Skip to main content

‘புராணக் கதைக்குள் பிரமாண்ட டெக்னாலஜி கை கொடுத்ததா?’ - கல்கி 2898 ஏடி விமர்சனம்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Kalki 2898 Ad Review

பாகுபலி கொடுத்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அதேபோன்ற ஒரு வெற்றியைக் கொடுக்க தட்டுத் தடுமாறி போராடி வருகிறார் ரெபெல் ஸ்டார் பிரபாஸ். பாகுபலிக்கு பிறகு அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியான பிரம்மாண்ட படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் துவண்டு கிடந்த பிரபாஸ், விட்டதை பிடிக்க மீண்டும் மற்றொரு பிரம்மாண்ட படமான கல்கி மூலம் கோதாவில் குதித்திருக்கிறார். இந்தத் தடவை பிரம்மாண்ட நடிகர்களான அமிதாப்பச்சன், கமல்ஹாசன் உடன் கைகோர்த்து களத்தில் இறங்கி இருக்கும் பிரபாஸுக்கு பாகுபலி தந்த வெற்றியை இந்த கல்கி கொடுத்ததா, இல்லையா?

மகாபாரத குருசேத்திர போருக்கு பிறகு கலிகாலம் தொடங்கி உலகம் முற்றிலும் அழிந்துவிட்டது. மிச்சம் மீதி இருக்கும் உயிர்களை வில்லன் சுப்ரீம் என அழைக்கப்படும் கமல்ஹாசன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அவர்களை வாட்டி வதைத்து வருகிறார். உலகத்தில் ஒரு உயிர் கூட மிஞ்சாத இந்த நேரத்தில் யூனிட் என்ற ஒரு குறிப்பிட்ட இடத்தை வைத்துக்கொண்டு அதில் மட்டும் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் அமைந்திருக்கிறது. அதில் சுப்பீரியரான ஆளும் வர்க்கத்தினர் வசிக்கின்றனர். அதன் தலைவராக சுப்ரீம் கமல்ஹாசன் இருக்கிறார். மிகவும் வயதான கதாபாத்திரத்தில் கிட்டத்தட்ட நூறு வயதைத் தாண்டிய கிழவனாக யூனிட்டில் வசிக்கும் கமலுக்கு அங்கு இருக்கும் பெண்களைக் கர்ப்பம் ஆக்கி அந்தக் கர்ப்பத்தின் மூலம் கிடைக்கும் சீரமை பயன்படுத்தி உயிர் வாழ்கிறார். 

கிட்டத்தட்ட பல பெண்களை இதே போல் கர்ப்பம் ஆக்கி சீரம் எடுத்துவிட்டு, அவர்களைக் கொன்று விட்டு கொடூரனாக வாழும் கமலுக்கு இன்னமும் இளமையாக வாழ யூனிட்டில் அடிமையாக இருக்கும் தீபிகா படுகோனின் கருவில் வளரும் குழந்தையின் சீரம் தேவைப்படுகிறது. ஆனால் தீபிகா படுகோன், இவர்களிடமிருந்து யூனிட்டில் இருந்து தப்பி விடுகிறார். அவரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு பெரும் சன்மானம் நியமிக்கப்படுகிறது. காசுக்காக தனிநபர் கூலிப்படையாக செயல்படும் சுயநலமிக்க நாயகன் பிரபாஸ், எப்படியாவது தீபிகா படுகோனை பிடித்துக் கொடுத்துவிட்டு யூனிட்டுக்குள் சென்று உல்லாச வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரை துரத்துகிறார். கர்ப்பிணி தீபிகா படுகோனை காப்பாற்ற சாப விமோசனமின்றி பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கும் அஸ்வதா அமிதாப்பச்சன் போராடுகிறார். அவருக்கு உறுதுணையாக யூனிட் போன்ற இன்னொரு பசுமையான இடமான ஷம்பாலாவில் இருந்து பசுபதி, ஷோபனா அண்ட் கோ காப்பாற்ற போராடுகின்றனர். இவர்களிடமிருந்து கர்ப்பிணி தீபிகா படுகோனை கடத்தி யூனிட்டில் ஒப்படைக்க போராடும் செல்பிஷ் பிரபாஸ் நினைத்ததை முடித்தாரா, இல்லையா? தீபிகாவை காப்பாற்ற போராடும் அமிதாப்பச்சன் நிலை என்னவானது?  என்பதே கல்கி 2898 ஏடி படத்தின் முதல் பாகத்தின் கதை.

Kalki 2898 Ad Review

பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு மிகப்பெரும் பிரம்மாண்ட யூனிவர்ஸ் படத்தை கொடுத்திருக்கிறார் வளர்ந்து வரும் பிரம்மாண்ட இயக்குநரான நடிகையர் திலகம் பட புகழ் நாக் அஸ்வின். மகாபாரதத்தை மையமாக வைத்துக் கொண்டு உலகம் அழிந்த பின்னர் நடக்கும்படியான ஒரு பிரம்மாண்ட கற்பனைக் கதையை கற்பனைக்கு ஏற்றவாறு திரையிலும், அதே பிரம்மாண்டத்தை மிகத் துல்லியமாகவும் ஹாலிவுட் தரத்தில் கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின். பொதுவாக இந்திய சினிமாவில் இது ஒரு ஹாலிவுட் தரத்தில் இருக்கும் திரைப்படம் என்று அடிக்கடி சொல்லும் வழக்கம் இருக்கிறது. ஆனால் அந்தப் படங்கள் எதுவுமே ஹாலிவுட் தரத்தில் இருக்காது. அதையெல்லாம் தற்போது தவிடு பொடியாக்கும்படி மூக்கு மேல் விரல் வைக்கும் அளவுக்கு உண்மையில் ஒரு ஹாலிவுட் தரத்தில் இப்படத்தை பிரம்மாண்டமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஒரு யூனிவர்ஸ் படத்திற்கான அத்தனை விஷயங்களும் அவ்வளவு அம்சமாக அமைந்து, அதற்கு ஏற்றார் போல் திரைக்கதையும் அமைந்து, இந்தியாவில் தயாரான ஒரு முழு நீள ஹாலிவுட் படத்தை பார்த்த உணர்வை இப்படம் கொடுத்திருக்கிறது. 

திரைக்கதையாக பார்க்கும் பட்சத்தில் இது ஒரு புது அனுபவமாக இருப்பது சற்றே குழப்பங்கள் நிறைந்து, ஆங்காங்கே சற்று அயர்ச்சி ஏற்படும்படி இருந்தாலும் அவை பிரம்மாண்ட காட்சிகளாலும், பிரம்மாண்ட ஸ்டண்ட் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளாலும் மறக்கடிக்கப்பட்டு குடும்பங்கள் கொண்டாடி ரசிக்கும் படியான படமாக இது அமைந்துள்ளது. இந்தப் படம் இனிவரும் காலங்களில் பல்வேறு பாகங்களாக விரிய இருப்பதால் அதற்கான பேஸ்மெண்டாக இந்தக் கல்கி முதல் பாகம் வெளியாகி படத்தின் ஆரம்பக்கட்ட கதைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து படமாக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பாகங்களில் முழு கதை வெளிப்படும் பட்சத்தில் இப்படம் முழுமை அடையும். இருந்தும் முதல் பாகத்துக்கான அறிமுக கதையை வைத்துக்கொண்டு அதற்கேற்றார் போல் திரைக்கதை அமைத்து கதையின் மாந்தர்களுக்கான இன்ட்ரொடக்ஷனையும், கதைக்கான இன்ட்ரொடக்சனையும் அமைத்து அதையும் ரசிக்கும்படி அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. 

Kalki 2898 Ad Review

அதேபோல் படத்தில் காட்டப்படும் பிரம்மாண்டத்திற்கு ஏற்றவாறு சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட மிகவும் மெனக்கெட்டு திரைக்கதை அமைத்து அதை நன்றாக காட்சிப்படுத்தி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. குறிப்பாக படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைக்கரு பழங்கால புராணக் கதைகளை உள்ளடக்கி, அதே சமயம் லேட்டஸ்ட் டெக்னாலஜிகளை புகுத்தி இரண்டையும் சமநிலைப்படுத்தி அதை ஒரு கதைக்குள் சிறப்பாக உட்புகுத்தி எளிய மக்களும் ரசிக்கும்படி எடுத்தியிருக்கிறார் இயக்குநர். ஒரு பேண்டஸி சினிமா யூனிவர்ஸ் கதையை உருவாக்கி இனிவரும் காலங்களில் ஹாலிவுட் படங்களை கலக்கும் டிசி மற்றும் மார்வெல் காமிக்ஸ் போன்று கல்கி என்ற ஒரு யுனிவர்சை இந்தியாவிலிருந்து உருவாக்கி அதன் மூலம் ரசிகர்களை ஈர்க்கும் முயற்சியில் இந்தக் கல்கி படம் வெளியாகியிருக்கிறது. இருந்தும் திரைக்கதையில் இன்னமும் கூட சற்று கவனமாக இருந்து வேகப்படுத்தி இருக்கலாம். அதேபோல் படத்தின் நீளத்தையும் சற்று குறைத்திருக்கலாம். மற்றபடி தமிழைப் பொறுத்தவரை இந்தப் படம் நல்ல விதத்தில் வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்று இருக்கிறது. மேலும், மற்ற மாநிலங்களிலும், மற்ற மொழிகளிலும் இப்படம் பெரும் வரவேற்பை பொறுத்து இதன் அடுத்தடுத்த பாகங்கள் அடுத்தடுத்த பிரம்மாண்டத்தைச் சென்றடையும்.

இப்படத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் இப்படத்தை எடுத்து இருப்பார்கள் போல. படத்தில் தெலுங்கு இண்டஸ்ட்ரியை சேர்ந்த பிரம்மாண்ட நடிகர்களின் பட்டாளமே நடித்திருக்கிறது. அதேபோல் மற்ற மாநிலத்தைச் சேர்ந்த நடிகர்களும் உடன் இணைந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்திருக்கின்றனர். மலையாள சினிமாவைச் சேர்ந்த துல்கர் சல்மான், ஷோபனா, தமிழுக்கு கமல்ஹாசன், பசுபதி பாலிவுட் சினிமாவைச் சேர்ந்த அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், மிருனால் தாக்கூர், திஷா பட்டாணி, தெலுங்கு இண்டஸ்ட்ரியைச் சேர்ந்த பிரம்மானந்தம், பிரபாஸ், மற்றும் கௌரவ வேடத்தில் கலக்கிய பிரின்ஸ் பட  இயக்குநர் அணுதீப், பாகுபலி ராஜமெளலி, சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர். நாயகன் பிரபாஸ் வழக்கம்போல் மாஸ் ஹீரோயிஷம் காட்டி காமெடி செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரது ராஜானபாகுவான உடற்கட்டும் அதற்கு ஏற்றால் போல் அவர் துவம்சம் செய்யும் சண்டைக் காட்சிகளும் அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான மாஸ் எலிமெண்ட்ஸை கூட்டி இருக்கிறது. பாகுபலிக்கு பிறகு அதே போன்ற ஒரு வரவேற்பு இப்படத்தின் மூலம் மீண்டும் பிரபாஸ் பெற்று கம்பேக் கொடுத்து இருக்கிறார். இவருக்கு உறுதுணையாக படம் முழுவதும் கீர்த்தி சுரேஷ், சர்ப்ரைஸ் எலிமெண்டாக வேறு ஒரு வடிவில் ஒரு சிறிய ரோபோவாக வருகிறார். பிரபாஸுக்கும் கீர்த்திக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. அதேபோல் தீபிகாவை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் வரும் அமிதாப்பச்சன் தனக்கு கொடுத்த வேலையை ஆக்சன் கலந்து அதகலப்படுத்தி இருக்கிறார். நாயகியாக வரும் தீபிகா படுகோன் தன் அனுபவ நடிப்பின் மூலம் பார்ப்பவர்களைக் கலங்கடிக்க செய்திருக்கிறார். சின்ன சின்ன முக பாவனைகளில் கூட அழகாக தெரிகிறார். மிரட்டல் வில்லனாக வரும் கமல், சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். இவருக்கு இந்தப் பாகத்தில் பெரிதாக வேலை இல்லை. அடுத்த பாகத்தில் வேண்டுமானால் எதிர்பார்க்கலாம். மற்றபடி உடன் நடித்த பிரம்மானந்தம், பசுபதி ஷோபனா உட்பட பலர் அவரவர் வேலையைச் சிறப்பாக செய்து விட்டு படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கின்றனர். 

Kalki 2898 Ad Review

ஜார்ஜ் டுடோல்விக் ஒளிப்பதிவில் படம் மிக மிக பிரம்மாண்டமாக ஹாலிவுட் தரத்தில் படமாக்கப்பட்டு இருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களைக் கூட நேர்த்தியாக படம் பிடித்து படத்தின் பிரம்மாண்டத்தைத் தன் ஒளிப்பதிவால் கூட்டி இருக்கிறார். அதேபோல், வி எஃப் எக்ஸ் காட்சிகளும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. அதுவே படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. இப்படத்தின் இன்னொரு ஹீரோவாகவும் வி எஃப் எக்ஸ் இருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையில் பின்னணி இசை மிக மிக பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. ஒரு ஹாலிவுட் தரமான படத்திற்கு எந்த வகையில் தொல்லை கொடுக்காத இசையை கொடுக்க வேண்டுமோ அந்த வகையில் சிறப்பான பின்னணி இசை கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார் சந்தோஷ் நாராயணன். அடுத்தடுத்த பாகங்களில் இன்னமும் கூட சிறப்பான இசை கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். 

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பேன் இந்தியா பிரம்மாண்ட படத்தை தெலுங்கு சினிமா கொடுத்து மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. 

 

கல்கி 2898 Ad - அடுத்த பிரம்மாண்டத்தின் ஆரம்பம்!

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்த ப்ளாக் பஸ்டர்கள்!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Back to Back blockbusters from Prabhas

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏ டி’. இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களைக் கவரும் வகையிலும் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை வித்தியாசமாக வழங்குவதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இத்திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப்படமாக இப்படம் அமைந்திருக்கிறது. பிரம்மாண்ட படங்களின் நாயகன் பிரபாஸ் நடித்திருந்ததாலேயே அவரது ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இது போன்ற சிறப்பம்சங்கள் உள்ளதால் ‘கல்கி 2898 ஏடி’ திரையரங்கில் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஓப்பனிங்க் படமாக மாறியிருக்கிறது. இத்திரைப்படத்தை ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடி வருவதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

‘கல்கி படத்தில் நடிக்கச் சம்மதிக்க ஒரு வருடம் எடுத்துக் கொண்டது ஏன்?’ - கமல்ஹாசன் தகவல்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Kamal Haasan informs Why did he take a year to act in Kalki?

தெலுங்கு முன்னணி நடிகரான பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம், ‘கல்கி 2898 ஏ டி’. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த டிரைலரில், வயதான தோற்றத்தில் ஏற்று நடித்திருக்கும் கமல்ஹாசன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் வருகிற ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வெளிவர இருக்கிறது. 

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் புரோமோசனுக்காக படக்குழு பல இடங்களில்  பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் இப்படத்தின் படக்குழு புரோமோசன் பணியில் ஈடுபட்டது. அதில், பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, கமல்ஹாசனின் தேர்வு குறித்து தலைப்பு எழுந்தது. அதற்கு பிரபாஸ், ‘இந்தப் படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்கவும், அவரிடம் சம்மதம் வாங்கவும் ஒரு வருட காலமாக காத்திருந்தோம். ஒரு கட்டத்தில், என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள், என்னை விட்டுவிடுங்கள் என்று கமல்ஹாசன் நினைத்திருப்பார்’ என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், “இது தொந்தரவு பற்றிய கேள்வி அல்ல. அப்போது, சுயசந்தேகத்தை தந்தது. இந்தப் படத்தில் அமிதாப் இதைச் செய்கிறார், பிரபாஸ் அதைச் செய்கிறார். ஆனால், நான் என்ன செய்ய போகிறேன். அதுதான் காரணம். நான் இதற்கு முன்பு வில்லனாக நடித்ததில்லை. அப்படி வில்லனாக நடித்திருந்தாலும், மனநோயாளி கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறேன். ஆனால், இந்தப் படம் முற்றிலும் வேறு” என்று கூறினார்.