண்பர்களுக்கும் நமக்கும் எப்போதும் அட்வைஸ் பண்ணுகிறார் தேவ். உண்மைதான், பிடித்ததை செய்து வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை. 'கொஞ்சமா சம்பாரிக்கணும், நிறைய பயணம் செய்யணும், இதுதான் என் லட்சியம்' என்கிறார். விலையுயர்ந்த பைக்குகள் 20 நிற்கின்றன அவரது கேரேஜுக்குள், ஒரு சீனில் ஆடி காரில் வரும் அவர், இன்னொரு சீனில் ரோல்ஸ்ராய்ஸில் வருகிறார். இப்படியொருவர் அப்படி சொல்லிக்கொண்டே இருப்பதும் வாழ்வதும் எளிது. ஆனால், மற்றவர்களுக்கு? இந்த இடைவெளி, 'தேவ்' பாத்திரத்தில் இருந்து நம்மை பிரித்து வைக்கிறது. அவருக்கு ஏற்படும் உணர்வுகள் நமக்கு ஏற்படுவதை தடுக்கிறது. ஒரு வெற்றிகரமான இளம் தொழிலதிபராக ரகுல் ப்ரீத் சிங், அவரது தந்தையின் துரோகம் காரணமாக ஆண்களை வெறுக்கிறார், திருமண உறவில் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார். ஆனால், காதலில் விழுந்த பின்னர் அவருக்குள் எழுவது அவநம்பிக்கையா அல்லது ஈகோவா என்ற குழப்பம் நமக்குள் நேர்கிறது. படம் தொடங்கி, இடைவேளை கடந்தும் முக்கிய கட்டம் எதுவும் வராதது திரைக்கதையில் தொய்வு. முக்கிய பாத்திரங்கள் நம்மிடம் தாக்கம் ஏற்படுத்தாததால் மொத்த படமும் சற்று விலகியே நிற்கிறது. இடையில் வரும் இரண்டு சண்டைக்காட்சிகளும் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டிருப்பது தெரிகிறது.
கார்த்தி, தோற்றத்திலும் உடல்மொழியிலும் ஒரு பணக்கார சாகச விரும்பியை அழகாகப் பிரதிபலிக்கிறார். மிகச் சிறப்பாக நடிக்க அவருக்கென பெரிய வாய்ப்பெல்லாம் இல்லை படத்தில். ரகுல், ஃபிட்டாக, டஃப்பாக பாத்திரத்துக்கு ஏற்ப இருக்கிறார். இருவருக்கும் தீரன் படத்தில் இருந்த அழகான கெமிஸ்ட்ரி இதில் மிஸ்ஸிங். விக்னேஷ்காந்த்துக்கு நல்ல வாய்ப்பு. வெற்றிகரமான ஸ்டான்ட்-அப் காமெடியனாக வருகிறார். அவரது பாத்திரம் அதிகம் பேசுவதாகவும் வெகு சில முறை மட்டுமே சிரிக்கவைப்பதாகவும் இருக்கிறது. அம்ருதா பாத்திரத்திற்கேற்ப அழகாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ரேணுகா என பல நல்ல நடிகர்கள் படத்தின் ரிச்னஸ்க்காக மட்டும் பயன்பட்டிருக்கிறார்கள்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்தைத் தாங்கி நிற்கிறது என்றே சொல்லலாம். காட்சி ஒவ்வொன்றும் ஒரு அழகிய புகைப்படம் போல இருக்கிறது. இத்தகைய ஒரு காதல் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் கொடுத்திருக்கும் இசை ஏமாற்றம்தான். ரூபனின் படத்தொகுப்பு இயக்குனர் கேட்பதைக் கொடுக்கிறது போல. அதைத் தாண்டி படத்தின் நலனுக்காக சற்று வேகப்படுத்தியிருக்கலாம்.
தேவ்... கார்த்தியின் கலர்ஃபுல் காதலர் தின கிஃப்ட், ஆனால் இது பெஸ்ட் அல்ல.