சென்னை வானொலி நிலையத்தின் முதன்மை அலைவரிசையான சென்னை ஏ மத்திய அலைவரிசை, பண்பலை வரிசையான ரெயின்போ ஆகியவற்றின் சேவைகள் ஒன்றிணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதன்படி அலைவரிசைகளின் நிகழ்ச்சிகள் முறையே 50% குறைக்கப்பட்டுள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் அதிகாரப்பூர்வ வானொலியாக உள்ள அகில இந்திய வானொலி (All India Radio) யின் பெயரை இனிமேல் 'ஆகாஷ்வாணி' என்று மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வானொலியை நிர்வகிக்கும் பிரசார் பாரதி அமைப்பின் தலைமை இயக்குநர் உத்தரவிட்டிருந்தார். எல்லா மொழிகளிலும் இதே பாணியையே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படி இரு வானொலிச் சேவைகளும் இணைக்கப்பட்டு ஆகாசவாணி ஒருங்கிணைந்த சேவை என்ற பெயரில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இது அப்பட்டமான இந்தித் திணிப்பாகும் என அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அகில இந்திய வானொலியின் தமிழ் நிலையங்கள் பல கலைஞர்கள் தமிழ் விளைத்த கழனிகளாகும்; கலைக்கும் அறிவுக்குமான ஒலி நூலகங்களாகும். அங்கே தமிழ் மொழி நிகழ்ச்சிகள் குறைந்து இந்தி ஆதிக்கம் தலைதூக்குவது, மீன்கள் துள்ளிய குளத்தில் பாம்பு தலை தூக்குவது போன்றதாகும். கண்டிக்கிறோம். இந்தி அகலாவிடில் அல்லது குறையாவிடில், தமிழ் உணர்வாளர்கள் வானொலி வாசலில் களமிறங்குவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அகில இந்திய வானொலியின்
தமிழ் நிலையங்கள்
பல கலைஞர்கள்
தமிழ் விளைத்த கழனிகளாகும்;
கலைக்கும் அறிவுக்குமான
ஒலி நூலகங்களாகும்
அங்கே தமிழ் மொழி
நிகழ்ச்சிகள் குறைந்து
இந்தி ஆதிக்கம் தலைதூக்குவது
மீன்கள் துள்ளிய குளத்தில்
பாம்பு தலை தூக்குவது போன்றதாகும்
கண்டிக்கிறோம்
இந்தி அகலாவிடில்…— வைரமுத்து (@Vairamuthu) July 26, 2023