பல வருடங்களுக்குப் பிறகு இந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு திருவிழாதான். வந்திருக்கும் ஆறு படங்களில் 'அடங்க மறு'வும் ஒன்று. குரூப்பில் டாப் யாரென்பது சில தினங்களில் தெரியும்.
ஒரு நடிகருக்கு ஒரு பெரிய வெற்றிப்படம் அமைந்தால் அதன் தாக்கம் சில ஆண்டுகளுக்குத் தொடரும். 'தனி ஒருவன்' ஜெயம் ரவிக்கு அமைந்த தரமான பெரிய வெற்றிப்படம். அதன் தாக்கம் இன்றுவரை ஏதோ ஒரு வகையில் அவரது படங்களில் தொடருகிறது. பாத்திரப்படைப்பிலோ, வசனங்களிலோ, திரைக்கதை வடிவிலோ இன்னும் அவ்வப்போது 'தனி ஒருவனா'க மாறுகிறார் ஜெயம் ரவி. சமூகத்தில் பணத்தால் கொளுத்தவர்கள் செய்யும் குற்றங்களை தட்டிக் கேட்டு அடித்து நொறுக்கும் தனி ஒருவனின் கதைதான் 'அடங்க மறு'. இயக்குனர் கார்த்திக் தங்கவேலின் முதல் படம்.
புதிதாகக் காவல்துறையில் சேர்ந்துள்ள எஸ்.ஐ சுபாஷாக ஜெயம் ரவி. IPSக்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே மேலதிகாரிகளின் அலட்சியத்தை எதிர்க்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் தன்னால் வேறு ஒரு ரூட்டில் வேலை பார்ப்பவர். ஒரு இளம் பெண்ணின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்த, மேலதிகாரிகள் கைவிட்ட வழக்கை தான் புலனாய்வு செய்கிறார் ஜெயம் ரவி. அதிகாரம், பணம் கொடுக்கும் திமிரில் எளிய பெண்களை வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து ரசிக்கும் 'எங்க அப்பா யார் தெரியுமா?' வகை பணக்கார மகன்களைப் பிடித்து நடவடிக்கை எடுக்கிறார். அதனால் மிகப்பெரும் இழப்பை சந்திக்கிறார். குற்றவாளிகளும் வெளியே வந்துவிட, பெரும் இழப்பை சந்தித்த ஜெயம் ரவி யாருக்கும் அடங்காமல் அவர்களை எப்படி தண்டிக்கிறார் என்பதுதான் கதை.
பல தமிழ்ப் படங்களில் பார்த்த கதைதான் என்றாலும் 'அடங்க மறு' தனித்து நிற்பது பல சின்னச் சின்ன சுவாரஸ்யங்களால். மகளின் திடீர் மரணத்தை தந்தையிடம் தெரிவிக்கப் போகும் காட்சி, போலீசை அவமதித்த அமைச்சர் மகனை யாருக்கும் தெரியாமல் தண்டிக்கும் காட்சி, உங்க அப்பா கையாலையே உங்களை கொலை செய்யவைப்பேன் என சவால் விட்டு செயல்படுத்துவது என பல விதங்களில் நிகழ் கால நிகழ்வுகள், டெக்னாலஜி அனைத்தையும் முடிந்த அளவு பயன்படுத்தி விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் தங்கவேல். காதல், பாடல்கள் என நேரத்தை வீணாக்காமல் நேரடியாகக் கதையில் படம் பயணிப்பது நல்ல விஷயம். தமிழ் சினிமாவில் ஹேக்கிங் காட்சிகளுக்கு ஒரு தணிக்கை வைத்தால் நன்றாக இருக்கும். போகிற போக்கில் வழியில் இருக்கும் கேமராக்கள், அடுத்தவர் வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டர்கள் என எதை வேண்டுமானாலும் ஹேக் செய்து ஹீரோவின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது 'கொஞ்சம் ஓவராத்தான் போறாங்களோ' என்று எண்ண வைக்கிறது. இவ்வளவு ஸ்ட்ராங்கான ஹீரோவுக்கெதிராக வீக்கான வில்லன் பாத்திரங்கள்! நடிகர் பாப் ஆண்டனி, 'பூவிழி வாசலிலே' காலத்தில் எவ்வளவு டெரரான வில்லன்? அவரை இவ்வளவு காமெடியாகவா காட்டுவது? வில்லன்கள் எதுவும் செய்யாமல் இருக்க, ஜெயம் ரவியின் ப்ரெயின் பிளான் மட்டும் படத்தைக் காப்பாற்றுகிறது. பெரும்பாலும் விறுவிறுவென செல்லும் திரைக்கதையில் ஆங்காங்கே லாஜிக் ஓட்டைகள்...
குற்றங்களைப் பார்க்கும்போது கோபம், அடித்து நொறுக்கும் ஆவேசம், குடும்பத்துடன் பாசம், இடையில் அவ்வப்போது காதல் என அனைத்திலும் ஜெயம் ரவி செம ஃபிட். நாயகி ராஷி கண்ணா தேவையில்லாமல் வந்தாலும் வரும்போது அழகாய் ஈர்க்கிறார். பொன்வண்ணன், சம்பத், முனீஸ்காந்த், மைம் கோபி, பூர்ணா, பாப் ஆண்டனி என வரிசை கட்டும் நடிகர் கூட்டத்தில் மனதில் நிற்பவர் அழகம்பெருமாள்தான். மற்றவர்களும் அவரவர் பங்கை சரியாகச் செய்துள்ளனர்.
சாம்.சி.எஸ் பின்னணி இசை அழுத்தமாக பரபரப்பாக இருக்கிறது. படத்தின் குறைகளை மறையச் செய்கிறது. சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு இருள், ஒளி இரண்டிலும் விறுவிறுவென வேலை செய்துள்ளது. ரூபனின் படத்தொகுப்பு முதல் பாதியை மெதுவாகவும் இரண்டாம் பாதியை பரபரப்பாகவும் அணுகியுள்ளது.
பல சுவாரஸ்யங்கள்... பல லாஜிக் ஓட்டைகள்... மொத்தத்தில் ஒரு பொழுதுபோக்கான படம் அடங்க மறு!