அசாம் மாநிலத்தில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் அவ்வப்போது இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், அசாமில் மாட்டிறைச்சி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாக ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “அஸ்ஸாமில், எந்த உணவகத்திலும், ஹோட்டலிலும் மாட்டிறைச்சி வழங்கப்பட மாட்டாது என்றும், எந்த பொது நிகழ்ச்சிகள் அல்லது பொது இடங்களிலும் மாட்டிறைச்சி வழங்கப்படாது என்றும் முடிவு செய்துள்ளோம். எனவே இன்று முதல் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி சமைக்கவும், பரிமாறவும் அனுமதி இல்லை.
கோவில்களில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் மாட்டிறைச்சி பரிமாறவோ, சாப்பிடவோ கூடாது என்ற விதி முன்பு இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் அதை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தியுள்ளோம். அதை நீங்கள் எந்த சமூக இடத்திலும், பொது நிகழ்ச்சிகளும், ஹோட்டல் அல்லது உணவகத்திலும் சாப்பிட முடியாது” என்று கூறினார்.
முன்னதாக, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சமகுரியில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக மாட்டிறைச்சியை விநியோகித்ததாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்திருந்தது. அந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஹிமந்த பிஸ்வா, ‘அசாமில் மாட்டிறைச்சியைத் தடை செய்யக் கோரி மாநில காங்கிரஸ் தலைவர் பூபன் குமார் போரா கடிதம் எழுதினால், அம்மாநிலத்தில் மாட்டிறைச்சியைத் தடை செய்யத் தயார்’ என்று கூறிய பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.