'டன்கிரிக்' படத்தைத் தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் எடுத்திருக்கும் படம் 'டெனட்'. இந்த படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்த படத்தின் கரு டைம் ட்ராவல் இல்லை. ஆனால், டைம் இன்வர்ஸ் என்ற அறிவியல் தியேரியை வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக படத்தின் டீஸர் வெளியானபோது, 'டெனட்' படம் உலகம் முழுவதும் ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே கரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் புது சினிமாக்கள் திரையிடப்படாமல் இருக்கின்றன. இதன் காரணமாக இந்த மூன்று மாதங்களில் வெளியிடுவதாகச் சொல்லப்பட்ட திரைப்படங்களில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளன. ஆனால், 'டெனட்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படாமலே இருந்தது. இதனால் படம் ஜூலை மாதத்தில் முன்பு அறிவிக்கப்பட்ட அதே ரிலீஸ் தேதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது ஜூலை 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல நாடுகளில் கரோனா அச்சுறுத்தல் முடிவு பெறாததால் மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போதைய சூழ்நிலையிலும் உலகம் முழுக்க பல நாடுகளில் கரோனா பாதிப்பு குறையாமல் இருப்பதால் திரையரங்குகள் திறக்கப்பட்டு நாடுகளில் மட்டும் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவிலும் முதலில் டெனட் படம் ரிலீஸாகாது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் டெனட் படக்குழு புது ட்ரைலரை வெளியிட்டது. அதில் செப்டம்பர் 3ஆம் தேதி ரிலீஸ், எங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் ரிலீஸ் என்று தெரிவித்தது.
அதற்கு முன்னதாக இன்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தவிர்த்து 70 நாடுகளில் டெனட் படம் ரிலீஸாகியுள்ளது. அமெரிக்காவில் வருகிற செப்டம்பர் 3ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது படக்குழு. பல நாடுகளில் கிறிஸ்டபர் நோலனின் இந்த பிரம்மாண்ட படம் குழப்பமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. பல நாடுகளில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் படக்குழுவின் நம்பிக்கையை போல மக்களை தியேட்டர் பக்கம் கொண்டு வருகிறது டெனட்.