Skip to main content

கிரிவலம் வந்து சந்தானம் சாமி தரிசனம்

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

santhanam visited palani murugan temple

 

'கிக்' படத்தில் நடித்து முடித்துள்ள சந்தானம் தற்போது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 'டிக்கிலோனா' படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்குகிறார். கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிக்க பீரியட் காமெடி ட்ராமா ஜானரில் படம் உருவாகி வருகிறது. பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது பழனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. 

 

இந்த நிலையில் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார் சந்தானம். அங்கு மூன்று கிலோமீட்டர் தூரம் உள்ள கிரிவலப் பாதையில் வலம் வந்தார். பின்னர் மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக மலை மீது சென்று தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

 

பழனி முருகன் கோயிலுக்கு சமீபத்தில் குடமுழுக்கு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து திரை பிரபலங்கள் வருகை தருகின்றனர். அண்மையில் சமந்தா, இயக்குநர் பிரேம் குமார் மற்றும் திருமண தம்பதியான கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டைமிங் காமெடி கைகொடுத்ததா? - 'வடக்குப்பட்டி ராமசாமி' விமர்சனம்!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
vadakkupatti ramasamy movie review

டிக்கிலோனா படம் தந்த வெற்றியின் உற்சாகத்தில் அதே டீம் உடன் இணைந்து மீண்டும் ஒரு நகைச்சுவை படத்தை கொடுத்திருக்கிறார் நடிகர் சந்தானம். இந்தப் படம் இந்த டீமின் முந்தைய படத்தை போல் வரவேற்பை பெற்றதா, இல்லையா?

1970களில் வடக்குப்பட்டி என்னும் கிராமத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாத ராமசாமி என்ற சந்தானம் அந்த கிராமத்தில் இருக்கும் மக்களை தன் சொந்த இடத்தில் கட்டிய கோயில் மூலம் மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி கல்லா கட்டுகிறார். இதைக் கண்ட கிராமத்தின் தாசில்தார் 'ஜெய் பீம்' புகழ் தமிழ் இவர்கள் அடிக்கின்ற கொள்ளையில் தனக்கும் பங்கு வேண்டும் என கேட்கிறார். இதனால் சந்தானத்திற்கும் தமிழுக்கும் மோதல் ஏற்படுகிறது. இவர்களுக்குள் இருக்கும் ஈகோ மோதலால் அந்த கோயில் அரசாங்கத்தால் மூடி சீல் வைக்கப்படுகிறது. சந்தானத்துடன் இணைந்து அந்த ஊர் மக்கள் ஒற்றுமையாக இருந்து சண்டையிட்டுக் கொள்ளாமல் இருந்தால் கோயிலை திறந்து விடுவோம் என அரசாங்கம் முடிவு எடுக்கிறது. இதையடுத்து மீண்டும் அந்த கோவிலை திறக்க சந்தானம் அண்ட் கோ என்னவெல்லாம் செய்கிறது? அதை தடுக்க முயற்சிக்கும் தமிழ் அண்ட் கோ வின் நிலை என்ன ஆனது? என்பதை இப்படத்தின் மீதி கதை.

டிக்கிலோனா படம் பெற்ற வரவேற்பை அப்படியே கண்டினியூ செய்து இந்தப் படத்திலும் அதே வரவேற்பை பெரும்படி ஒரு நிறைவான நகைச்சுவை படத்தைக் கொடுத்து கைதட்டல் பெற்று இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி. கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருத்தன் அந்த கடவுளை வைத்துக் கொண்டு எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான் என்ற ஒற்றை வரி கதையை வைத்துக் கொண்டு மிகச் சிறப்பான நகைச்சுவையை திரைக்கதை மூலம் பார்ப்பவர்களுக்கு கிச்சுகிச்சு மூட்டி படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி. முதல் பாதி சற்றே மெதுவாக ஆரம்பித்து போகப்போக வேகம் எடுத்து இரண்டாம் பாதி ஜெட் வேகத்தில் பறந்து பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து நிறைவான படம் பார்த்த உணர்வை கொடுத்துள்ளது வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம். ஒரு சந்தானம் படத்தில் நாம் என்னவெல்லாம் எதிர்பார்ப்போமோ அதை எல்லாம் இந்த படம் மீண்டும் ஒருமுறை நிறைவாக கொடுத்து ரசிக்க வைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது.

வழக்கம்போல் நாயகன் சந்தானம் தனது ட்ரேட் மார்க் ஆன்லைன் பஞ்ச் வசனங்களால் ரசிகர்களுக்கு காமெடி விருந்து கொடுத்துள்ளார். இவரது அதிரிபுதிரியான வசன உச்சரிப்பு, காமெடி டைமிங்ஸ் ஆகியவை படத்திற்கு தூணாக அமைந்திருக்கிறது. வழக்கமான நாயகியாக வரும் மேகா ஆகாஷ் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். சந்தானம் படம் என்றாலே மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கும். அதேபோல் லொள்ளு சபா டீமும் உடன் இருந்து கலக்குவார்கள். அவை அப்படியே இந்தப் படத்தில் பிரதிபலித்து படத்தை வேறு ஒரு காலத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ரவி மரியா, ஜான்விஜய், சேசு, மாறன், கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், தண்டோரா போடும் நபர், இட் இஸ் பிரசாந்த், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் கொண்ட நட்சத்திர பட்டாளம் அவரவருக்கான ஸ்பெஷலில் புகுந்து விளையாடி பார்ப்பவர்களை கிச்சு கிச்சு மூட்டி உள்ளனர். இவர்களின் நேர்த்தியான காமெடி டைமிங்குகளும் ஆன்லைன் பஞ்ச் வசனங்களும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக புல் சுரேஷின் அசிஸ்டன்ட்களாக வரும் நடிகர்கள் அனைவரும் நகைச்சுவையில் பின்னி பெடல் எடுத்திருக்கின்றனர். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரும் மூத்த நடிகர் நிழல்கள் ரவி அவர் பங்குக்கு காமெடியில் அதகலம் செய்து இருக்கிறார். 

தீபக்கின் ஒளிப்பதிவில் வடக்குப்பட்டி கிராமமும் அதை சுற்றி இருக்கும் மலை முகடுகளும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக படம் 1970களில் நடப்பதால் எங்குமே மொபைல் டவர்கள் தென்படாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டு அதே சமயம் நேர்த்தியான காட்சி அமைப்புகளையும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். சான் ரோல்டன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை நகைச்சுவைக்கு சிறப்பாக உதவி புரிந்துள்ளது.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் கடவுள் நம்பிக்கை இருக்கும் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார். அதேபோல் அவருக்கு ஏற்படும் அச்சுறுத்தலை சமாளிக்கும் விதமாக மெட்ராஸ் ஐ நோயை வைத்து அவர் செய்யும் சேட்டைகளை சிறப்பான திரைக்கதை மூலம் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக இந்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தை கொடுத்து ரசிகர்களை காமெடியில் மீண்டும் ஒருமுறை திக்கு முக்காட செய்து இருக்கின்றனர்.

வடக்குப்பட்டி ராமசாமி - சிரிப்புக்கு கேரன்டி!

Next Story

“நீங்க கோயிலுக்குள்ள தான் சண்டியர்; ஆனா வெளிய நாங்கதான்” - மிரட்டிய காவலர் 

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

police who threatened the Palani Devasthanam employee

 

உலக பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கக்கூடியது பழனி முருகன் கோவில். இந்த பிரம்மாண்ட கோவிலுக்கு, சாதாரண நாட்களிலேயே வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், முக்கியத்துவம் வாய்ந்த பெருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.  அந்த வகையில், பழனி நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பிரபு. இவர்.. பழனி தாராபுரம் சாலையில் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். 

 

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலர் பிரபு அதே பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி.. அதன் ஆவணங்களை சரிபார்த்து வந்துள்ளார். மேலும், விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்திருந்தார். இதற்கிடையில், அந்த வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துகொண்டிருந்தார்.  அப்போது, அந்த வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள் என காவலர் பிரபு கேட்டுள்ளார். அதற்கு, அந்த வாகன ஒட்டி தான் பழனி கோவிலில் ஊழியராக உள்ளதாக கூறியுள்ளார். 

 

ஒருகணம், இதை கேட்டு விரக்தியடைந்த காவலர் பிரபு, "ஓ கோவில்ல வேலை செய்றியா? இந்த தேவஸ்தானம் போர்டுலாம் ஓவரா பண்ணிட்டு இருக்காங்க. ஒரு போலீஸ் கோவிலுக்குள்ள போக முடியல. யூனிபார்ம்ல போனா கூட ஐடி கார்டு கேக்குறாங்க" என கடிந்து கொட்டினார்.

 

அதைத்தொடர்ந்து, காவலர் பிரபு பேசும்போது, "அந்த கோயில்ல இருக்கான்ல ஒரு ஆணையாளர்.. அவன் ஐபிஎஸ் முடிச்சானா இல்ல ஐஏஎஸ் முடிச்சானா? ஏன் அவ்ளோ பண்றானுங்க" என அவர்களை ஒருமையிலும் தகாத வார்த்தையிலும் திட்டித் தீர்த்தார். அதுமட்டுமின்றி, "உங்க பவர் எல்லாம் கேட்டுக்குள்ள தான். நீங்க கோயிலுக்குள்ள தான் சண்டியர்.. ஆனா.. வெளிய நாங்க தான் சண்டியர்.. வெளிய சிக்கினா கண்டிப்பா விடமாட்டேன். நிச்சயமா கேஸ் போடுவேன்" என மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். 

 

அப்போது, இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த கோயில் ஊழியர், "காவலர் பிரபு பேசுவதை தனது செல்போனில் மறைத்து வைத்துக்கொண்டு முழுவதுமாக வீடியோ எடுத்துள்ளார். அதன்பிறகு, இந்த வீடீயோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.  இத்தகைய சூழலில், இந்த வீடியோ வைரலான நிலையில்.. அது கோயில் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இதில் கோயில் ஆணையரை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுக்கும் காவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 

தற்போது, கோயில் ஊழியரை தரக்குறைவாக பேசிய காவலரின் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.