ராணா ப்ரொடக்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லத்தி'. இப்படம் வருகிற 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று (12.12.2022) நடைபெற்றது. விழாவில் டிஜிபி ஜாங்கித், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
அப்போது விஷால் பேசுகையில், "இது எனக்கு வழக்கமாக நடக்கும் விஷயம். சால்வையும், மலர்க்கொத்தும் சிறிது நேரம் மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வீண் விரய செலவு. அந்த பணத்தை இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவிற்கு கொடுப்பது வழக்கம். இன்றும் அதைத்தான் செய்திருக்கிறேன். லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்குவதைக் கண்டு பொறாமையாக இருக்கிறது. விஜய்யை வைத்து படம் இயக்கணும்னு நீண்ட நாள் ஆசை. விரைவில் விஜய்யிடம் கதை சொல்லி இயக்குவேன்.
வினோத் 8 நாட்களில் சம்மதம் வாங்கிவிட்டார். முதலில், கதை கூறும் முன்பு உங்களிடம் ஒன்று கூற வேண்டும் என்றார்; சொல்லுங்கள் என்றேன். நீங்கள் 8 வயது பையனுக்கு அப்பா என்றார். அதெல்லாம் சரி நீங்கள் முதலில் கதையைக் கூறுங்கள் என்றேன். கதை கேட்டு முடித்ததும் நான் என்ன உணர்ந்தேனோ அதைப் பார்ப்பவர்களும் உணர்வார்கள் என்று நம்புகிறேன். படப்பிடிப்பில் வேண்டுமென்றே அடி வாங்கவில்லை. சரியாக கட்டி முடிக்காத கட்டிடத்தில் நடக்கக்கூடிய சண்டைக் காட்சிகள். 80 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அடிப்படுவதை தவிர்க்க முடியவில்லை. பீட்டர் ஹெயினின் பணியைக் கண்டு வியந்தேன்.
எனக்கு ஒரு பழக்கம் இருக்கு. கதையை ஒருத்தர் பரிந்துரைத்து, அந்தக் கதை நன்றாக இல்லை என்றால் அவரைத் தனியாக ரூமுக்குள்ளே கூப்பிட்டு கதவை மூடி நொங்கு நொங்குன்னு நொங்கிடுவேன். அதேபோல் கதை நன்றாக இருந்தால் ரூமுக்குள் அழைத்துச் சென்று கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்துவேன். ஒரு தயாரிப்பாளர் இறங்கி வேலை செய்தால் அதைவிட சௌகரியான விஷயம் நடிகருக்கு அமையாது. அப்படி ஒரு தயாரிப்பாளர்களாக ரமணாவும், நந்தாவும் இருந்தார்கள். இப்படியொரு தயாரிப்பாளர்கள் இருந்தால் 4வது மாடியில் இல்லை, 8வது மாடியில் இருந்தும் கூட குதிக்கலாம். நான் சாதாரணமாகவே திருட்டு வீடியோ இருந்தால் இறங்கி கேள்வி கேட்பேன். இப்போது லத்தி வேறு கையில் இருக்கிறது. ஆகையால், அனைவரும் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பாருங்கள்" என்றார். இதனிடையே ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து புரட்சி தளபதி வாழ்க என்று சொல்ல, "வேண்டாம்... நான் தளபதி அல்ல; புரட்சி தளபதியும் அல்ல; என் பெயர் விஷால் அவ்வளவுதான்..." என்றார் விஷால்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், "ஜாங்கித் சாருடைய மிகப்பெரிய ரசிகன். தீரன் படத்திலிருந்தே அவரை மிகவும் பிடிக்கும். இன்று சந்திக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. பொதுவாக எனக்கு ஆக்சஷன் படங்கள்தான் பிடிக்கும். முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்துவிடுவேன். அதேபோன்ற ஆக்சஷன் படத்தின் டிரைலர் வெளியிட அழைத்ததற்கு நன்றி. இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது வினோத்திற்கு முதல் படம் போலத் தெரியவில்லை. இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்" என்றார்.