புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்வபம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பலரும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெட்ண்ட் செய்து வருகின்றனர். பல பிரபலங்களும் இதுகுறித்து தங்களின் கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? மற்றும் ஒரு குழந்தை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட உலகில் தான் நாம் வாழந்து கொண்டிருக்கிறோம் என்றால் நாம் அனைவரும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சாகத் தகுதியுடையவர்கள் தான். அது தான் மனிதர்களாகிய நமக்குக் கடவுளின் பதிலாகவும் இருக்கும். நாம் அனைவரும் வாழத்தகுதி அற்றவர்கள்.” என்று பதிவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி. அதில், “7 வயதுச் சிறுமியை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். நமது நீதி இதற்கு என்ன செய்கிறது. கைது செய்கிறார்கள், பின்பு எதுவுமே நடப்பதில்லை. ஆகையால், பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை என்ற சட்டத்தை தமிழக முதல்வர் கொண்டுவர வேண்டும். அந்தப் பயம் இருந்தால் மட்டுமே இவர்கள் எல்லாம் நிறுத்துவார்கள்.
இப்போதைக்குக் கைது செய்யப்பட்டு, பின்பு ஜெயிலிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள். திரும்பவும் அதே தவறைச் செய்கிறார்கள். ஆகையால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகள் மற்றும் பெண்கள் சார்பாகவும் இதைக் கேட்டுக் கொள்கிறேன். முதல் முறை பாலியல் வன்கொடுமை செய்தாலே மரண தண்டனை வேண்டும். அதேபோல் பாலியல் வன்கொடுமை என்றாலே மரண தண்டனை என்ற நிலை வர வேண்டும்
தமிழக முதல்வரே, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அனைத்துக் குழந்தைகள், பெண்களின் சார்பாக, தயவுசெய்து உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். உத்தரவைப் பிறப்பியுங்கள். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையைச் சகிக்காத முதல் மாநிலமாக உதாரணமாக இருங்கள். வேண்டிக் கேட்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.