இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார், சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா, சத்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய சத்யராஜ், "நான் சென்னைக்கு வந்து 45 வருஷமாச்சு, அந்த 45 வருஷமா சூர்யாவை தெரியும். ஆனால், சூர்யா உடன் நடிப்பதற்கு முதன்முதலாக வாய்ப்பளித்த பாண்டிராஜ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பிரியங்கா அருள் மோகன் சூர்யாவுக்கு ’நடிப்பின் நாயகன்’ என்று பட்டம் கொடுத்துருந்தாங்க. நானும் கதாநாயகனாக 100 படத்திற்கு மேல நடிச்சுட்டேன். ஆனால், இதுவரைக்கும் ஒரு நடிகையும் எனக்கு இப்படி ஒரு பட்டம் கொடுத்தது இல்ல. சரி, சூர்யா மாதிரி அழகான நாயகனை பார்த்தால் எல்லோருக்கும் இப்படி பட்டம் கொடுக்கலாம்னுதான் தோணும். இதே போன்று ரசிகர்கள் ’வள்ளல் சூர்யா’ ன்னு ஒரு பட்டம் கொடுத்துருக்காங்க. சூர்யா படத்தில் மட்டும் ஹீரோ இல்லைங்க, நிஜத்திலும் ஹீரோ தான். சினிமால யாரு வேணாலும் வீரமா வசனம் பேசிடலாம். தைரியமாக இருக்கலாம், ஆனா நிஜத்துல டேய்னு சொன்னா பயந்துருவாங்க. ஆனால் சூர்யா அப்படி இல்ல. 'சூரரை போற்று', 'ஜெய் பீம்' மாதிரி படங்களில் நடிக்கவே தைரியம் வேணும். இதே போன்று சூர்யாவின் ரசிகர்களும் தைரியமாக நடந்துகொள்ள வேண்டும். அவரை முழுவதுமாக பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மீண்டும் வில்லனாக நடிக்க விரும்பம் தெரிவித்த சத்யராஜ், "சரியான வில்லன் கதாபாத்திரம் அமைந்தால் மீண்டும் வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறேன். ஏன்னா ஒரு தலைமுறைக்கே வில்லன் சத்யராஜ் யாருன்னே தெரியாம போயிருச்சு. இப்போல்லாம் நல்ல அப்பா கதாபாத்திரத்தில் நடித்து போரடிச்சு போயிடுச்சு. இதை ஏன் இங்க சொல்றேன்னா முதன்முதலில் நடிக்கணும்ங்கிற ஆசையை சிவகுமார் அண்ணன் கிட்ட தான் சொன்னேன், அதே போல இப்போ மீண்டும் வில்லனாக நடிக்கணுன்ற ஆசையை சூர்யா முன்னாடி சொல்றேன். அந்த கதாபாத்திரம் அமைதிப்படை, காக்கிச்சட்டை, இருபத்தி நான்கு மணி நேரம், நூறாவது நாள் மற்றும் மிஸ்டர் பாரத் படங்களில் இடம் பெற்ற கதாபாத்திரங்களை விட சிறப்பாக இருக்க வேண்டும்" எனக் கூறினார்.